புதன், ஏப்ரல் 07, 2004

மழை-1 துளி-8


நகரத்தில் நகரும் நாள்.......
புலியூர் முருகேசன்


உயரமாய் நூல்கட்டு ஏற்றிய
மினிலாரிகள் அலறித் திரும்பும் வளைவுகளில்
8-ஏ பிதுங்கிப் பிதுங்கிக் கரகரத்து
பொறுமையிழந்து ஹாரனிக்கும்

டீக்கடை அழுக்குப் பையனின்
சுடுநீர்க் குவளைக்குப் பயந்து
கால் திருப்பி முகம் பார்த்து ஓடும் தேமல் நாயை
ஜல்லி லாரியின் முன்சக்கரம் குடல்பிதுக்கும்;

அருகில் யாரும் நடக்கவே கால் இடறும் சந்தில்
ஆட்டோ க்கள் ஆனந்தமாய்
ஓடும்; பறக்கும்;

சுடுவெயில்தட்டு உச்சந்தலைக்கு வர
பள்ளிமணி பிள்ளைகளின் பசி தட்டும்

நட்டநடு அரச மரத்திலிருந்து
ஓர் இலை உதிர்ந்து
அலைந்து..... அலைந்து..
மெலிதாய் தரை தொட
சர்வமும் மறந்து போகும் !
மனசுக்குள் விம்மல் முட்டும்.

(நன்றி: ' பயணம் புதிது ' -ஜூலை-1999 )
கவிஞர் புலியூர் முருகேசன் புலியூரிலிருந்து வெளிவந்து கொண்டிருக்கும் ' பயணம் புதிது ' இதழின் தூண்களில் ஒருவர். அமராவதி ஆற்றங்கரையில் (க)விதைகளைப் பயிரிட்டு, இலக்கிய அறுவடை செய்து கொண்டிருக்கும் இனிய நண்பர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக