புதன், ஏப்ரல் 07, 2004
மழை-2 துளி - 14
போக்கத்தவன் --- கைகாட்டி
செருப்பிலே கால் நுழைத்து
அவசரமாய்த் தெருவிலிறங்கி,
செம்மண் கூழிலே வழுக்கி விடாது,
வெள்ளை வேட்டி
சாக்கடையோடு சரசமாடாதவகையில்
ஒதுங்கி நடக்கையிலும்,
பேருந்து நிறுத்தத்தில், பெரியவருக்கு
எரிச்சலுடன் மணி சொல்லி,
ஏறிட்டுப் பார்த்தவளின்
கண்ணசைப்பைத் தவிர்த்து
காதில் விழுந்த
ஊர்வம்புகளை ஒதுக்கிக்
கடுப்புடன் காத்திருந்த போதும்,
நிறைகர்ப்பப் பேருந்தில்
உடலைச் செருகி
ஒற்றைக் காலுக்கு இடம் கேட்டு,
படிக்கட்டில்
உயிருமுடலும் ஒருசேர ஊசலாடத்
தொங்கிக் கொண்டு போனபோதும்,
சிடுமூஞ்சிக் கண்டக்டரின்
வசவுகளைக் கழித்து,
சில்லறை வேண்டாம்,
சீட்டைக் கொடு-
சமாதானக் கொடிகாட்டி
இதயம் முழுதையும் பர்ஸில் வைத்து
ஆக்ஸிஜனுக்காக ஏங்கியபோதும்,
ஏறுபவர்களுக்கும்,
இறங்குபவர்களுக்கும் இடையில்
விழி பிதுங்கி , உடல் நசுங்கி
விழுந்து, எழுந்து
நின்ற போதும்
வந்திடாத,
வீட்டிலேயே விட்டுவந்துவிட்ட
முகவரிச் சீட்டின் நினைவு,
'ஆட்டொ வேணுமா சார்?'
என்றொருவன் கேட்டபோது
வந்து தொலைத்தது !
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக