தென்றல் - விமர்சனம்
-------துடிமன்னன் (thudimannan@kickedout.com)
திரைப்பட விமர்சனம் எதுவும் ஓடையில் இது வரை வெளிவராதிருப்பினும், ஒரு எழுத்தாளனைப் பற்றிய படம் என்பதால், நம் கருத்துக்களை முன் வைக்க வேண்டி இந்த விமர்சனம் வெளியாகிறது.
சமூக அக்கறையுள்ள ஒரு எழுத்தாளனின் மீது ஒரு வாசகி கொண்ட அன்பு காதலாகி, தாயை இழந்தபின் தங்க இடம் தேடித் திரிகையில் அந்த எழுத்தாளனுக்கே தன்னைக் கொடுத்து அவன் குழந்தைக்குத் தாயுமாகிறாள். அவன் முன்னேற்றத்துக்குத் தடையாகி விடுவோம் என்ற எண்ணத்தில் யாரிடமும் உண்மையைச் சொல்லாமலே அவள் வளர்த்துவந்த அவளது மகன், வீட்டை விட்டு ஓடிப்போய் அந்த எழுத்தாளரிடமே கொஞ்ச நாள் வளர்கிறான். இறுதியில் எழுத்தாளனுக்கு உண்மை தெரிந்து வாசகியைத் தேடும்போது அவள் மரணப்படுக்கையில் கிட(டை)க்கிறாள். அவள் சாவுக்குப் பின் எழுத்தாளன் மகனுக்காய் வாழ்கிறான் என்ற முற்றுப்புள்ளியோடு , சமூக அக்கறையைக் காட்டிலும் குடும்ப வாழ்க்கை முக்கியம் என்று சொல்லி முடிகிறது படம்.
கதை கேட்கும்போது நன்றாகத்தானிருக்கிறது. இருப்பினும் அதை படமாகப் பார்க்கும்போது நம்மை அறியாமலே நம் காதில் உள்ள ஓட்டையை கை தடவிப்பார்க்கிறது.
படத்தின் அடிப்படையாகக் கட்டமைக்கப்படும் கீழ்க்கண்ட கருத்துக்களை எடுத்துக் கொள்வோம்
1. எழுத்தாளன் நலங்கிள்ளி(பார்த்திபன்)யின் சமூக,தமிழ் அக்கறை, தன்மானம் மற்றும் பிற
2. வாசகியின் கண்ணில்லாத (மூளையில்லாத) காதல் & வாசகி எதிர்கொள்ளும் சமூக அவலங்கள்
1. கதாநாயகனான எழுத்தாளன் நலங்கிள்ளி சமூக அக்கறை கொண்டவன் என்பதைக் காட்டுவதற்காக அமைக்கப்பட்ட காட்சிகள் சில மிகவும் செயற்கையாகப் படத்துக்கு வெளியில் துருத்திக் கொண்டு நிற்கின்றன. அவை பெரும்பாலும் எந்த ஒரு ஆரம்ப முடிச்சுமில்லாமல் திடீரென்று படத்தில் வருகின்றன. எடுத்துக்காட்டாக தமிழில் வழிபாடு செய்ய வேண்டும் என்ற கூட்டத்தில் நலங்கிள்ளி முன்னிற்பதாகக் காட்டப்படும் காட்சி. இந்தக் காட்சி வருவதற்கு முன், இந்த பிரச்சினை குறித்து கொஞ்சமாவது ஒரு உரையாடலோ அல்லது வேறு வடிவான அறிமுகமோ இல்லை. இது ஒட்டவைத்தும் ஒட்டாமல் தொங்கிக் கொண்டிருக்கும் ஒரு பிசிறாகத் தெரிகிறது.
சமூக அக்கறை கொண்ட நலங்கிள்ளி, சக மனிதர்களிடம் எரிந்து விழுவதும், விலங்குகளிடம் பாசமாக இருப்பதாகக் காட்டப்படுவதும் ஒரு முரண். எழுத்தாளன் நலங்கிள்ளியின் தன்மானத்தைக் காட்டுவதற்காக கதை கேட்டு வந்தவன் மீது நாற்காலியை எறிவது போன்ற காட்சி, அவனது திமிர் என்பதாகத்தான் நம்மில் உணர்வுகளை ஏற்படுத்துகிறது. நடைபாதை வாசிகள்மீது சகட்டுமேனிக்கு நலங்கிள்ளி எறியும் வார்த்தைகள் அவனது சமூக அக்கறை மீது நமக்கு ஐயத்தை ஏற்படுத்துகிறது.
ஹோட்டல் அறையில் நலங்கிள்ளியிடம் தான் அவனது வாசகி என்று நாயகி அறிமுகம் செய்துகொண்ட பின்னும் அவள் யார், என்ன என்று கேட்காமலேயே அவளைக் காசுக்குப் படுக்க வந்தவளாக நாயகன் நினைப்பதும், வந்தவள் விலைமகள் அல்ல என்று தெரிந்தபின்னும் கொஞ்சம் கூட நாயகன் கவலைப்படாததும், தனது தவறுக்கு வருந்தாமல் நாயகிக்கு படுத்ததுக்குப் பணம் கொடுத்து விட்டு 'இன்றைக்கு என் பிறந்த நாள். என்னைப் போலவே நீயும் சந்தோஷமா இரு' என்று சொல்லி வழி அனுப்புவதாய்க் காட்டுவது படத்தின் ஒரு மிகப் பெரிய ஓட்டை. அந்தப் பணத்தை நாயகி பத்திரமாக வைத்திருப்பதாகவும், குழந்தைக்கு வைத்தியச் செலவுக்கு அந்தப் பணம் பயன்படுவதாகவும் காட்டுவது சகிக்கவில்லை.
இது பெண்கள் மீதான திரைப்படவாதிகளின் ஒரு வக்கிர, கீழ்த்தரமான பார்வை.
மேலும் இது எந்த வகையிலும் நலங்கிள்ளியை ஒரு சமூக அக்கறையுள்ள எழுத்தாளனாகக் காட்டாமல் அவனை ஒரு மிகப்பெரிய சாடிஸ்டாகவும், மன நோயாளியாகவும், பெண்களை ஒரு போகப் பொருளாக நினைக்கும் ஒரு சராசரிக்கும் கீழான மிருகமாகவும் நமக்குப் புரிய வைக்கிறது.
2.இப்படிச் சீரழித்தவனைக் கேள்வி கேட்காமல் கடவுள் போல நினைத்து, யாருக்கும் சொல்லாது தனக்குள்ளே வைத்து (மகிழ்ச்சியாக ?) சித்திரவதை அனுபவிக்கும் நாயகி, தனக்குச் சோறும் போட்டு, துணையாகவுமிருந்து, நாயகியின் மகனைத் தன்மகனாகப் பாவித்துப் பாலூட்டி வளர்த்த தோழிக்குக் கூட உண்மையைச் சொல்லாமலே இருப்பது கொஞ்சம் கூடப் பொருந்தவில்லை. தனக்கு விருப்பமான எழுத்தாளனுக்கு மணமாகிற்றா இல்லையா என்றுகூடத் தெரியாமல் நாயகி அவன் வீட்டுக்குள்ளிருந்து அவன் பேசும் பேச்சை வைத்து அவன் குடும்பத்தோடு வாழ்வதாக நினைத்து வெளியேறுவதும் படத்தின் இன்னொரு பெரிய ஓட்டை.
தாய் இறந்த பின் தனக்கு அடைக்கலம் கொடுத்த பெரிய மனிதரின் வீட்டை விட்டு சொல்லிக்கொள்ளாமல் வெளியேறுவதும் மிக செயற்கையாக உள்ளது. அப்படி தன் விருப்பமான எழுத்தாளனைத் தவிர வேறு யாருக்கும் தன் மனதில் இடமில்லையென்று சொல்லும் நாயகி, தன் விருப்பத்தை/அவன் குழந்தைக்குத் தான் தாயானதை நாயகனிடம் சொல்ல நிறைய வாய்ப்புகள் கிடைத்தும் பேசாமடந்தையாய் நிற்பது ஒன்றும் நம்பும்படியாய் இல்லை.
குடிசை தீப்பிடித்து எரிவதை வேடிக்கை பார்த்துப் புலம்பிக்கொண்டிருக்கும் கும்பலைக் காணும்போது 'நெட்டை மரங்களென நின்று புலம்பினார்' என்ற பாரதியின் வரிகள்தான் நினைவுக்கு வருகிறது. இந்தமாதிரி வேடிக்கை மட்டுமே பார்க்கும் கும்பல்களை எல்லாத் தமிழ்ப் படங்களிலும் காட்டுவதை ஏன் இயக்குனர்கள் மாற்றிக் கொள்வதில்லை என்பது ஒரு புரியாத புதிர்.
மொத்ததில் ஒரு எழுத்தாளனைப் பற்றி எந்தவிதமான தவறான கருத்துக்களை மக்களிடம் எடுத்து செல்கிறோம் என்ற உணர்வே இல்லாமல் கதை பின்னப்பட்டிருக்கிறது. சமூக அக்கறையோடு எழுதிய / எழுதுகிற எத்தனையோ போராளிகளின் வாழ்க்கை கண்முன்னால் இருக்க , கீழ்த்தரமான குணமுள்ள ஒரு கதாபாத்திரத்தை எழுத்தாளன் என்ற பெயரில் கதாநாயகனாக்கும் முயற்சியில் தங்கர் பச்சான் இறங்கியிருப்பது வருத்ததை அளிக்கிறது.
இனிமையான பாடல்கள், தமிழரின் அடிப்படை இசைக்கருவியான 'பறை' க்காக நாயகன் குரல் கொடுப்பது , வழியற்றவர்களுக்கு வாழ உதவுகின்ற மடங்கள் இன்னுமிருக்கின்றன என்ற உண்மை, எழுத்தாளன் பேசும்போது கல்லெறியாமல் அமைதியாக உட்கார்ந்து கேட்கும் மக்கள் கூட்டம் ஆகிய காட்சிகள் நமக்கு ஓரளவிற்கு ஆறுதலளிக்கின்றன.
மொத்தத்தில் இது நம் நேரத்தைக் கொன்று நமக்குக் காது குத்தும் இன்னும் ஒரு வியாபாரப் படம் அவ்வளவே.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக