புதன், ஏப்ரல் 07, 2004

மழை-2 துளி-4

நிழல்கள் - கர்ணன்

நீயுமில்லை
எழுதிய நானுமில்லை
அந்தக் கவிதையில்

மார்கழி விடியலுமில்லை
கோலமிட்ட நீயுமில்லை
உலவும் பனியுமில்லை
நடுங்கிய நானுமில்லை
அந்தக்கவிதையில்

முக்குத்தியுமில்லை
உன் கன்னம் உரசிய தென்றலுமில்லை
அந்தக் கவிதையில்

நீர் நிரம்பிய கிணறுமில்லை
உன் கால் தடம் பதிந்த வரப்புமில்லை
தலையில் ஒன்றும் இடையில் ஒன்றுமாய்
நீ சுமந்த குடங்களுமில்லை
போதாதென்று என்னைக் குடித்த கண்களுமில்லை
என் தாகமுமில்லை
அந்தக்கவிதையில்

மலைமுகடுகள் இல்லை
தவழும் மேகம் இல்லை
உன் வெட்கமில்லை
தாவணியுமில்லை
அந்தக்கவிதையில்

உன் நிழலும்
என் நிழலும்
இடைவெளியும்
அதிகமிருந்தது
அந்தக்கவிதையில்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக