புதன், ஏப்ரல் 07, 2004

மழை-2 துளி - 13


நீ - சகாரா
(நன்றி:முள்ளின் நுனியிலும் ஆகாயம் கவிதைத் தொகுப்பு)


என்னுடைய ஆலயத்தில் எரிகின்ற விளக்கினிலே
எழிற்சுடராய் இருப்பவள் நீ
என்னுடைய சோலையில் எங்கணும் கேட்கின்ற
இன்னிசையின் அடிநாதம் நீ

கடக்கின்ற சாலையில் காண்கின்ற காட்சியில்
கடைசியில் தெரிபவள் நீ
விடையெதுவும் தெரியாத வினாக்களின் இறுதியில்
விரிகின்ற விளக்கமும் நீ

தீராத மனநோயில் தினம்வாடும் என்தொல்லை
தீர்க்கின்ற மருத்துவம் நீ
வாராது வந்தெனது வஞ்சத்தின் நெஞ்சழித்து
வழித்தீபம் ஏற்றியவள் நீ

பொல்லாத மனிதரை பொய்பூக்கும் மக்களை
புன்னகைக்க வைத்தவள் நீ
சொல்லிய கவிதைகள் சொல்கின்ற கவிதைகள்
சொல்லாத கவிதைகள் நீ

நாளையின் இன்றுநீ இன்றையின் நாளை நீ
நேசத்தின் சுட்டுவிரல் நீ
சோலையின் சோலை நீ சோகத்தின் எதிரி நீ
சொர்க்கத்தின் திறவுகோல் நீ.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக