புதன், ஏப்ரல் 07, 2004

மழை-2 துளி - 35

புனைவு முகங்கள் -- திலகபாமா,சிவகாசி

துளியினும் துளியாய் மகரந்தம்
விதையாகி கனியாகி பின்
விருட்சமாய் காணக் கிடைத்தலாய்
காண முடியா அகங்கள்தனை
காணச் செய்தது முகங்கள்
அருவமாய் இருந்த அகங்கள்
உருவமாய் உணரச் செய்த முகங்கள்

உணர்வுகளால் வேறுபட்ட
உன்னிலிருந்து எனையும்
என்னிலிருந்து உனையும்
குறிப்பெடுத்துக் காண்பிக்கும்
குளோனிங் இல்லா முகங்கள்

முற்போக்கு எண்ணங்கள்
முதுகு வளைய சுமந்திருந்தும்
பின்னோக்கித் திரும்பியிருக்கும் முகங்கள்

தன்னை, கலைஞனாய் பாவனை செய்து
கவி முகம் மூடி
மனித முகம் மறந்து,
மரத்துப் போன முகங்கள்

முகம் காட்ட மறுத்த
முகங்கள் தவிர்த்து
அடிக்கடி தோன்றிப் போகும்
பாவனை முகங்கள்

சீதையை வேண்டும் கோவலன்கள்
ராம பாவனை முகங்கள் மூடி
மாரீச மான்களை ஏவும்

பாரதியாய் காட்டிக் கொண்ட பாவனை முகங்கள்
கண்ணம்மாவை காதலித்து தினம்
செல்லம்மாவை பாராமுகம் செய்யும்

நிஜங்களின் கனங்களை சுமக்கத் திராணியற்று
கழற்றிவைத்த முகங்கள் பத்திரமாக பரண்களில்
பூட்டிக் கொண்ட பாவனை முகங்களோ
பல்லக்குகளில்.

இனி நாம் வனைவோம்
நிர்பந்தங்களை நிர்க்கதியாக்கி
விழியால் ராவணன் விரட்டும் சீதைக்கும்
இலட்சுமணக் கோடு கிழிக்கும் கண்ணகிக்கும்
இந்திரனை கல்லாக்கிப் போடும் அகலிகைக்குமான
புனைவு முகங்களை

புனைவு முகங்களோ புதிய முகங்களோ
முகங்கள் எதுவாயினும்
சின்ன இதழ்கள் சிந்தும் சிநேக சிரிப்பினில்
மனிதம் உயிர்க்க வைக்கும்
மானுட முகம் சுமப்போம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக