வியாழன், ஏப்ரல் 08, 2004

மழை-3, துளி-3

--புலியூர் முருகேசன்

1.

அப்போதெல்லாம் சாயங்காலம்-

டிப்பி டிப்பி டாஸ் ; வாட் கலர் ஈஸ் என
வர்ண மயமாய் விளையாடுவோம்.

புழுதி பறக்க புளியங்கொட்டைகளை
ஓடு விட்டெறிந்து செதுக்கி விளையாடுவோம்.

பளிங்கு மாதிரி கண்ணுள்ள தட்டானின் வாலில்
நூல் கட்டி பறக்கும் திசையில் ஓடி விளையாடுவோம்

இச்சா இனியா, காயா, பழமா எனக்கேட்டு
கண் திறக்காமல் கரம் தாண்டி விளையாடுவோம்.

இடதுகை நடுவிரலில் கவண்மாதிரி கோலிக்குண்டு
பொருத்தி குறிபார்த்து அடித்து விளையாடுவோம்.

மழைநின்ற மாலை நேரத்திலெல்லாம்
கொட்டாங்குச்சியில் ஈரமண்ணிட்டு
இட்லி கவிழ்த்து விளையாடுவோம்.

அப்பொழுதெல்லாம் எந்த விளையாட்டிலும்
நீயும் இல்லை -
உன் ஞாபகமும் இல்லை.

இப்போது
இம்சையாய்
உன் ஞாபகங்கள் மட்டும் -

2.

இமை கழுவாமல் பார்க்கின்ற
அதிகாலை நதிப்பரப்பும்
நீள்கூந்தல் அலைகின்ற
எந்தப் பெண் முதுகும்
புழுதி கிளம்ப அடிக்கின்ற
கோடை மழைத்துளியும்
நடுநிசியில் குழந்தைபோல்
சிமிட்டல் காட்டும் விண்மீனும்,
மிருதுவான அதிர்வுக் குரலில்
சுவர்ணலதா பாடுவதும்
உன்னை எனக்கு
நினைக்கச் செய்பவை.

உற்றுப் பார்த்து சிரித்தபடி
ஒதுங்கிப் போகும் பைத்தியமும்
தலைகுனிந்து நிற்கின்ற
காளியம்மன் கோவில் பூதமும்
எந்நேரமும் காலிப் பாத்திரத்துடன்
அலைகின்ற பிச்சைக்காரனும்,
ஒன்றுக்கும் உதவாமல்
செடிசாய்க்கும் புயற்காற்றும்
சுடுவானில் வியர்வை சொட்ட
வருகின்ற சூரியனும்
என்னை உனக்கு
நினைக்கச் செய்வதேயில்லையா?

3.

அன்றைய பகலின்
ஒவ்வொரு அரிச்சலிலும்
வகைதெரியாமல்
சிக்கிக் கொள்ளும்
தலைப் பிரட்டைகளைப் போல-

எடுத்தெறிய முடியாமல்
மனசெங்கும் நழுவிஓடி
கலங்கடிக்கும்
உன் ஞாபகங்கள்.

துண்டில் திமிறித் தாவும்
மீன்களைப் பொறுக்கித் தனியே
பாத்திரத்தில் சேகரித்தாலும்

குழம்பில் எப்படியோ
வந்து விடுகிறது
ஒன்றிரண்டு தலைப்பிரட்டை

கொன்று எரிக்க முடியாத
உன் கொழ கொழவென்னும்
நேசிப்பைப் போல் -

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக