மலரும் நினைவுகள் -பொங்கல் -துடிமன்னன்
மார்கழி மாதத்தின் கடைசி வாரங்களில் எங்கு பார்த்தாலும் சுண்ணாம்பு சிந்திய தளங்களும், சுண்ணாம்புடன் சேர்த்துக் கலக்கப்பட்ட வேதிப் பொருள்களின் மூக்கிலேறும் நாற்றமும் நிறைந்த சூழலும் வீட்டில் காணக் கிடைக்கும்.
தென்னை மரத்துப் பாளையின் அடிப்பகுதியிலிருந்து தயாரித்த 'மட்டை' ஒரு கையிலும் , சுண்ணாம்புக் கலவை நிறைந்த வாளி இன்னொரு கையிலும் , சுண்ணாம்பு அரிக்காமலிருக்க கை கால்களில் கட்டிக் கொண்ட சாக்கு உறைகளும் , தலையில் துண்டுமாய் எல்லா வீடுகளிலும் மனிதர்கள் வெள்ளையடிக்கும் காட்சியில் ஊரே அமர்க்களப்படும்.
'வீட்டுக்கடங்காமல் திரிந்து கொண்டிருக்கும்' என்னைப் போன்ற 'தடிமாடுகளு'க்கு இந்த சமயங்களில் ஏகப்பட்ட கிராக்கி ஏற்படும். புதிய சட்டை, பொங்கலன்று 10 ரூபாய் செலவுக்கு, நிறைய நாட்களாய்
வாங்கித் தராமலிருக்கும் உருண்டையான 'டீக்கடை கேக்' என்று எங்கள் ஒவ்வொருவருக்குமாய் கோரிக்கைகள் வேறுபடும். பொங்கலுக்குத் தேவைப்படும் தேங்காய்களை மரங்களில் ஏறிப் பறித்துத் தரும் கூடுதல் பொறுப்பின் மூலம் எனக்கான தேவை இரு மடங்காகும்.
வெள்ளையடித்தல் முடிந்ததும், போகியன்று வேப்பங்கொத்து, பூளப்பூ, அவாரம்பூங் கொத்து ஆகிய காப்புக் கட்டுவதற்கான பொருள்களைத்தேடி ஒரு பெரிய (சிறுவர்+சிறுமியர்) படை கிளம்பும். ஆற்றுவாரியில் செல்லும் முழங்காலளவு தண்ணீரைத் தாண்டுவதற்காய் கற்கள் தேடிப் பாலம் அமைக்கும் முயற்சியில் அனைவரிடமும் ஓர் ஒற்றுமை தென்படும். பாலம் தாண்டியதும், அவரவர் தேவை நினைவுக்கு வந்து ஆளாய்ப் பறந்து அனைவரும் பூங்கொத்துகளைச் சேகரிக்கும் காட்சி , சுற்றித் திரியும் பட்டாம்பூச்சிகளையும், கம்பங்காட்டில் திரியும் குருவிகளையும் நினைவிற்குக் கொண்டு வரும்.
தேவையான அளவுக்கு ஒடித்த சிலர், இன்னும் தேவை நிரம்பாதவர்களுக்கு உதவி செய்யத் தொடங்குவோம். அனைவருக்கும் தேவை முடிந்த பின், ஆற்றுவாரி ஓரமாயிருக்கும் வேப்பமரத்தில் தொங்கும் கிளைகளில் வித்தை போடுவோம். இப்படியாக விளையாடித்திரிந்த பின் , அவரவர் காடுகளின் மூலைகளில், போர் (வைக்கோல், சோளத்தட்டை, கம்பந்தட்டை இவற்றை அடுக்கி வைத்திருக்கும் அமைப்பு), கிணறு , வீட்டின் தாழ்வாரம் என்று காப்புக் கட்டியதில் 'பெண்டு நிமிரும்'.
பிறகு வீட்டின் பழைய தேவை முடிந்த கிழிந்த, பழைய துணிகள், காகிதங்கள், பிய்ந்த கயிறுகள் அனைத்தும் சேகரித்து வாசலின் மூலையில் சேகரிக்கப்படும். பழைய துணிகள் பெறுவதற்காய் சேரியிலிருந்து வரும் மக்களுக்கு அளித்து மீந்தவை அன்று இரவில் கொளுத்தப்படும். நாள் முழுவதும் அலைந்து திரிந்த அலுப்பில் ஆனந்தமாய் தூக்கம் வரும்.
மறுநாள் விடிந்ததும் , அம்மா கோலம் போடுவதற்குள், பூசணிப் பூக்கள் கொய்து வந்து, பசுமாட்டுச் சாணியில் பிள்ளையார் பிடித்து, பூசணிப் பூவைச் சொருகி கோலத்தின் நடுவில் வைப்பது சொல்லாமலேயே என்க்கு விதிக்கப்பட்ட கடமையாகும். அப்பா கடையிலிருந்து திரும்ப நேரமானால், சாமி கும்பிடும்போது தேங்காய் உடைக்கும் உரிமை எனக்களிக்கப்படும்.
சர்க்க்ரைப் பொங்கலுக்காய் மண்டை வெல்லம் தட்டுகையில் ஆசையை அடக்காமல் கொஞ்சம் வெல்லம் வாய்க்குள்ளூம் போவதுண்டு. பல் விழுந்து முளைக்காத சிறுவர்கள் சாமி கும்பிடுவதற்கு முன் சாப்பிட்டால் சாமி கோபப்படாது என்ற விதித் தளர்வுகளெல்லாம், பல் விழுந்து முளைத்த பின்னும் எங்களால் மீறப்படுவதுண்டு.
சர்க்கரைப் பொங்கலும்,பழங்களும், தேங்காய்ச் சில்லுகளும் தின்று பெருத்த வயிறுடன் மாடுகளை மேய்ச்சலுக்கு ஓட்டிச் சென்றால் வழியிலேயே தூக்கம் வரும். முறை வைத்து மாறி மாறித் தூங்குவோம்.
அடுத்த நாள் மாடு, கன்றுகளைக் குளிப்பாட்டுவதிலும், கொம்புகளுக்குக் காவி அடிப்பதிலும் அப்பாவுடன் உதவிக்குமிருக்க வேண்டும். மாட்டுக் கட்டுத்தரையில் நிற்கும்பொழுது கடிக்கும் ஈக்களின் தொல்லை அனுபவித்தால் மட்டுமே உணர முடியும்.
மாட்டுப் பொங்கல் முடிந்ததும் கரும்புகள் அனைத்தும் பங்கிடப்படும். பற்கள் வலுவற்ற அம்மாவின் கரும்பிலே பங்கு கொள்வதில் அனைவருக்கும் அடிதடியாயிருக்கும். பொங்கல் சோறு,பழம்,தேங்காய் வாங்க
பண்ணையாட்களும், நாவிதர்,வெளுப்பவர் அனைவரும் வரத்தொடங்குவர். நவதானியங்களில் செய்த மாவுருண்டைகளின் சுவை, மாசி மாதம் வரை நாக்கிலிருக்கும்.
நான்காம் நாளன்று வீதியோரத்தில் விளையாட்டுப் போட்டிகளைப் பார்க்கப் போவதுண்டு. இவை அனைத்தும் முடிந்த பின் மறுநாள் பள்ளி சென்றால் வகுப்பு முழுவதும் ஒரே காட்டுக் கூச்சலாயிருக்கும். உண்டவை, உண்ணக் கிடைக்காதபோதும் உண்டதாய்ப் பீற்றிக் கொண்டவை என்பதாய் இரைச்சல் பள்ளியின் மைதானம் தாண்டி கடைவீதிக்குக் கேட்கும்.
மழை பொய்த்துப் போய், மணற்கொள்ளையால் ஆற்றுவாரி சுரண்டப்பட்டு, கிணறுகள் தூர்ந்து போய், வயிற்றுப் பாட்டிற்கு மரங்கள் வெட்டப்பட்டு, மேய்ச்சலினமையால் மாடுகளை விற்று அருகிலிருக்கும் நகருக்கு அண்டிப் பிழைக்க வந்து ஆறேழு வருடங்கள் கழித்து பழைய ஊர் போய்ப் பார்த்தபோது ஏதோ சுடுகாட்டில் காலடி வைத்தது போல் காட்சியளித்தது.
படிக்கக் குழந்தைகளின்றி பள்ளிக்கூடம் கைவிடப்பட்டு, தேர்தலன்று மட்டுமே வாக்குச் சாவடிக்காகத் திறக்கப்படுவதாய் அறிந்தேன். சேரி மக்கள் அனைவரும் சாலைப் பணிக்காக குடும்பத்தோடு ஈரோட்டுப் பக்கம் இடம் பெயர்ந்ததாய்க் கேள்வி. அரிசி சாப்பிடுவது மட்டுமே நாகரிகம் என்றும் நெல் விளைவிப்பது மட்டுமே விவசாயம் என்றும் புனைந்த போலிப் பசுமைப் புரட்சிகளின் கற்பழிப்பில் நவதானியங்கள் எல்லாம் கதைகளில் மட்டுமே வாழ்வதாகக் கேள்வி.
ஆந்திராவின் கந்துக்கடைகளுக்கும், கரூர் சாயப்பட்டறைகளுக்கும், கல் குவாரிகளுக்கும் மக்கள் இடம் பெயர்ந்த பின் ஆங்காங்கே கைவிடப்பட்டு இடிந்து கொண்டிருக்கும் குடிசைகளுக்கப்பால் ஒரு சில கிழடுகள் இன்னும் உயிருடனிருக்கின்றன- ஆவாரம்பூவும் , பூளப்பூவும் என்ன நிறத்திலிருந்தன என்ற உண்மையைத் தங்கள் இதயங்களில் இன்னும் ஏந்தியபடி....
போகியன்று எரிப்பதற்காக இன்னும் மீதமிருக்கின்றன - வறுமையும், மழைதரும் காடுகளை அழித்து வரும் வன்மையும், வாக்குகளின் மதிப்பறியா அறியாமையும், மக்களின் சொத்தைக் கொள்ளையடிக்கும் ஊழல்களும், வறுமை தீர்க்கக் கையாலாகாத அரசுகளும், காலாவதியான திட்டங்களும்...
இந்தியா ஒளிர்வதாய் ஏய்க்கும் விளம்பரங்கள் வருகின்ற தொலைக்காட்சி பார்த்தும், கோடிக்கணக்கான பணத்தை வெளிநாடுகளில் கொண்டுபோய் கொட்டி எடுக்கப்படும் சதை காட்டும் திரைப்பட மாயைகளில் மனதைப் பறிகொடுத்தும், அரசியல் கட்சிகளின் கோஷ்டிப் பூசல்களில் புளகாங்கிதமடைந்தும் கிடக்கின்ற நமது பொங்கல் எப்போது?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக