புதன், ஏப்ரல் 07, 2004

மழை-2 துளி-5

விழி திறக்காத மழலை ஒன்று வாய் திறக்கிறது............
-p.முத்துக்குமார். yemkay_ps@yahoo.com


*அம்மா
ஏன் இப்படிச் செய்தாய்?
இந்த சோக ராகத்தைப்
பிரசவித்து விட்டு
பொன் வீணை நீ ஏன்
உடைந்து போனாய்?

*பத்து மாதச்
சுமையை இறக்கிவைக்க
உனக்கு வேறு இடம் இல்லையா?
உன் சமாதியிலா
இறக்கி வைப்பது?

*மூச்சடக்கி
எடுத்த முத்தை
கரையில் வீசிவிட்டு
நீ மட்டும்
ஏனம்மா
கடலோடு மூழ்கிப்போனாய்?

*உருக்கொடுத்து
உருவாக்கியவளே!
உன் மொத்த உயிரையும்
ஏன்
என்னிடம் கொடுத்துப் போனாய்?

*தாயே
உன் பனிக்குடத்தை
உடைத்தது
உனக்குக் குடம்
உடைக்கத் தானென்றால்
நீ
என்னையே உடைத்திருக்கலாமே!

*எனக்குத் தாலாட்டுச்
சந்தம் சொல்லாமல்
நீ
ஏனம்மா
ஒப்பாரிச் சத்தத்தில் உறங்கிவிட்டாய்?

*அம்மா
நீ என்னைச்
சுமந்த போது
ஒரு நிமிடமாவது
அழுதிருக்கலாம்!
இப்போது
எனக்கு அழக்கூடத்
தெரிய வில்லையே அம்மா!

*முதலும் கடைசியுமாய்
ஒரு வேண்டுகோள்
பத்து மாதம்
உன்னுடனேயே
வைத்திருந்தாய்!
இப்போதும் உன்னுடனேயே
அழைத்துப் போய் விடம்மா!

*இங்கு
உன் வாசமில்லாமல்
என்னால்
சுவாசத்தைக் கூட
வாசிக்க முடியாது தாயே!.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக