ஓடை ஜூன் 2000 தாள் 3
அந்த ஒரு நிமிடம் - சகாரா
படுக்கையை விட்டு அவசரமாக எழுந்தேன். படிக்க வேண்டியது நிறைய இருந்தது. முகம் கழுவிக் கொண்டு உட்கார்ந்தேன்.
வெளியே வந்து பார்த்தபோது உலகம் விடிந்துவிட்டிருந்தது. காலைக் கடன்களை முடித்துக் கொண்டு கண்ணாடியில் முகம் பார்த்தபோதுதான் கறுமையாய்த் தாடி இருப்பது தெரிந்தது. நேரம் கடந்து கொண்டிருந்ததால் அவசரமாய் உட்கார்ந்து ஷேவிங் செய்ய ஆரம்பித்தேன். அவசரமாய் இழுத்ததில் பிளேடு தனது பதத்தைக் காட்டியது. விழுப்புண்ணைத் தடவியவாறே எழுந்தேன்.
அவசர அவசரமாகக் குளித்து ஏதோ ஒப்புக்குச் சாப்பிட்டு அவசர கதியில் புறப்பட்டு சைக்கிளில் ஏறினேன். நான் பணியாற்றும் பள்ளிக்குச் செல்ல 5 கி.மீ சைக்கிளில் சென்றுதான் பஸ் ஏற வேண்டும். சென்று கொண்டிருந்தபோது ஒருவர் 'நானும் வரலாமா? ' என ஓடி வந்தார்.
உதவுதல் கடனெனினும் எனக்கிருந்த அவசரத்தில் அதை உதறிவிட்டு வேகத்தைக் கூட்டினேன். வழியில் நீண்ட நாட்களாய்ச் சந்திக்காத நண்பனொருவன் எதிர்ப்பட்டான். மிகமிக நெருங்கிய நண்பன்.
'ம் ம் .. வேல கெடச்சத என்கிட்ட சொல்லவேயில்ல' என்றவாறு ஆரம்பித்தான். 'பஸ் வந்துடும், நான் சாயங்காலம் வர்ரேன் பேசிக்குவோம்' என்று கூறித் தவிர்க்க நினைத்தேன்.
' எல்லாம் பெரிய ஆளாயிட்டிங்க, ம் ம்.. நீங்க சொல்றபடிதானே நாங்க செய்யனும்' என்று அவன் அங்கலாய்த்தான். எனக்கு இரண்டுங்கெட்டான் நிலைமை. ' என்னவாயினும் மாலையில் பேசுவோம்' என்று அவசரமாக சைக்கிளை மிதிக்க ஆரம்பித்தேன். மிதித்த வேகத்தில் பெடல் கட்டை ஒடிந்து போனது.
அதைக் கையில் எடுத்துக் கொண்டு ஒற்றைக் கால் தவத்தோடு போய்ச் சேர்ந்தேன்.
சைக்கிளைக் கடையில் விட்டு பூட்டி வைக்கச் சொல்லிவிட்டு, பஸ் ஸ்டாப் நோக்கி ஓடினேன். ரேடியோவில் ' அவசரமா நான் போகனும்...' என்ற லைப்பாய் ப்ளஸ் விளம்பரம் நிகழ்ந்து கொண்டிருந்தது.
நின்றும் நிற்காமல் சென்ற பஸ்ஸில் ஓடி ஏறினேன். அதை விட்டால் பின்பு 10 மணிக்குத்தான் பஸ். நெருக்கியடித்துக் கொண்டு உள்ளே போனேன். செக்கர் வந்து விடுவார் என்ற அவசரத்தில் கண்டக்டர் 'சீக்கிரம் டிக்கெட் வாங்குங்க' என அவசரப் படுத்தினார். அப்போதுதான் தெரிந்தது.....
பஸ்ஸுக்கு பணம் எடுக்காமலேயே அவசரத்தில் வந்து விட்டேன் என்பது. பக்கத்தில் நின்றிருந்த எனது ஊர்க்காரரிடம் நிலைமையை விளக்கி, பத்து ரூபாய் கடன் வாங்கி டிக்கெட் வாங்கினேன்.
பேருந்தை நோட்டம் விட்டேன். ஒரு பெண்ணை கண்டக்டர் திட்டிக் கொண்டிருந்தார். ' நாலு கொழந்தைய வெச்சுக்கிட்டு இப்படி நடுவழில நின்னா எப்படிம்மா டிக்கட் ஏத்தறது? ஓரமா நில்லு. இல்லாட்டி அடுத்த ஸ்டாப்ல இறங்கிக்க ',
அந்தப் பெண்ணைப் பார்த்தேன். அவளது கணவன் அவசரப்பட்டுவிட்டானோ எனத் தோன்றியது. இடுப்புயரம் ஒன்று, முழங்காலுயரம் ஒன்று, அதற்குக் கீழே காலைப் பிடித்தவாறு ஒன்று. கையிலே ஒன்று.... வயிற்றிலேயும் ஒன்று வளர்ந்து வருவது போல் தோன்றியது.
எங்கோ இழவுக்குச் சென்று வந்த கும்பல் நொய் நொய் என்று பேசிக் கொண்டு வந்தது.
'சாந்தா அவ்ளுக்குப் புடிச்சவனத்தான் கட்டிக்குவேன்னு சொன்னாளாம். மொத நாள் காலையில அவளச் சண்டப்போட்டு வேற எடத்துலதான் கண்ணாலம்னு நல்லியப்பனும் செல்லம்மாவும் சொல்லியிருக்காங்க. அப்புறம் யோசிச்சுப் பார்த்ததுல சரி அவ விரும்புனவனயே கட்டி வெச்சுடலாம்னு முடிவு செஞ்சு இன்னக்கிக் காலையில போய்ப் பார்த்தா அவ செத்துக் கிடக்குறா--தூக்கு மாட்டிக்கிட்டு!'
' அடிப் பாவி அவசரப் பட்டுட்டாளே!' என்றொரு கிழம் அங்கலாய்த்தது. 'அப்புறம்?'
' அப்புறமென்ன ? போலிஸ் கேஸ் ஆயிடக் கூடாதுங்கறதுக்காக அவ்சர் அவ்சரம் பொணத்த எரிச்சுட்டாங்க. நாங்க போனபோதே பொணம் இல்ல.'
கிழவி நச்சுக் கொட்டினாள். கசகசவென்று அதைப் பற்றியே பேசி கொண்டிருந்தனர். டிரைவர் பாட்டுப் போட்டார்.
'அண்ணன் என்னடா தம்பி என்னடா
அவசரமான ஒலகத்துல'
என்றவாறு பாடல் ஓட ஆரம்பித்தது.
பள்ளி வந்திருந்தது. அவசரமாக இறங்கினேன். காலாண்டுக்கு பாடங்கள் நிறைய முடிக்க வேண்டி இருந்தது. கட்டுரை வேறு திருத்த வேண்டும். அவசரமாய்த் திருத்த ஆரம்பித்தேன்.
வகுப்பில் பாடங்களை விரட்டினேன். நண்பகல் நேரத்தில் ஒரு மாணவன் அவசரமாக ஓடி வந்ததில் மற்றொருவனைப் படியில் உருட்டி விட்டான். அவனைப் பிடித்து நாலு சாத்து சாத்தினேன்.
'உனக்கென்னடா அவ்வளவு அவசரம்?'
தேர்ச்சி அறிக்கைகளை அவசரமாக நிரப்பி கையெழுத்துக்கு வைத்து விட்டு நிமிர்ந்தபோது மணி 5. அவசரமாகப் புறப்பட்டு பஸ் ஸ்டாப்பிற்கு வந்த போது 5.10 க்கு வர வேண்டிய பேருந்து 4.55 க்கே போய்விட்டிருந்தது. அவர்களுக்கென்ன அவசரமோ?
அடுத்த பஸ்ஸில் வீடு வந்தேன். அவசரமாகச் சாப்பிட்டுப் படிக்க ஆரம்பித்தேன். அடுத்த நாள் பள்ளியில் விளையாட்டு விழா. காலை 7 மணிக்கே செல்ல வேண்டும். எனவே சீக்கிரமே எழ வேண்டும் என்றவாறே தூங்கச் சென்றேன்.
'காலையில நம்ம ஊரு நடராஜ சைக்கிள்ள ஏத்திக்காம அவசரமாகப் போயிட்டியாமே. அவர் வந்து என்னக் கேட்டார். எல்லாரையும் அனுசரிச்சுப் போகனும். நமக்கு நாளைக்கொரு அல்ல அவசரம்னா யாரு வருவா?' என் அம்மா அறிவுறுத்தினாள். அந்த அவசரக்காரன் அதையும் இங்கு வந்து சொல்லி விட்டானே என்று அங்கலாய்த்தவாறே அவசரமாகப் படுக்கை விரித்துப் படுத்தேன்.
ஒரு நாளுக்கு ஏன் 24 மணி நேரம் ? பூமி சுற்றுவதால்தானே? ஒரு நிமிடத்திற்கு பின்னால் பிறந்திருந்தால் ஒருவேளை அமெரிக்காவில் பிறந்திருப்பேனோ? பூமியை மெதுவாகச் சுற்ற வைத்து நாளுக்கு நாற்பது மணி நேரம் ஆக்கியிருப்பேனோ?
அவசரப்பட்டு ஒரு நிமிடத்திற்கு முன்னே பிறந்து விட்டதாய்த் தோன்றியது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக