புதன், ஏப்ரல் 07, 2004

மழை-2 துளி- 18

மரமண்டை -சகாரா

இந்த வழியாப் போம்போதெல்லாம்
எதையோ பறிகுடுத்தாப்ல இருக்கு.
ஆயிர ரூவா பிச்சக் காசுக்கு
இங்கிருந்த ரெண்டு புளியமரத்தையும்
வெட்டிட்டானுங்க போன வருஷம்.

குட்லான், மொண்டி, சின்னக்காள, ராசு
கேனரங்கன், நான் எல்லாரும்
ஆடுமாடு ஓட்டியாந்து
நெழலுக்கு ஒதுங்கினது

மரத்துக்கு மரம் தாவி - சந்தோசமா
கொரங்கு வெளாட்டு வெளாண்டது
புளியந்தாவப் புடுச்சு ஊஞ்சலாடுனது
பூப்பறிக்க உச்சிபோய்
புடிநழுவி உழுந்தும்
ஒன்னும் ஆகாதது
புளியங்கா சுட்டுத்த் தின்னது
பழுத்த புளிய உலுக்கிப் போனது
பேய் புடுச்சவுங்களக் கொண்டாந்து
பச்ச மரத்துல ஆணி அடுச்சு
பேய எறக்குனது
எல்லாம் இங்கதான்

அத்தன பேயும் பாவம்
இருக்க எடமில்லாம
எங்க தவிக்குதுங்களோ
இந்த வழியாப் போம்போதெல்லாம்
இதையே சுத்திச் சுத்தி வருது

எம்
பேய் மனசு.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக