புதன், ஏப்ரல் 07, 2004
மழை-1 துளி-20
துளிர்க்கும் சருகுகள்
ப.முத்துக்குமார். yemkay_ps@yahoo.com
அண்ணன் மகனின்
"சித்தப்பா ஹோம் ஒர்க்"-ம்...,
அன்புத் தங்கையின்
"அண்ணா புது வாட்ச்"-ம்....,
மனம் நிறைந்த மனைவியின்
"இன்னிக்கு புதுப்படம் ரிலீஸ்"-ம்.....,
என் உயிரில் பூத்த முதல் மொட்டின்
"அப்பா ஸ்கூலில் பிக்னிக்"-ம்....,
சிறகு முளைத்த என் செல்ல மகளின்
"அப்பா நான் ரவியைத்தான்......"-ம்......,
எதிர் வீட்டு கல்லூரி நிலவின்
"குட் மார்னிங் அங்க்கிள்"-ம்.........,
விளக்கேற்ற வந்த குத்துவிளக்கின்
"மாமா, பால் பாக்கெட் மட்டும்....."-ம்..,
பக்கத்து வாசல் நண்பரின்
"சாரைப் பாத்து நாளாயிட்டு"-ம்......,
ரேஷன் கடைக் கல்லாவின்
"அய்யா வரிசையில் வாங்க"-ம்...,
சரக்கேற்றிய ரிக்ஷாவின்
"யோவ் பெர்சு, ஓரம்போ"-ம்...,
வாழ்க்கையின் கிளைகள்
துளித்துளியாய் சருகாகிக்
கொண்டிருப்பதை - இதயத்தில்
சத்தமில்லாமல் செதுக்கிக் கொண்டிருக்க,
ஒரு தலைமுறை ஓடி,
தலையெல்லாம் பஞ்சாக,
விழியோரம் துளியோடு,
நேற்று சாலையில் சந்தித்த
கல்லூரி நண்பனின்
"டேய் மாப்ளே, எப்படி இருக்கடா?"-மட்டும்,
சருகுகளின் இருட்டிலும்
பல துளிர்கள்
இன்றும் ஒளிர்வதை
சத்தமாக வாசித்துக்காட்டியது.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக