அன்றொருநாள் தொலைபேசியில்
தொல்லை கொடுத்தபோது
'யாரெ'ன்று கேட்காது
அடையாளம் தெரிந்துகொண்ட
ஞாபகத்திறன்,
மற்றவர்களைப்போல்
என் கவிதைகளைப்
புழக்கடைப்பக்கம் வீசிவிடாது
படித்து உடனடியாக
மற்றவர்களுக்குச் சொல்லி மகிழ்ந்த
உன் பண்பு,
'ஏதோ கிறுக்கன் என்று ஏளனம் செய்த
எத்தனையோ பேருக்கு மாற்றாய்
'எழுதுங்கள்' என்று சொல்லி
முதன்மை வாசகியாகிப்போனது,
டேப் ரெகார்டருக்கு பதிலாய்
டெலிபோன் நோக்கி
கைகளை நீளவைக்கும்
தேன்கலந்த,
அன்பு கசிகின்ற உன் குரல்,
பந்தா இல்லாத, கோபம் வராத
எப்போதும் குறுநகையுள்ள உன் முகம்,
பொய்மை கலவாத, 'நலமா?' என்ற கேள்வி,
தட்டிக் கொடுக்கும் ஒரு தோழமை,
பழகிய மிகக்குறைந்த காலத்தில்
என்னைப் புரிந்து கொண்ட தேர்மை,
இதழ் நடத்துவதற்குப்
பணம் தேவை என்பதை
படிக்கக் கொடுத்த எண்பதுபேரில்
நீ மட்டுமே உணர்ந்து கேட்ட பாங்கு,
எத்தனையோ பெண்களிடம்
என்னைக் கவராத ஏதோவொன்று
சாதாரணமான உன்னிள்
நான் கண்டுகொண்டேன்.
ஒருவேளை
என் சிந்தனைகளுக்கு
நீ ஊடகமாய்ப்
பொருந்திப்போனதால்
எற்பட்ட பரவசமா?
உன்பெயர் சொல்லும்போது
உள்ளுக்குள் ஏதோவொன்று
பொங்கிப் பெருகி
அந்தவொரு கணத்தில்
உடலிலும், மனத்திலும்
ஏனிந்தச் சிலிர்ப்பு?
இந்த உணர்வு
காதலில்லை
காமமுமில்லை
அப்படியானால்,
உன் உடலுக்கு அப்பாற்பட்டு
உன் உள்ளம் தேடித்தவிக்கும்
இந்த உணர்வுக்குப் பெயர்தான் என்ன?
---கைகாட்டி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக