புதன், ஏப்ரல் 07, 2004

மழை-1 துளி-21

நிழல் பொம்மைகள் - சகாரா

கூட்டம் நிரம்பி வழிந்தது. பிதுங்கி வழிகிற மனிதப் பிண்டங்களின் இடிபாடுகளில் சிக்கிய உடம்பு சின்னாபின்னப்பட்டுக் கொண்டிருந்தது. கடைசி நேரப் பேருந்துகளில் போவதை எவ்வளவோ தவிர்க்க முயன்றாலும் வாரத்தில் ஓரிருநாட்கள் இப்படித்தான் போகும்படி நேர்கிறது.
எங்களைப் போன்றவர்களுக்கெல்லாம் அலுவலகம் முடியும் நேரம் என்பது எங்கள் மேலாளரின் நாக்கு நுனியால் தீர்மானிக்கப் படுகிறது. நேரம் பற்றியெல்லாம் கவலைப் பட்டால் பிறகு வயிறு பற்றிக் கவலைப்பட வேண்டி வந்துவிடும். "ரெளத்ரம் பழகு" என்பது சொல்பவனுக்குக் கூடக் கடைப்பிடிக்கக் கடினமான ஒன்று.
பின் படிக்கட்டில் நசுங்கிக் கொண்டிருந்தேன். கால்கள் நடுங்கின. உயிர்ப் பயம் கைகளுக்குத் தாவியது.
"தொண தொணன்னு பேச்சு. பேச்சு பேச்சு பேச்சு.... கண் முழுச்ச நேரம் முதல் கண்மூடும் நேரம் வரை பேச்சு... என்னதான் பேசுவாங்களோ ... அப்பப்பா...", பேச வாய்ப்புக் கிடைக்காத ஒருவர் மற்றவர் பேசுவது குறித்து அவருக்குள் பேசிக் கொண்டார்.
பேசுவதில் வம்பு வளர்க்கிறார்கள் - வழக்குத் தீர்க்கிறார்கள் ; காயப் படுத்துகிறார்கள் - காயம் ஆற்றுகிறார்கள் .. பேசட்டும்.. தங்கள் ஆற்றாமைகளை - ஏக்கங்களை - இயலாமைகளை - சோகங்களை முகம் கொடுக்க முடியாத வன்முறைகளை - முஷ்டி உயர்த்த முடியாத தாக்குதல்களை - பேசித்தான் மறக்க வேண்டும். வேறு வழி ? பேச்சு என்கிற பெருவரம் மட்டும் நமக்குக் கிடைத்திராவிட்டால் வாழ்க்கை தினம் தினம் போர்க்களமாகிவிடும்...
சிந்தனையைச் சிதறடிக்கும் சத்தம் முன்படிக்கட்டில்... களைத்த புலன்கள் ஆத்திரப்பட்டன.
" ப்ச் தண்ணி போட்டவனையெல்லாம் பஸ்ல ஏத்துனா இப்படித்தான் ..."
" நான் அம்பது ரூபா குடுத்தேன் .. மீதி எங்க ? "
" யோ பெருசு... என்ன மெரட்ற. நீ பத்துத்தான் குடுத்த. "
" இல்ல ... ங்கொப்புறான சத்தியமா அம்பது ழூவா குடுத்தேன் "
"என்ன என்னய்யா ... ரவுசு ? " கண்டக்டரின் கடைசி நடைச் சலிப்பு...

"கண்டாக்குடரே ..."
"யோவ் .. அவர் கண் டாக்டர் இல்லய்யா ... கண்டக்டர் " எவனோ ஒரு கோணையன் கடித்தான்.
"நான் இந்த ஆழ்ட்ட அம்பது ழூவா குடுத்து டிக்கட் வாங்கச் சொன்னேன்.. மீதி நாப்பத்தஞ்சு சிழ்ழழ தழ்ரதுக்கு வெழும் அஞ்சு ழூவா சிழ்ழல தழ்றான்..."
"கண்டக்டர் சார்... அந்தாளு சொல்றத நம்பாதீங்க...
வெரும் பத்துதான் கொடுத்தான். இப்ப அம்பது குடுத்தேன்னு ஔர்ரான்.
தண்ணி போட்டாலே இவனுங்களுக்கெல்லாம் தலைகால் புரியாமப் போய்டுது."

"இல்ல .. சத்தியமா நான் அம்பது தான் குழுத்தேன்.. தம்பீ.. என் பணத்தக் குடு.. நான்.. நான் நானே டிக்கெட்டு வாங்கிக்கறேன். என் பணம்... என் பணத்தக் குழுய்யா..."
குடிகாரன் அழாத குறையாகக் கேட்டான். எனக்குத் தலை வலித்தது. " இவனுங்க எல்லாம் எதுக்கு பஸ்ல ஏறனும். வேல முடிஞ்சு வீடு போய்ச் சேரலாம்னு இல்லாம தண்ணியப் போட்டுட்டு வந்து நம்ம உயிர வாங்கறானுங்க..." பக்கத்திலிருந்தவர் என் முகவரிகளைப் படித்தார்.
முன் படிக்கட்டில் இன்னும் ஓய்ந்த பாடில்லை. " யோவ்... அந்தாள எறக்கி வுட்டுட்டு வண்டிய எடுங்கய்யா... நீங்க பஞாயத்துப் பண்ணங்குள்ள பொழுது விடிஞ்சிடும்..." நான் கத்தினேன்.
இதற்குள் டிரைவர் வண்டியை நிறுத்தி விட்டார். நான் பின்படிக்கட்டிலிருந்து முன் படிக்கட்டுக்கு ஓடினேன். என் கோபம் எல்லை மீறிக் கொண்டிருந்தது. என் மேனேஜர் மீது துப்ப வேண்டிய எச்சிலெல்லாம் சேர்ந்து என் ரத்ததைச் சூடேற்றியிருந்தது. நல்ல வேளையாக கண்டக்டரே இறக்கி விட்டுவிட்டார்.
நான் பின் படிக்கட்டுக்கு மீண்டேன். பஸ் லேசாக உறுமி நகர்ந்தது. குடிகாரன் தள்ளாடித் தள்ளாடி முன்னோக்கி நகர்ந்தான். எனக்கு நேராக வந்தபோது ஓங்கி ஓர் உதை விட்டேன். பஸ் வேகமெடுத்தது. .. என் எரிச்சலில் பாதி குறைந்தது. உதைத்த காலுக்கு உணர்ச்சி வந்தபோதுதான் தெரிந்தது. அந்தக் காலிலிருந்து செருப்பு காணாமல் போயிருந்தது.
இப்போது இருக்கிற இன்னொரு செருப்பால் என்னை நானே உதைத்துக் கொள்ள வேண்டும்போல் இருந்தது. நாற்பது ரூபாய் செருப்பு.. வாங்கி நாலு நாள் கூட ஆகவில்லை...
இனி அடுத்த கால் செருப்பையும் பயன்படுத்த முடியாது. இன்னொரு நாற்பதும் வீண்.. கணக்குப் போட்ட மனசு கருவியது.
பஸ் அடுத்த நிறுத்தத்தில் நின்றது. இறங்கிய சிலரோடு நானும் இறங்கினேன்.பஸ் புறப்பட்டது. பித்துப்பிடித்தவன் போல் நின்றேன். நான்கைந்து இளைஞர்கள் ஏதோ சுவாரஸ்யமாய் பேசிக்கொண்டிருந்தனர் - ஒரு சைக்கிளைச் சுற்றி. நான் சைக்கிள் கேட்டேன். என் கால் செருப்பே சாட்சி.
நான் போக வேண்டிய கடைசி பஸ்சுக்கு இன்னும் அரை மணி நேரமே இருந்தது. சைக்கிள் வேகமெடுத்தது. குறிப்பிட்ட தொலைவு வந்ததும் கண்கள் தேடத் துவங்கின. நான் தள்ளி விட்டவன் தள்ளாடித் தள்ளாடி அவனுக்குள் பேசிக்கொண்டே வந்து கொண்டிருந்தான். அவனைக் கேட்க வெட்கமாயிருந்தது.
கொஞ்ச தூரம் நடந்தே தேடினேன். கடிகாரம் வேறு முள்ளை வேகமாக நகர்த்திக் கொண்டிருந்தது. நொந்தபடியே தேடி அலுத்தும் போனது. மொத்த நம்பிக்கையையும் செருப்போடு தொலத்து விட்டு சைக்கிளைத் திருப்பினேன். இறங்காமல் போயிருந்தாலாவது இந்நேரம் வீட்டை நெருங்கியிருக்கலாம். எல்லாம் என் நேரம்...
நடு ரோட்டில் நின்று கொண்டு தடுத்தான் குடிகாரன். "ஏய்யா என்ன வேணும்?.. "
"தம்பீ .. நானும் வாழேன்...?"
"அய்யா எனக்கு லேட்டாயிடுச்சு.. அதான் யோசிக்கறேன் "
" சழி அப்ப நீ போ... தம்பி அப்பறம் இன்னொழு விஷயம்.. எங்கிட்ட யாழுதோ ஒத்தக்கால் செழுப்பு இழுக்குது. யாழாவது தேடுனா சொல்லிட்டுப் போப்பா...."
"என்ன ஒரு செருப்பா !.."
"ஆமாப்பா ஏன் கேக்கழ ?"
" அது என்னோடது தாங்க..." வெட்கம் மறந்தன உதடுகள். என் இன்னொரு கால் செருப்பைக் காட்டி, தொலைந்த செருப்பை வாங்கிக் கொண்டேன். செருப்புக் கிடைத்த மகிழ்ச்சியில் பெரியவரைக் கூப்பிட்டேன்....
"இல்ல தம்பி... நீ போ... உனக்கு லேட்டாயிரும்.. ?" என் வார்த்தையாலே என்னை அடித்தான்.
நான் வலுக்கட்டாயமாக அவனை சைக்கிளில் ஏற்றிக் கொண்டு வேகமாக மிதிக்கத் தொடங்கினேன்... சைக்கிள் தள்ளாடியது.
"ஏன் பெரியவரே.. இந்த வயசான காலத்துல்ல அக்கடான்னு இருக்கறத விட்டுட்டு
ஏன் இப்படிக் குடிச்சு சீரழியனும் ? "
"அக்கடான்னு எங்க தம்பி இழுக்கறது.. நான் வேலக்குப் போனாத்தான் கால் வயித்துக் கஞ்சியே . ஆனா அந்த மேஸ்திரி உனக்கு வயசாச்சு . இனிமே சாழத்து மேழ ஏழமுடியாது... நாளைலருந்து வேலைக்கு வழவேண்டாம்னுட்டான்..
எடுபடி வேலையாவது செய்யழேன்னு கெஞ்சினேன்.... முடியவே முடியாதுன்னுட்டான். துக்கம் தாள முடியல.... அந்தக் கவலதான். ஒரு கிளாஸ் ஊத்தினேன்.
பஸ்ல வேற அந்தப் படுபாவிப்பய எங்கிட்ட அம்பது வாங்கிட்டு பத்துதான் குடுத்தேன்னு ஏமாத்திட்டுப் பூட்டான். அந்த அயோக்யனுக்காக பஸ்சே சேந்து பேசுது தம்பி..."
அதற்குள்ளாக சைக்கிள் வாங்கிய இடம் வந்திருந்தது. சைக்கிளை உரியவனிடம் ஒப்படைத்து நன்றி கூறினேன்.
" ஏந் தம்பி.. ஒருத்தன் தண்ணி போட்ழுக்காண்ணா அவன் சொல்வதெல்லாம் பொய்யாயிடும்மா தம்பி?
போச்சு.. போச்சு.. எல்லாம் போச்சு.. வேல போச்சு.. என்னோட கடைசி சம்பளம் போச்சு... இனி எங் குடும்பம் ... நான்...? "
பேச்சு முடியவில்லை. அழத்துவங்கி விட்டான் போல.
என் உதையை விட பணம் போனதும், வேலை போனதுமே அவனுக்குப் பெரிய உதையாகி விட்டது போலும்.
ஒவ்வொருவனையும் வாழ்க்கை இரக்கமில்லாமல் துரத்துகிறது. ஒதுங்க இடம் தேடி ஓடிக்கொண்டிருக்கின்றனர். அவனவன் அவனவன் சக்திக்குத் தகுந்த படி. ஒரு எளியவனை எந்தக் கேள்வியுமில்லாமல் தண்டிக்க எனக்கென்ன அதிகாரம்? மனசு வலித்தது... எட்டி உதைக்க முடிந்த என்னால் உதைபட்டவனுக்கு எந்த ஆறுதலையும் தர முடிய வில்லையே...
என் மீதே எனக்கு வெறுப்பாக இருந்தது. அப்பாவியை விட்டு அப்பாவியை உதைக்கிற உலகத்தின் மீது ஆத்திரம் ஆத்திரமாக வந்தது..
என்ன செய்வது ? என் போன்ற வெறும்பய கோபம் எதைப் புடுங்க முடியும் ?
தொலைவில் நான் போக வேண்டிய கடைசி பஸ் வந்து கொண்டிருந்தது. கசங்கிய உடம்பு கனத்த மனசுடன் அடுத்த நெரிசலுக்குத் தயாரானது....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக