வியாழன், ஏப்ரல் 08, 2004

மழை-3, துளி-5

மே-2003 திசைகள் மின்னிதழில் திரு மாலன் எழுதிய 'காணாமல் போன கனல்' என்ற கட்டுரை படித்தபின் எழுந்த
கருத்துக்களுடன் எழுதப்பட்ட மடல். (இது சிறிது திருத்தங்களுடன் ஜூன் 2003 திசைகள் இதழில் வெளியிடப்பட்டது)

அன்புடன் திரு மாலனுக்கு,
வணக்கம். தினமணியில் நீங்கள் இருந்த காலத்தில் (நான் 8,9 படித்துக் கொண்டிருந்தேன் என்று நினைக்கிறேன்) உங்கள் எழுத்துக்கள் எனக்குப் பழக்கமாயின. ' என் சன்னலுக்கு வெளியே ' என்ற தலைப்பில் நீங்கள் துணிவுடன், எந்த சமரசமுமில்லாது உள்ளதை உள்ளபடி எழுதியது கண்டு வியந்தவன்.
'திசைகள்' மே இதழில் தங்கள் 'காணாமல் போன கனல்' கட்டுரை படித்தேன். இன்றைய இளைஞர்களிடம் அரசியல்,சமூக உணர்வுகள் குறைந்து போய்விட்டன என்ற தங்கள் கருத்தில் உண்மை இருக்கத்தான் செய்கிறது. ஆயினும் நீங்கள் 1960களின் இளைஞர்களோடு 2000த்து இளைஞர்களை ஒப்பிடுவது போல் இந்த மாற்றம் திடீரென்று வரவில்லை. இந்த சமூக, அரசியல் உணர்வானது 70களுக்குப் பின்பு மிக வேகமாகக் குறைய ஆரம்பித்தது.
இதற்கான அடிப்படைக் காரணங்களில் அப்போது உருவான அரசியல் மாற்றங்களும், கல்வி முறையில் ஏற்பட்ட மாற்றங்களும் முக்கியப் பங்கு வகிக்கின்றன. நான் பள்ளி தாண்டி கல்லூரிக்குள் நுழைந்த பிறகுதான் , கல்வி என்பது வெறும் வேலை வாங்கித் தரும் சாதனமாக மாற்றப்பட்டிருப்பதை உணர முடிந்தது. இது இன்றைய இளைஞர்களின் தவறில்லை. நீங்கள் குறிப்பிட்டது போல் 1960களின் இறுதியில் இருந்த மாணவர்கள் ஒரு சமூகப் புரட்சியையே செய்து காட்டினார்கள். அவர்களில் 90 விழுக்காடு மாணவர்கள் முதல் தலைமுறைப் படிப்பாளிகள்.
அன்று படிப்பு என்பது பணம் சம்பாதிக்க உதவுகின்ற வெறும் சான்றிதழ்களின் குவியலல்ல. அது விழி திறக்க உதவிய விடிவெள்ளி. அதற்குப் பிந்தைய தலைமுறைகளில், திராவிட இயக்கங்களின் குளறுபடியான கல்விக் கொள்கை, மாணவர்களைத் தம் சொந்த நலனுக்காகத் தூண்டி விட்ட அரசியல்வாதிகள் எல்லாம் சேர்ந்து அவர்களை வேறு எந்த சிந்தனைக்கும் ஆட்படுத்த விடாது ஒரு குறுகிய வட்டத்துக்குள் அடக்கி வைத்தன. உண்மையை உரத்துப் பேசும் மாணவர்கள் அனைவரும் உட்கார வைக்கப்பட்டனர்.
'தீர்க்க தரிசியானவன் தன் வீட்டிலல்லாது வேறு எங்கும் சுகவீனப்படுவதில்லை' என்ற விவிலியத்தின் வரிகள் மிக மிக உண்மை. பொறியாளர் ஆவதும், மருத்துவர் ஆவதுமே அனைத்து மாணவர்களுக்கும் இலக்காக நிறுத்தப்பட்டது இந்த சமுதாயத்தால். பணம் சம்பாதித்து, சுற்றுச்சுவர் எழுப்பபட்ட வீடுகளில், பக்கத்து வீட்டுக்காரனின் பெயர் தெரியாமல் வாழ்வதுதான் பிறவிப் பெரும்பயன் என நாளேடுகளும், தொலைக்காட்சிகளூம் மறைமுகமாகப் பரப்பிக்கொண்டிருப்பதை நாம் அறிந்தே இருக்கிறோம்.
ஆசிரியர் என்றால் ஒரு கண்டிப்பும், கொள்கைப் பற்றும், பாடப் புத்தகங்களுக்கு அப்பாற்பட்ட அறிவையும் தேக்கி வைத்திருந்த பெட்டகங்களாய் இருந்த காலம் மாறி, வெறும் பாடப் புத்தகங்களை நெட்டுருப் போட்டு , வகுப்பறையில் வந்து ஒப்பிக்கும் எந்திரங்களாய் மாறிப்போயினர் 80க்குப் பின். 90 விழுக்காட்டு ஆசிரியர்கள் வேறு தொழிலுக்கு வாய்பில்லாமல் ஆசிரியராகப் பொறுப்பெற்றனர். இவர்கள் அனைவரும் புதிய கருத்துக்களைக் கற்றுக் கொள்ளவுமில்லை, கற்றுத்தரவுமில்லை. தமிழ்,வரலாறு போன்ற ஒரு நல்ல சமூக உணர்வுள்ள குடிமகனை உருவாக்க உதவக்கூடிய அடிப்படைப் பாடங்கள் வெறும் தேர்வுகளின் நோக்கில் கற்பிக்கப்பட்டன. பாரதியையும், பாரதிதாசனையும், அம்பேத்கரையும்,பெரியாரையும் வெறும் பாடப்பகுதிகளாய்ப் படித்து, தேர்வு முடிந்ததும் மறந்து போவதும் வழக்கமாகிப் போனது. தமிழ் படிப்பதும் , தமிழ் வழியில் படிப்பதும் ஏளனமாய்ப் பார்க்கப் பட்டது.
இனி அரசியலுக்கு வருவோம். பெரியார், அண்ணா போன்ற பெருந்தலவர்கள் எவரும் 75க்குப் பின் இல்லாது போனதும், வெறும் முகப்புகழ்ச்சியிலே மூழ்கித் திளைத்த தலைவர்களே திரும்பத் திரும்ப தமிழ்நாட்டை ஆண்டு சீரழித்ததும் மக்களை அரசியலிலிருந்து விலகியோடச் செய்தன. எங்கு திரும்பினாலும் பொய்யர்களும், பதவிக்காக எந்தக் கீழ்த்தரமான செய்கைக்கும் தயாராய் இருந்த அரசியல்வாதிகளும், கொள்கையையும் கட்சியையும், அடிக்கடி மாற்றிக் கொள்ளும் வேடதாரிகளும் மலிந்து போயினர்.
அரசியல் நாகரிகம் இல்லாமல், அடித்து உதைத்துக் கொள்ளும் வீதிச் சண்டைக்காரர்களைப் பார்த்துப் பார்த்து வெறுத்து ஒதுங்கிப் போயினர் படித்த பண்பாளர்கள். எப்போது தேர்தல் நடந்தாலும் 50 விழுக்காடு மக்கள் வாக்களிப்பதில்லை. இது குடியாட்சி முறையில் மக்கள் அனுபவித்த ஏமாற்றங்களின் விளைவு.
ஒரு வேறுபாட்டை நாம் உணர வேண்டும். திராவிட இயக்கங்களில் 60களில் பங்கெடுத்தவர்கள் யாரும் அண்ணாவுக்காக மட்டும் கொடி பிடித்தவர்கள் அல்லர். அண்ணாவின்
கொள்கையையும் கருத்துக்களையும் ஆதரித்தவர்கள். தமிழ், தமிழ்ப் பண்பாடு காப்பாற்றப் படவேண்டும் என்ற நோக்கில் களம் இறங்கிய கடமை வீரர்கள். ஆனால் அண்ணாவுக்குப் பின் தனி மனிதர்கள் முன்னிறுத்தப் பட்டார்கள். கொள்கைகளும், உண்மையான தொண்டர்களின் உழைப்பும், புறந்தள்ளப்பட்டன.
இப்படியான ஒரு காலகட்டத்தில், மேய்ப்பர்கள் இல்லாத ஆட்டு மந்தைகளாய் தமிழ் மக்கள் மலிந்து போயினர். அவரவர், அவரவர் வாழ்க்கையைப் பணம் சம்பாதித்து வளப்படுத்திக் கொள்வதில் கவனம் செலுத்துகின்றனர். அரசியலோ, தமிழோ மக்களுக்குச் சுமையாய் உணரப்படுகின்றன. தமிழனாய் அறியப்படுவதில் தாழ்வுணர்ச்சி கொள்கின்றனர். தமிழில் தடையில்லாமல் ஒரு பக்கத்துக்கு தொடர்ச்சியாக சொந்தக் கருத்துகளை எழுதச் சொன்னால் 50 விழுக்காட்டு தமில் இளைஞர்கள் இன்றைக்குத் தோற்றுப் போவார்கள்.
பாடப் புத்தகங்களுக்கு அப்பால், இலக்கியம், அரசியல், மொழி வரலாறு குறித்து அக்கறைப் பட்ட ஆயிரத்தில் ஒரு இளைஞர்கள் இன்றும் ' பைத்தியக்காரர்கள் ' என முத்திரை குத்தப் படுகின்றனர்.
எந்த விதமான அநியாயம் நடந்தாலும் அதனால் மக்கள் யாரும் மனம் பதைப்பதில்லை. அது அவர்களுக்கு ஒரு தொடர்பில்லாத, எங்கோ வேறோர் கோளில் நடக்கும் ஒரு சின்ன நிகழவாகப் பார்க்கப் படுகிறது. விவசாயக் கல்லூரி மாணவிகள் எரிக்கப்படுவதை தொலைக்காட்சியில் காட்டும்போது , எதோ கிரிக்கெட் போட்டி பார்க்கும் ஆர்வத்தோடு நொறுக்குத்தீனியுடன் எந்தவிதச் சலனமும் இல்லாமல், செய்தி பார்த்த தமிழ்நாட்டு விலங்குகளை நான் கண்ணாறக் கண்டேன். இங்குமங்குமாய் ஓரிரு வாரங்களுக்கு பல மூலைகளில் இருந்து கண்டனங்கள் வந்தன. கொலைக்குக் காரணமானவர்களுக்கு அடுத்து வந்த இடைத்தேர்தலில் வாக்குகளுக்கு எந்தக் குறைச்சலுமில்லை.
நமது திரைப்படங்கள் போதிப்பதெல்லாம், எவனோ ஒரு தனி மனிதன் வந்து ஊரையும் நாட்டையும் காப்பாற்றுவான் என்ற காலத்திற்கொவ்வாத ஒரு கட்டுக்கதையை. யாராவது அநியாயத்தை எதிர்த்துப் போராடினால், மக்கள் அவனை ஆதரிக்காமல், வேடிக்கை பார்க்கிறார்கள். ஒருவேளை அவன் தப்பித் தவறி வென்றால், 'பரவாயில்லையே, பலே ஆளப்பா' என்றவாறு கலைந்து போகிறார்கள்.
தோற்று உதைபட்டால், 'நான் அப்பவே சொன்னேனப்பா, கேக்காமப் போய் உதை வாங்கிட்டு வர்றான்' என்று 'ச்சு'க் கொட்டி விமரிசித்துப் போகிறார்கள்.
சேர்ந்து போராடினால்தான் வெற்றி பெறமுடியும் என்ற அடிப்படை உணர்வற்ற இந்த மக்கள் கும்பலில் சத்தமில்லாமல் ஒரு கும்பல் தங்கள் பையை நிரப்பிக் கொண்டிருக்கிறது. படித்த ஒரு பெரிய கும்பல் பணம் தேடி வட இந்தியாவுக்கும், வெளி நாடுகளுக்கும் அலைந்து கொண்டிருக்கிறது. படிக்காத/ அரைகுறையாய் படித்த ஒரு பெரும் கும்பல் வெந்ததைத் தின்று விதியை நொந்து கொண்டிருக்கிறது.
நம்மைப் போன்ற சிறிய கும்பல் ஒன்று இடையில் இருந்து கொண்டு தள்ளவும் முடியாமல், மெள்ளவும் முடியாமல் புழுங்கிக் கொண்டிருக்கிறது.
'நதிக்கரையில் தொலைந்த மணல்' கவிதை நூலில் கவிஞர் சகாரா சொல்வது போல,

உறக்கம் பிடிக்காத நாட்கள்
வேட்டைக் குதறல்களின்
ரணமாற்றத் தவிக்கும்

உப்புப் போட்டுத் தின்ற சொரணை உசுப்ப
செவ்வரிக் கண்களில்
அறச் சீற்றம் கொப்பளிக்கும்

பார்க்குமிடமெல்லாம்
பழிகார முகநினைவில்
காறிக்காறி உமிழும்

பொசுபொசுவென்று
பற்றியெறியும் பெருஞ்சினம்
பொங்கிப் பொங்கி அடங்கும்

இடையிடையே
அலைக்கழியும் அந்தர வாழ்க்கை
அடுத்தவேளை பற்றி யோசிக்கும்.

இயலாமைகளை நிராசைகளை
இதயம்
எழுதி எழுதி அழிக்கும்

புழுங்கும் மனசு
எந்த மயிரையும் புடுங்க முடியாமல்
வெப்பப் பெருமூச்சு விடும்

கைவலிக்க முறுக்கிய மீசை
கண்ணெதிரே
காற்றுப் போன பலூனாய்த் தொங்கும்

நான்கைந்து முறை
தண்ணீர் குடித்து ஒன்றுக்கு விட
அந்த இரவும்
ஒரு வழியாய் உறங்கிப் போகும்.

எது எப்படி இருப்பினும் பிரிந்து கிடக்கும் ஒத்த கருத்துடைய படித்த
மக்களை /அறிஞர்களை/இலக்கியவாதிகளை ஒன்று சேர்க்க வேண்டியது படித்த இலக்கியத் தொடர்புள்ள நம்முடைய கடமை. ஒரு சமுதாய மாற்றத்துக்கு அடிகோல வேண்டிய கட்டாயம் நம் எழுத்துக்கிருக்கிறது.
'தன் குடும்பம், தன் வீடு, தன் வாழ்க்கை' என்ற குறுகிய வட்டத்திலிருந்து மக்களை வெளிக்கொணராதவரை எந்த சமுதாய மாற்றமும் சாத்தியம் என்று எனக்குத் தோன்றவில்லை.

அன்புடன்
கைகாட்டி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக