தீபாவளி வாழ்த்துக்கள் ---- துடிமன்னன்(thudimannan@kickedout.com).
விழித்த பின்னும் போர்வைக்குள்ளேயே இருக்கச் சொல்லித் தூண்டுகிற மிதமான குளிரோடும், கூரை நனைத்துச் செல்லும் லேசான தூறலோடும், காலைப் பிறாண்டி போர்வைக்குள் நுழைந்து 'ருரு' வென்று சத்தத்துடன் சூடு தேடும் பூனைக்குட்டியின் மென்மையோடும், 'ச்சூ.. போ' என்று செல்லமாய் விரட்டும் அம்மாவின் குரலுக்கு கீழ்ப்படிய மறுத்து அடுப்படியில் வந்து நிற்கும் ஆட்டுக்குட்டியின் அன்போடும்,
தரை தழுவிச் செல்லும் தங்கையின் பாவாடையைப் பிடித்து இழுக்கும் நாய்க்குட்டியின் குறும்போடும் தனக்கே உரித்தான சிறப்போடு வந்து நிற்கிறது தீபாவளி.
விற்காது கிடந்தவற்றுக்கு விலையை ஏற்றி 90 % தள்ளுபடி அறிவித்து கடை விரித்துக் காத்திருக்கும் வியாபாரிகளின் விவேகம் தாண்டி, சாராய வியாபாரியின் கதவு தட்டி தீபாவளி இனாம் கேட்கும் கடமையைக் காசுக்கு விற்றுப் பிழைக்கும் காவலர் மறந்து, நம் நாட்டின் பொருளாதாரம் போல் சுரண்டப்பட்டுச் சிறுத்துப் போன ' மெயின் ரோடு (?) ' கடந்து, " நீ சின்ன வயசாயிருந்தப்ப குடகனாறு நெம்பி , அழகாபுரி டேம் ஒடஞ்சி ஒடியாந்த தண்ணியில நெம்பிக் கெடந்தது " என்று நம் தாத்தா நினைவூட்டும் குளத்தின் வெடித்த தரைக்குள் கால் சிக்கிக் கொள்ளாமல் கவனமாய் நடந்து, கொஞ்சம் தூரம் என்னுடன் வரமுடியுமா உங்களால் ?
ஏதோ ஒரு கடவுள் எவனோ ஒரு அரக்கனைக் கொன்றதற்கு நன்றி செலுத்துவதாய் நமக்கு நாமே கற்பித்துக் கொண்டு , கொத்தடிமைகளாய் விரலகள் தேய, நகக்கண் உரிந்து புண்ணாக , கந்தகத்தின் மூலக்கூறு வாய்ப்பாடு படித்துத் தெரிந்து கொள்கின்ற வயதில் பள்ளிக்குச் சென்று கல்வி கற்கும் உரிமை மறுக்கப்பட்டு, வயிற்றுப்பாட்டுக்கு வழியற்றுப் போய், பூங்காக்களின் மலர்களோடு மலர்களாய் பூத்து விளையாடும் வாய்ப்பற்று, ஒரு இராமானுஜமாய், ஒரு விவேகானந்தனாய், ஒரு அப்துல் கலாமாய், ஒரு பாரதியாய், தாசனாய் இன்னும் பலராய் இயல முடியாமல், கந்தகம் சுவாசித்துச் சிறிது சிறிதாய் செத்துக் கொண்டிருக்கும் சிறார்களின் உயிரின் மீது , நாம் பற்ற வைக்கும் நெருப்பின் வழியாக வெந்து தீய்வது நிச்சயமாய் நரகாசுரன் வடிவிலான தீமை அல்ல.
சிந்திக்கச் சுரணையற்று, கல்வியைச் சம்பாதிக்கும் வழி காட்டும் கருவியாக மட்டுமே நினைத்துக் கற்று, தினமும் வம்பு வளர்த்து, அடித்துப் பிடுங்கி, நாற்காலிகளைத் தேய்த்து, வெந்ததைத் தின்று வாழ்ந்து மடிந்து போகும் நமக்குள் இருந்திருக்க வேண்டிய மனிதம்.
மிருகங்களிலிருந்து வேறுபடுத்துவதாகச் சொல்லிச் சொல்லி மார் தட்டிப் பெருமைப்பட்டுக் கொள்ளும் பகுத்தறிவு.
வள்ளுவரிலிருந்து வள்ளலார் வரை நம்முடைய கல்நெஞ்சுக்குள் கசிய வைப்பதற்காய் கத்திக் கத்தி வறண்டுபோன கருணை.
காட்டுக்குள் இலைகளால் மானம் மறைத்துத் திரிந்த நமக்கு நதிக்கரையில் அலையடித்துக் கொண்டுவந்து கொடுத்த நாகரீகம்.
மேற்கத்திய நாடுகளிலிருந்து இளைஞர்கள் தேடி வந்து கொண்டிருக்கும் நமக்கே உரித்தான இறையாண்மை.
புத்தன், ஏசு, முகமது கொட்டிக் கொடுத்த ஆன்மிக நெறி.
வெளிநாட்டு வங்கிகளில் பிச்சையெடுத்துக் கொண்டுவந்தும் எல்லா இந்தியனுக்கும் உணவளிக்கப் பணமற்று, ஒருபருக்கைக் கூட வழியற்றுப் பசியோடு செத்துக்கொண்டிருக்கும் கோடிக்கணக்கான மக்களை மறந்து , இன்னும் சில நாட்களில் இந்த நாடு முழுமையுமாக பல நூறு கோடிக்கணக்கான ரூபாயை எரித்துச் சாம்பலாக்குவதற்குக் களிப்போடு காத்திருக்கும் நாம், உண்மையில் அந்த நரகாசுரன் என்ற பாத்திரமாய் வாழ்ந்து கொண்டிருக்கிறோமல்லாமல் வேறென்ன ?
புராணக் கதைகளுக்குத் தவறாய் உரை எழுதுவதை விடுத்து, ஒரு ஏழைக்கு உணவும் உடையும் கொடுத்து நம் சக மனிதனாய் நடத்துவோம். இயலுமானால் ஒரு ஏழைக் குழந்தையின் வாழ்க்கையில் கல்வி தீபத்தை ஒளிர விடுவோம்.
நம் வீட்டுக்குள் தீபத்தை எற்றி வைப்பதற்குப் பெயரல்ல தீபாவளி. பசித்தவனின் அடுப்பில் நாம் ஏற்றி வைக்கும் தணல்தான் தீபாவளி.
அனைவருக்கும் இதயங்கனிந்த தீபாவளி நல்வாழ்த்துக்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக