வெள்ளி, ஜூன் 07, 2013

மழை-8, துளி-9 : தொடங்கு

தொடங்கு  --கைகாட்டி


 
இளைஞனே !
அந்த வானம்பாடியிடம்
என்ன யாசிக்கிறாய்?
இழந்து போன  உன் சிறகுகளையா?

மெக்காலேயின் கல்விச் சக்கரத்தில்
சிக்கிச் சிதைந்து போன
உனது நம்பிக்கையையா?

இப்பாலைவனச் சகதியில்
அமுக்கப்பட்ட உனது உரிமையையா?

குறைப்பிரசவத்தில் செத்துப்போன
நம் விடுதலையையா?

எதைத் தேடுகிறாய்
நண்பனே ?

அதோ விடிகிறது,
வானம்பாடி கானம் பாடி
காற்றை நனைக்கிறது

இதோ தெரிகிறதே!
சிகரத்தின் நுனி,
தொடங்கு
தொட்டுவிடும் தூரம்தான்

சோர்வை விடுத்து
சோம்பலை முடித்தால்
சோதனையே
இங்கு சாதனையாகும்


----------[1994-95]


மழை-8, துளி-8 : ஜல்லி


ஜல்லி – சகாரா


மழைக்கொதுங்க

வெயிலுக்குப் பதுங்க

இருந்த வீடு சரிந்துபோக

கூரை நிமிர்த்த வழியில்லை.

 

மரத்தடிக்கு வந்துவிட்டது குடும்பம்.

பறந்து வரும் செம்மண் புழுதியால்

பாத்திரம் நிறையும்.

 

கிளைதாங்கும் சேலைத் தொட்டிலில்

ஏனோ பிறந்த சிசு,

தாலாட்டத் தெம்பின்றி

சாரக் காற்றில் நாநடுங்க,

அடிவயிற்றில் நெருப்பெரியும்.

தாயின்

பால்வற்றிய மார்பகத்தில்

கண்ணீர் கசியும்.

 

சாகுபடி செய்ய முடியாமல்

ஓணான் முட்டையிடும் பரம்பரைச் சொத்து -

முக்காலேக்கர் கல்லுக்காடு

அப்பன் சாவெரித்த

வெட்டியான் கடனுக்குப் பத்தாது.

 

ஆனாலும் எப்படியோ

அவனால் மட்டும் முடிகிறது

எதிர்த்தவீட்டுச் சிறுக்கியோடு -

இனிமையாய்ப் பொழுதுபோக்க.


நன்றி: முள்ளின் நுனியிலும் ஆகாயம் கவிதைத் தொகுப்பு

மழை-8, துளி-7 : அம்மாவுக்கு


அம்மாவுக்கு  - கைகாட்டி


நம்மிடையேயான  உறவு
அப்படியொன்றும் அன்புமயமானதில்லை
கடைசியாய்ப் பிறந்ததால்  தருவதற்கு 
அன்பு மிச்சமில்லாமல் போயிருக்கலாம்.
 
ஐந்தாறு வயதில்
மாடுமுட்டித் தள்ளியபோது
மருத்துவமனைக்குத் தூக்கிச் சென்றது தவிர
கருணையான நிகழ்வுகள்
எதுவும் நடந்ததாய் நினைவில் இல்லை.
 
வீசப்பட்ட  பருப்பு மத்தும், தட்டு, கரண்டிகளும்
தென்னை மாரினால் விளாசிக் கிழிந்த முதுகும்
கனவில்  அவ்வப்போது வந்து பயமுறுத்தும்.
 
14 வயதில்
என் சைக்கிளின் பின்னிருந்து நீ கீழே விழுந்ததின்
குற்ற உணர்ச்சி எனக்கு இன்றும் இருக்கிறது.
இப்போது கார் இருக்கிறது
என்றாலும்,
நீ விழுவதைத் தடுக்க இயலாது என்னால்
இனி முடியாதென்கிறார் மருத்துவர்.
எழும் நம்பிக்கையோடு
அரை நினைவில் தூங்கும் உன்னிடம்
அறிவிக்க வழியற்று
அழுகையை அடக்கிக் கொண்டு நான்.

15-04-2013

மழை-8, துளி-6 : நச்சுக் கோப்பை


நச்சுக் கோப்பை -சகாரா

நெருப்புக் குண்டு நான்

பஞ்சு தேடுகிறேன்

உன்பஞ்சிலோ

எக்கச் சக்கமான

வேஷக் கொட்டைகள்

அழுக்குப் பருத்தியே !

என்று நீ

தூய்மை பெறப் போகிறாய்?

நான் உன்னை

ஆடைநெய்து

அணியப் போகிறேன் ?

நன்றி: முள்ளின் நுனியிலும் ஆகாயம் கவிதைத் தொகுப்பு

மழை -8, துளி-5 : உப்பளம்


உப்பளம் - கைகாட்டி

 

எனது சகோதரனின் உடல்

கசாப்புக் கடைகளில் தொங்கும்போது

கறிதின்று களிப்பேன் நான்.

 

அவன் கண்ணீரும்  இரத்தமும்

எனக்கு அருவெருப்பை உண்டுபண்ணுவன.

அவன் அழப் பிறந்தவன்,

நான் ஆள.

 

அவனுக்கிருப்பது முதுகெலும்பு

என்னுடையது கால்சியக்குப்பை

 

அவனுடைய தோள்களை வெட்டி

கூர்மழுங்கிய வாளை

வெற்றிகொள்ளக் காத்திருப்பேன்.

 

எதிர்காலத்தில்

நான் பூமியாள்வேன்

அவன் சிதிலங்களின்மீது

 

நட்சத்திர நாயகியின் உடை நெகிழுமா -

எனது பிரச்சினை

எனது சகோதரனின் விரை நசுக்கப்படுவதல்ல.

 
(1994-95)