புதன், ஏப்ரல் 07, 2004

மழை-2 துளி - 33

இசையானவளுக்கு --கைகாட்டி

இவ்விரண்டு வருடங்களில்
முகம் பார்க்காது
முழுதும் பேசி
முழுக்க ந(நி)னைந்து
முதல் சந்திப்பிலேயே
முடிச்சுப் போட்டது அன்பு.

இலைகளை மறைத்து
இதழ்கள் விரித்து
பூத்துக்கிடக்கும் புதுமலர்ப்பொழிவாய்
பார்க்கக் கிடைத்ததுன்
முகம்.

தொட்டில் விலக்கி
முகம் நுழைக்கையில்
கண்வெட்டி
'களுக்'கென்று சிரிக்கும்
சிறுதளிராய்ப்
பிடித்து நிறுத்தியதுன்
புன்னகை

கொடும்பசிக்காரனுக்குக்
கொடுத்த உணவாய்
அடைத்துக்
காற்றுக்கும் வழியற்றுத்
துடிக்க வைத்ததுன்
பார்வை.

எங்கிருந்தோ
எழுந்தோடி வந்த
எண்ணற்ற சொற்கள்
ஒன்றை ஒன்று நெருக்கிய போரில்
அடைத்து அடங்கி
அமிழ்ந்து போனேன்
மவுனத்தில்.

கைபிணைத்து
இதழ்விரித்துக் கொடுத்தவுன்
திடீர் முத்தத்தில்
திகைத்துத் திளைத்துப்
போய்விழுந்தேன்
வெளியின் துளிகளூடாய்

சிறை தகர்ந்து
சிறகு முளைத்து
வரம்பற்ற வான்வெளியின் பால் வீதியில்
கைகோர்த்து
அளவியில்லாத, அலகு தெரியாத
அதீத பேரின்பத்தில்
கரைந்து கலந்து
போனோம் காற்றாய்
கால எல்லைகளின்
கரை உடைத்து...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக