செவ்வாய், ஏப்ரல் 13, 2004

ஓடை பழைய படைப்புகள் 25

ஓடை ஜூலை 2000 தாள் 3

புதிய வானம் - கைகாட்டி

காலை 11 மணி. இனி மேலும் வகுப்பில் உட்கார்ந்திருக்க முடியாது எனத்தோன்றியது. தலை மிகவும் வலித்தது. கடந்த மூன்று நாட்கள் தூக்கமின்றித் தவித்ததில் கண்கள் மிகவும் மங்கலாகத் தெரிந்தது போன்ற பிரமை. மிகுந்த எரிச்சலுடன், தண்ணீர் வடிகின்ற கண்களுடன் எப்போது வகுப்பு முடியும் என்ற எதிர்பார்ப்புடன் வகுப்பின் கடைசி பெஞ்சின் மூலையில் தலையைக் கவிழ்த்து கொண்டு உட்கார்ந்திருந்தான் செல்வா. தன்னைத்தானே வெறுக்குமளவிற்கு சுஜாதாவுடன் நடந்த சண்டையை மூளைக்குள் நுழைத்துக் கருவிக் கொண்டிருந்தான் அவன்.
அசிரியர் வெளியேற, அவசர அவசரமாய் அடுத்த ஆசிரியர் உள் நுழைவதற்குள் புத்தகங்களை அருகிலிருந்தவனிடம் கொடுத்து விட்டு, " எங்கடா போற ? " என்ற அவனது கேள்விக்கு பதில் சொல்லாது வெளியேறினான்.
இனிமேலும் தன்னால் பொறுக்க முடியாது இந்த வேதனை என்று தோன்றியது அவனுக்கு. கல்லூரி நுழைவாயிலுக்கு வந்து திருவெறும்பூர் செல்லும் பேருந்தில் ஏறிக்கொண்டான். அம்பிகா ஒயின்ஸ் என்ற பெயரைக் கண்டதும் சிறிதும் யோசிக்காமல் உள் நுழைந்தான். அவனுக்கே ஆச்சரியமாக இருந்தது எப்படித் தனக்கு இவ்வளவு தைரியம் வந்தது என்று.
உள்ளே யாரும் இல்லை. கடைக்காரனைத்தவிர. இருட்டாக மூலையில் இருந்த ஒரு மேசையைப் பார்த்து உட்கார்ந்தான்.
கடைக்காரன் ஒருவித சந்தேகத்துடன் நெருங்கி வந்தான். " தம்பி இது ஒயின் ஷாப். உங்களப் பாத்தா நீங்க தவறுதலா வந்திட்டிங்களோன்னு நினைக்கறேன்" என்று மிகுந்த தயக்கத்துடன் சொன்னான். அவனைச் சொல்லிக் குற்றமில்லை. இன்னும் மீசை கூட சரியாக முளைக்காமல் பால் வடியும் முகத்துடன் இருந்த அவனைப்பார்த்தால் அனைவருக்கும் அதுதான் தோன்றும்.
" இல்லை நான் தெரிஞ்சுதான் வந்தேன்" என்றான் செல்வா.
கடைக்காரனின் நம்பிக்கையின்மை அவன் கண்களில் தெரிந்தது. இருப்பினும் " சரி என்ன வேண்டும்? ஹாட் அல்லது கூல்?' என்று கேட்டான்.
செல்வாவுக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை. ஹாட்டுக்கும் கூலுக்கும் என்ன வித்தியாசம் என்று கேட்க நினைத்து அடக்கிக் கொண்டான். வெளியில் வெய்யிலாக இருந்தது எனவே " கூல்" என்றான். " என்ன பிராண்டு?" என்று கடைக்காரன் கேட்க செல்வாவுக்குப் பேசாமல் எழுந்து வெளியில் வந்து விடலாமா என்று தோன்றியது. அன்றொருநாள் ராஜாராமன் " பீர் அடிச்சேனா சுர்ருனு ஏறிடுச்சு " என்று பேசிக்கொண்டிருந்தது நினைவுக்கு வந்தது. என்வே இவனும் "ஒரு பீர் " என்றான் சர்வ சாதாரணமாக, ஏதோ " ஒரு தோசை போடப்பா" என்பதுபோல.
கடைக்காரனும் கொண்டு வந்து கொடுத்தான். ஏதோ ??பழுப்பு நிறமாய் இருந்தது. உள்ளே நுரை தழும்பிக் கொண்டிருந்தது. கொடுத்த கிளாசில் ஊற்றி நிரப்பினான். அந்த நுரையையே சிறிது நேரம் பார்த்துக் கொண்டு உட்கார்ந்திருந்தான். பீர் பழங்களைப் பிழிந்து தயாரிக்கிறார்கள் என்று யாரோ சொல்லியது நினைவுக்கு வந்தது. பழம் நினைவுக்கு வந்ததுமே அவனுடைய அப்பா நினைவுக்கு வந்தார்.
நெடிய ஒல்லியான உருவம். தலையில் ஒரு துண்டும் இடுப்பில் ஒரு நாடா டிரவுசருமாய் எப்போதும் வெற்றிலையை மெல்லும் வாயுடன் அவர் நினைப்பு வந்ததும் செல்வாவுக்கு சப்த நாடியும் அடங்கி விட்டது.
சென்ற மாதம் ஊருக்குச் சென்றபோது கடந்த ஆறு மாதங்களுக்கான மெஸ் பில் கட்டுவதற்காக நான்காயிரம் பணம் கேட்டபோது சிறிது நேரம் அவர் எதுவும் பேசவில்லை. அவனுக்குத் தெரியும் இப்போது அவர் கையில் பணம் இருக்க வாய்ப்பில்லையென்று. ஏனெனில் போன வாரம் தான் அவன் அக்காவுக்கு வளைகாப்பு நடந்தது. மாப்பிள்ளை வீட்டார் அவ்ன் அப்பாவை மொட்டை அடித்திருப்பார்கள் என்றும் அவனுக்குத் தெரியும். இருப்பினும் அவனுக்கு வேறு வழியில்லை. இந்த மாதம் பணம் கட்டவில்லையெனில் தேர்வெழுத இயலாது. எதுவும் பேசாது கையில் மம்மட்டியுடன் புதிதாய் வைத்த கொய்யாக் கன்றுகளுக்கு தண்ணீர் பாய்த்துக் கொண்டிருந்த அவரையே வரப்பில் நின்றுகொண்டு பார்த்துக் கொண்டிருந்தான். சிறிது நேரம் கழித்து " சரி, நீ வீட்டுக்குப் போ, நான் பார்த்துக் கொள்கிறேன்" என்றார் அவனைப் பார்க்காமலேயே. அவனுக்குத் தெரிந்தது தன் கவலையை அவன் முன்னால் காட்டாது தவிர்க்க விரும்புகிறார் என்று.
அவனுக்கு மிகவும் பயமாக இருந்தது, ஒருவேளை பணம் புரட்ட முடியாதோவென்று. அனேகமாக அக்காவின் வளைகாப்பிற்கு வாங்க முடிந்த இடத்திலெல்லாம் வாங்கியிருப்பார். இதுவரை ஒரு இடத்தில்கூட திருப்பித்தந்திருக்க வழியில்லை. விலையற்றுப் போய் மிளகாய் இன்னும் வீட்டில் கிடக்கிறது. அடுத்த மாதம் கட்டி விடலாம், அடுத்த மாதம் கட்டி விடலாம் என்று தள்ளிப் போட்டு இப்போது மெஸ் பில் கழுத்துக்கு வந்து நிற்கிறது.
இரவெல்லாம் சரியான தூக்கமில்லாமல் புரண்டு கொண்டிருந்தான். பக்கத்துத் தெரு செங்கல் சூளையிலிருந்து மண் கொட்டும் சத்தம் வந்தது. அப்படியானால் மணி அதிகாலை இரண்டரை என்று அர்த்தம். சிறுநீர் கழிக்க எழுந்து வெளியில் வந்த போது தற்செயலாய் அப்பா படுத்திருந்த ஓலைச் சாலையின்மீது அவன் பார்வை சென்றது. அவரும் தூங்காமல் வெற்றிலையை மென்று துப்பிக் கொண்டிருந்தார். அவர் காலை சென்ற வாரம்தான் பிறந்திருந்த எருமைக் கன்று நக்கி தொந்தரவு செய்து கொண்டிருந்தது. முழுகாமல் இருக்கும் அக்கா, மெலிந்து போயிருக்கும் அம்மா இருவருக்காகவும் வெங்கிடசாமி நாயக்கரிடம் பாதி கடனுக்கு சென்ற மாதம் அப்பா வாங்கிக் கொண்டு வந்த எருமை போட்ட கன்று அது.
ஒண்ணுக்கிருந்து விட்டு வந்தவனை " ஏ இங்கே வாடா " என்றார். " என்ன தூக்கம் வரலையா" என்று கேட்டவருக்கு என்ன பதில் சொல்வதென்றே தெரியவில்லை. " இங்க பாரு, உனக்குப் பணம் ரெடி பண்ணிக் கொடுப்பது என்னோட பொறுப்பு, நீ ஏன் துங்காம இருக்கற ? போ, போய்த் தூங்கு " என்றார்.
செல்வாவுக்கு மிகவும் வேதனையாக இருந்தது. இனியும் நின்று கொண்டிருந்தால் திட்ட ஆரம்பித்து விடுவார் என்று தெரியுமாதலால், மெதுவாக நகர்ந்தான். எப்போது தூங்கினான் என்று நினைவில்லை. "டே எழுந்திருடா" என்று அவன் அம்மா எழுப்பியபோதுதான் அவனுக்கு உறைத்தது காலை பத்து மணியாகிவிட்டது என்று. "வெந்நீர் வெச்சிருக்கேன் குளிச்சிட்டுக் கிளம்பு பஸ் வந்துடும்" என்று சொன்ன அம்மாவை ஒருமுறை முழுமையாகப் பார்த்தான். தன் சிறு வயதில் பார்த்த அம்மாவா இவள்? கண்கள் குழிவிழுந்து, உடல் மெலிந்து , பேசும்போது இருமலுடன் வரும் பலகீனமான குரலும் அவனை என்னவோ செய்தது.
குளித்து விட்டுக் கிளம்பியபோது அப்பா உள்ளே வந்தார். " இந்தா நாலாயிரம் , நல்லபடியாப் படி. வீட்டு நிலமை உனக்குத் தெரியும், நான் எதுவும் சொல்ல வேண்டியதில்லை, காலேஜ் போய்ச் சேந்ததும் லெட்டர் போடு" என்றவாறே துண்டுக்குள் மடித்து வைத்திருந்த ஒரு மஞ்சள் பையை எடுத்தார்.

" பணத்துக்கு என்னாப்பா பண்ணினீங்க ? " , என்று கேட்க வந்ததை வாயிலேயே நிறுத்திக் கொண்டான். அவர் சொல்ல மாட்டார். "போயிட்டு வா" என்று சொல்லி விட்டு துண்டை எடுத்து உதறித் தோளில் போட்டுக் கொண்டு நகர்ந்தார்.
பணத்துக்கு என்ன பண்ணியிருப்பார் என்றவாறு யோசித்துக் கொண்டிருந்தவனின் சிந்தனையை , "தம்பி, காரமா ஏதாவது வேணுமா" என்ற கடைக்காரனின் கேள்வி கலைத்தது.

"வேண்டாம் " என்றவனுக்கு தனக்காக காரம் சாப்பிடுவதைக் குறைத்துக் கொண்ட தாயின் நினைவு வந்தது. பையன் நன்றாய்ப் படித்துத் தம் கனவுகளையெல்லாம் நனவாக்குவான் என்ற நம்பிக்கையுடன் வறண்ட காட்டை உழுது , கிளறிக் கொண்டிருந்த தாய் தந்தை நினைவு வந்ததும் அவனுக்கு தன் மீதே பெரும் வெறுப்பாய் வந்தது. மூன்று மாதமாய்ப் பழக்கமான பக்கத்து வகுப்புக்காரியுடன் முறிந்து போன
காதலுக்காக (?) குடிக்கத் துணிந்த உண்மை பொட்டில் அறைந்தது செல்வாவுக்கு. முன்னாலிருந்த பாட்டிலை நெருப்பைப்போல் பார்த்து பயந்தான் அவன்.
அப்படியே விட்டுவிட்டு அவசரமாய் பணத்தைக் கொடுத்துவிட்டு நடந்தவனுக்குப் பக்கத்திலிருந்த குமாரசாமி வொர்க்ஷாப்பில் பார்வை நிலைத்தது. பதினைந்து வயதுப் பையனொருவன் அழுக்கு டிரவுசருடன் பம்பரமாய்ச் சுற்றிக்கொண்டிருந்தான். எச்சில் துப்ப வெளியில் வந்த ஓனர் இவனைப் பார்த்து சினேகமாய்ச் சிரித்தார்.
" என்ன தம்பி , அப்படிப் பாக்கிற? என் பையந்தான். பத்தாவது படிக்கிறான். ஸ்கூல் லீவு விடுற நாளையில அவனே வேலயில எறங்கிடறான். நானும் எதும் சொல்லறதில்ல. படிப்பிலயும் கெட்டிக்காரன்." முன் பின் தெரியாத தன்னிடம் அவ்ர் இந்த விஷயத்தைச் சொன்னது எதற்காக என்று புரியாவிடினும், ஊரிலிருக்கும்போது மோட்டரை ஆஃப் பண்ணக்கூடப் போகாது படிக்கிற திமிரில் படுத்திருந்த தன்னைச் சாட்டையில் அடித்து விட்டார் என்பது மட்டும் தெரிந்தது. சிறிதும் யோசிக்காமல் வொர்க் ஷாப்புகுள் நுழைந்தான்.
டிகிரி படிப்பவனிடம் ஸ்பேனர் தரத் தயாராயில்லை என்றாலும் மகனுக்கு கணக்குச் சொல்லித்தர அவனை அனுமதித்தார். அன்று மாலையில் இருந்தே செல்வா பகுதி நேர ஆசிரியரானான்.
-----
-----
-----
மெஸ் பில்லுக்காகக் காலியான எருமைக்கொட்டத்தைத் திரும்பவும் நிறைத்தன, அதே வெங்கிடசாமி நாயக்கரிடம் முழுத் தொகைக்கு வாங்கிய பசுவும் கன்றும் வெகு சீக்கிரமாகவே.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக