புதன், ஏப்ரல் 07, 2004

மழை-1 துளி-14


உதிராத நினைவுகள்.......
ப.முத்துகுமார். yemkay_ps@yahoo.com


ஐந்து வயது நிலவாக
அம்மா அன்புக்கெதிரே நடத்திய
உணவு மறுப்புப் போராட்டமும்....
அதில் அடைந்த பாசத்தோல்வியும்...

பனிக்குளித்த மொட்டுக்களாய்....
மேகலாவின் கரம் இணைத்து ஆடிய
சேற்றுக்குளியலும்.......
கிச்சுக் கிச்சுத்தாம்பூலமும்........

வீட்டுப்பாட நேரத்தைத்
தொலைக்காட்சியில் தொலைத்துவிட்டு,
கணக்கு வாத்தியார் முன் கொலைப்பசுவாய் நின்றதும்........
அவர் தந்த சத்தமான பிரம்பு முத்தங்களும்.........

ரஜினி,கமல் திரையில் காதலிக்க,
மனம் கதாநாயகனாக மாறி-காதல் கடிதத்தை
எதிர் வீட்டு ஜன்னலிடம் நீட்டியதும்,
அதை அவள் அண்ணனிடம் காட்டியதும்........

தியேட்டர் 'க்யூ'வில் மல்லுக்கட்டி
வியர்வைக் குளியலில் பார்த்த படங்களும்......
வருடக் கடைசியில் அணைத்த
பரீட்சைக்காய்ச்சலும்........

'பாஸ்' செய்ய கடவுளுடன்
தேங்காய் உடன்படிக்கை கையெழுத்திட்டதும்......
தேர்வு முடிவு வரும் வரை
பக்திமானாய் அலைந்ததும்.........

கல்லூரி 'ராகிங்கில்'
சட்டையின்றி ஓடியதும்......
பெயர் கேட்கப்போய், அந்த அக்கா
செருப்பைக் கழட்டியதும்........

கல்லூரி நந்தவனத்தில் உறவாடிய
'கடலை'ப்பூக்களும்.....
சந்தேகம் கேட்டுச் சந்தித்த
வெள்ளை மனத்தோழிகளும்.......

மனத்தின் மகரந்தமாய் வந்து
ஒட்டிக்கொண்ட-இந்த
வாசனை மலர்கள்....
காலச்சேற்றில் காயம்படப்போவதில்லை.......
வாழ்க்கைப்புயலில் வாசமிழக்கப்போவதில்லை.....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக