அருவி - அ.சிவகாமசுந்தரி (a.sivagamasundari@gail.co.in)
வெள்ளிப் பனிமலையே உருகி
வெள்ளமெனப் பாய்ந்தது போல்
வற்றாமல் ஒழுகுகின்ற அருவியே!
காவிரியும் நடைதளர்ந்து
பொய்யாக் குலக்கொடியும்
பொய்த்துவிட்ட பிறகு
உன்னிடம் மட்டும்
நீர் ஒழுக்கு எங்கிருந்து வந்தது?
ஓ! இஃது,
வரதட்சிணை கொடுமையினால்
வருந்தி அழும் பெண்களின்
வற்றாத கண்ணீரோ?
புகுந்தகம் சிறக்கப் பாடுபடும்
புதுமணப் பெண்ணின்
கயல்விழி மலர்களில்
நித்தமும் மாமியாரின் கொடுமையால்
முத்தாக அரும்பிய
கண்ணீர் துளிகளின் பெருக்கோ?
இவையிரண்டும் இல்லையெனில்
சாகுமளவும் பிறர்க்கீயா
கஞ்சர்களின் கல்லாப் பெட்டியைக்
கவிழ்த்ததனால் புறப்பட்ட
செல்வ வெள்ளமோ?
மூலை முடுக்குகளிலும்
முகத்துதி இல்லாமல்
உலகமெல்லாம் ஒளிவீசத்தன்
உடலைக் கரைத்துக்கொள்ளும்
சிறு மெழுகுவர்த்திகள் உருகியதன்
ஒட்டுமொத்த ஓட்டமோ?
இதுவரை உரக்கப் பேசிக்கொண்டிருந்த
அருவியே!
இப்பொழுது ஏன்
அமைதியாய் இருக்கிறாய்?
ஓ! நீயும் என் கேள்விகளுக்கு
விடையிறுக்க மறுக்கும் இந்த
வெட்டி சமுதாயத்தில்
ஓர் உறுப்பினன்
ஆகி விட்டாய் போலும்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக