புதன், ஏப்ரல் 07, 2004

மழை-2 துளி-3


குஜராத் பூகம்பம் - சித்ரா விசுவநாதன் (chitravisu@hotmail.com)


மண்ணின் பசிக்கு
மனிதனே
உண்வாகிப்போன
உக்கிரம் நடந்தது.

பஞ்சாய்ப் போனாலும்
பாசமாய்க் கைபற்றி
பிஞ்சு விரல் பிடித்து
நடக்கப் பழக்கிய
அருமைப் பாட்டன்.

பார்த்துப் பார்த்துப்
பொங்கி வைத்து
பதமாய் சோறூட்டி
நலம் காத்த
ஆசைத் தாய்.

விழுதுகள் அனைத்தையும்
ஒன்றாய்ச் சேர்த்து
வேராய்த் தாங்கி
வாழ்க்கை தந்த
அன்புத் தந்தை.

அத்தனை சொந்தமும்
மொத்தமாய் இழ்ந்தும்
இழப்பின் தாக்கம்
இன்னமும் புரியாமல்-

பாலுக்காக அழுது நிற்கும்
பச்சைக் குழந்தை.

என் வீடு-
என் குடும்பம்-
என் சொந்தம்-
என் சுற்றம்-
என் வாழ்வின் மிச்சம்-
ஏதேனும் ஒன்றாவது
இன்னும் இருக்கிறதா - என்று
ஏங்கித் தவிக்கும்
ஏக்க விழிகளுடன்
எத்தனை சகோதரர்கள்.

சின்னதாய் விழுந்து - காலில்
சிராய்த்துப் போனாலும்
தவியாய்த் தவித்து தான்
எண்ணை தடவி விடும்
தன் மகனின்
கால்கள் எங்கேனும்
கண்டு பிடிக்க முடிகிறதா?
இன்னமும் தேடும்
எத்தனை சகோதரிகள்.

அள்ளித் திரட்டிய
கைகளையும் கால்களையும்
தள்ளு வண்டியில் - தனியாய்
சுமந்து செல்லும்
கர்ம வீரனுக்குத் தெரியாது-
அள்ளித் திரட்டியவற்றில்
அவன்
ஒற்றைச் சிறுமகளின்
சின்னக் கையும்
இருக்கிறதென்று.

அன்னையே!
நீ
பிய்த்துப் போட்ட
பூக்களின் இதழ்களாய்
சிதறிக் கிடக்கும்
சின்னச் சின்ன இதயங்களைப்
பார்க்கும் போது
எண்ணிப் பார்க்கிறேன்
பொறுமையின் அருமையை!

பதினைந்து விநாடிகள் - நீ
பொறுமை இழந்தாய்!
பூமி தன்னையே
புதைத்துக் கொண்டது!

ஆனாலும்
இடிந்து கிடக்கும்
இடிபாடுகளுக்கு
இடையில் இருந்தும்
எழுந்து நிற்பதற்கு
என் உலகம்
கை நீட்டியது.

பிடித்துக் கொள்ளக்
கைகளும் -
தாங்கிக் கொள்ளத்
தோள்களும் -
ஏந்திக் கொள்ள
இதயங்களும் -

இருக்கின்ற வரையிலும்
இங்கே
மனிதனுக்கு மரணமில்லை!

இயற்கை அன்னை
சீற்றம் கொண்டு
ஓராண்டு முடிந்த நிலையில் -
நீண்ட கைகளைப்
பிடித்துக் கொண்டும் -
சொந்தக் கால்களை
ஊன்றிக் கொண்டும் -
எழுந்து நின்றிருக்கிறது
எங்கள் குஜராத்!

பாரதம் இப்போது
மறுபடியும் நிரூபித்திருக்கிறது -
மனித நேயம்
மரித்துப் போகாமல்
இருக்கின்ற வரையிலும்
இங்கே
எதற்கும் மரணமில்லை!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக