சனி, அக்டோபர் 28, 2006

மழை - 5 துளி - 6

பொறாமை -புலியூர் முருகேசன்


எனக்குள்
பொறாமை மட்டுமே
மீதமாயிருக்கிறது.

கழிந்த நாட்களில் சுழன்ற காற்றாய்
வலம் வந்த அதே நான்தான்
கிழிந்த ஓவியமாய் இன்று
கலைந்து கிடக்கிறேன்

மற்றெப்பொழுதையும் விட
மற்றவர்கள் நிதானமாய்-
நம்பிக்கைத் துரோகம்
செய்து கொண்டிருக்கிறார்கள்

இமைகள் கருகக் கருக..
குளிர் காய்கிறேன்-
மூக்குத் துவாரங்கள் திணறத் திணற
சேற்றில் மூழ்கிக் கொண்டிருக்கிறேன்

என்னைக் குழிக்குள் புதைக்கும்
முனைப்போடு பல கைகள்
முன்பை விட பலத்தோடு
மண்வெட்டியை உயர்த்திப் பிடிக்கின்றன

நான் எல்லாம் இழந்தும்
எதையும் இழக்காமல் இருக்கிறேன்

மிகைப்படுத்தத் தெரியாத பிரியம்
அலங்காரமில்லாத அன்பு
எதிர்ப்பில்லாத சகிப்புத்தன்மை
தோள்களில் எந்நேரமும் கனக்கின்ற சிலுவை

எல்லாம் என் சேமிப்புகளென
பெருமிதத்தோடு நிமிர்ந்தேன்
செல்லாக் காசுகளென அவை
எல்லோராலும் தீர்மானிக்கப்பட்டது தெரியாமல்.

வார்த்தைகளால் முகத்தில் அறையச் செய்யும்
வித்தையைக் கற்றுக்கொள்ளவே முடியவில்லை.

மவுனத்தால் கேலி செய்யும் கலையும்
கைவரவில்லை -

எனக்குள் பொறாமை மட்டுமே
மீதமாயிருக்கிறது .....

வியாழன், அக்டோபர் 26, 2006

மழை - 5 துளி - 5

பங்குச்சந்தை -சகாரா


அழகான பொம்பள
அரக்கும் கிரைண்டர் ஓட்டினா(ள்)
சோக்கான பொம்பள
சோப்புக் கட்டிய ஆட்டினா(ள்)

நீலச் சேலக் காரியோ
நீலம் போட்டுக் காட்டினா(ள்)
பச்ச சேலக் காரியோ
பவுடர் டப்பா நீட்டினா(ள்)

பொங்கலுக்குச் சேலவிய்க்கும்
பொம்ம கூடப் பொம்பள !
பண்டிகையாம் தீபாவளிக்குப்
பட்டாசெல்லாம் பொம்பள !

விளம்பரமே வாழ்க்கையின்னு ஆனது !
பொம்பள
விதிகூடப் பணமாகிப் போனது !
(நன்றி: கவிஞர் சகாராவின் 'முள்ளின் நுனியிலும் ஆகாயம்' கவிதைத் தொகுப்பு)

செவ்வாய், அக்டோபர் 24, 2006

மழை - 5 துளி - 4

சுதந்திரப் பறவை - அ.சிவகாமசுந்தரி

அந்தப் பறவை - ஒரு
சுதந்திரப் பறவை
எந்த கூட்டிற்குள்ளும்
அது அடைக்கப்படவில்லை
அதன் தேவைகள்
எதற்கும் தேடிப்போக
அவசியமின்றி நின்ற இடத்திலேயே
கேட்டுப் பெறும் சொகுசான
வீட்டுக்காற்றை சுவாசிக்கும்
அந்தப் பறவை - ஒரு
சுதந்திரப் பறவை

சிறுவயதில் ஏனோ அதன்
சிறகுகள் மட்டும்
முழுமையாய் வளருமுன்
முளையிலேயே வெட்டப்பட்டன.
பெரியதாய் வளர்ந்ததும்
பறக்க முயற்சித்ததால்
சிறகுகளுடன் சேர்ந்து
கால்களும் காணமல்போயின.

பறப்பதையே மறந்து
நடக்கவும் அறியாது
பிள்ளைகள் விளையாட
பார்ப்பவர்கள் பாராட்ட
பெருமையுடன் காட்சிப்பொருளாய்
நின்ற இடத்திலேயே நிற்கும்
அந்தப் பறவை - ஒரு
சுதந்திரப் பறவை!

-அ.சிவகாமசுந்தரி

ஞாயிறு, அக்டோபர் 15, 2006

மழை - 5 துளி - 3

எழுதாத கவிதை --- கைகாட்டி


இந்த நாள் இத்தனை விரைவில்
வருமென்று நான் எதிர்பார்க்கவில்லை

நான் தோல்வியினை எதிர்பார்த்திருக்கவில்லை,
ஏனெனில்
எதிரிகள் யாரும் எனக்கு இருந்திருக்கவில்லை.

நான் கனவிலும் நினைத்திருக்கவில்லை,
என் ஊன்றுகோல் உளுத்துப் போகுமென்று ;
என்றுமே எதிர்பார்த்திருக்கவில்லை,
என் இதயம் விழுந்து நொறுங்குமென்று.

இலவு வெடித்துவிடுமென்று தெரியும்தான் எனக்கு,
ஆனால் பூவிலே வெடிக்குமென்று அல்ல.

நான் அரிதாரம் பூசுமுன்பே
இங்கு விடிந்துபோய்விட்டது
இந்த பணம் அச்சடிக்குமுன்பே செல்லாததாகிவிட்டது.

உனக்கு என் இதயத்தை விளக்க ஓடி வந்தபோது
வாயிலிலேயே தெரிந்துகொண்டேன்,
வாய்ப்பில்லையென்று.

போட்டியில் கலந்துகொள்ளத்தான் தயாரானேன்.
அரங்கத்தின் வாசலிலேயே அறிந்துகொண்டேன்,
அனைத்தும் முடிந்துவிட்டதென்று.

தொலைபேசியின் மணி ஒலித்தபோதெல்லாம்
முன்னிருந்த ஒரு துள்ளல்
ஒரு இனம்புரியா எதிர்பார்ப்பு
எல்லாம் முடிந்தாயிற்று,
எல்லாம் முடிந்தாயிற்று.

எனக்கு அழத்தெரியவில்லை
இனம்புரியாத துக்கம்
என்னுள் பிரளயமாய்.

ஏனோ தெரியவில்லை, கண்களில் மட்டுமல்ல,
எனது பேனாவிலும் கசிவு.

தவறு செய்துவிட்டேன்
கவிதை புரியாத உனக்கு,
காதல் புரிய வாய்ப்பேயில்லை.

மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்
என் காதலைச் சொல்லி
எந்தக் குழப்பத்தையும் உன் வாழ்வில் ஏற்படுத்திவிடவில்லை

காலம் கடந்து புரிந்துகொண்டேன்
வழிகாட்டத்தான் எனக்கு விதிக்கப்பட்டிருக்கிறது,
பயணம் செய்ய அல்ல.
---கைகாட்டி (ஏப்ரல் 25 , 2000)

திங்கள், அக்டோபர் 02, 2006

மழை - 5 துளி - 2

சாவி -சகாரா

வானிலிருந்து அருவி விழுகிறது
உச்சியைப் பேர்த்தபடி !
புள்ளிமானின் துள்ளலாய்த்
தெறிக்கிறது நுரை !
பிளவுபடாமல் தாங்கும் பாறை உருண்டைகள்
குளிக்கின்றன-
யானைகளைப் போல.

பூக்கள் மிதந்து வருவதில்
வண்ணத்துப் பூச்சிகளின் வசீகரம் !

வேர்விட்டு நீர் உறிஞ்சும் மரங்கள்
முகத்தில் புன்னகையோடு !

குரங்குகள் குதூகலித்துத் தாவும்
கிளைக்குக் கிளை- அழகை இரசித்தபடி !

ஓடும் நீரருகே -
செடிக் காம்புகளில் மலரும்
புதிய பூக்கள் !

வருகிற தென்றலின் சிலுசிலுப்பில்
பரவுகிறது எங்கும் மணம்
தாங்க முடியாமல் ஆடுகிறது செடி.

மறைவில்
மலம் கழிக்கிறான்
மனிதன் !

( பூங்குயில் செப். - அக். 96)
(நன்றி: கவிஞர் சகாராவின் 'முள்ளின் நுனியிலும் ஆகாயம்' கவிதைத் தொகுப்பு)

ஞாயிறு, அக்டோபர் 01, 2006

மழை - 5 துளி - 1

இலையின் கழுத்தொடிந்து
இரத்தம் கசியும் கைகளோடு வரும்
இந்தக் காற்று அழுந்தி மோத-
ஆடைகளோடு சேர்ந்து சதைகளும்
பிய்ந்து போகும்.
இருதயம்,இரைப்பை,குடல் என
எல்லாம் அறுந்து எங்கோ போய் விழும்.
பட படவென எலும்புகள் முறிந்து
எரிபடும் நிகழ்வு அறிய செவியும் இல்லை
விழியும் இல்லை.
ஊசிகளில் குத்திக் கிழிபட்டு நறுக்கித் தூவிய
மழைமேகம் மாதிரி தலைமுடி மூளையோடு
சிதறலாகும்.
இன்னும் இலையின் கழுத்தொடித்து
இரத்தம் கசியும் கைகளோடு வரும் காற்று;

திரியைத் தின்னாமலும் என்னைக் குடிக்காமலும்
உயிர்த் தீபம் ஒற்றையாய் நின்று எரியும்.
அறுபடாமல்...
அணைந்து விடாமல்...
- புலியூர் முருகேசன்