புதன், ஏப்ரல் 07, 2004

மழை-2 துளி - 29

மலராகிய மனசு .... சித்ரா விசுவநாதன்

கிழிந்த துணியாய்க்
கிடக்குதென் மனசு.
கிழித்தவர் தவறா?
கிழிக்க அனுமதித்த என் தவறா?
எனக்கே புரியவில்லை.

அவரவரும் கால்பந்தாய்
எட்டி உதைத்த
இதயம் இது.
உருண்டு உருண்டு
ஒரு வழியாய்
ஓய்ந்து ஒதுங்கிய
மனசு இது.
அனுதாபம் காட்ட வேண்டாம்!
ஆறுதல்கூட சொல்ல வேண்டாம்!
நீயும் உன் பங்காய்
எட்டி உதைக்காமலேனும்
இருந்திருக்கக் கூடாதா?

உன்னை நான் நோகவில்லை.
விஷம் தோய்த்த அம்புகளாய்
வீசிய வார்த்தை தரும்
காயம் உனக்குப் புரிய
நியாயம் இல்லை.
எப்போதுமே
வீசியவனுக்கில்லை
வலியும் வேதனையும்.
பட்டவனுக்குத்தான்
உயிர் கொல்லும் நஞ்சு.
அதனால்
உன்னை நான் நோகவில்லை.

இதயம் சுற்றி
இரும்பு அரண் அமைக்க
பிரயத்தனம் செய்துதான்
பார்க்கிறேன் நானும்.
மறுபடி மறுபடி
மனசு மலராகி
உன் நந்தவனம்
நாடியே செல்கிறது.
நான் என்ன செய்ய?

கசங்கிய நெஞ்சின்
வேதனை இப்போதுகூட
என்ன தெரியுமா?

நீ இருக்கும்
இதயம் இது!
எங்கேனும் உனக்கு
வலித்து விடப் போகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக