புதன், ஏப்ரல் 07, 2004

மழை-2 துளி-2

பொது நூலகம் - அ.சிவகாமசுந்தரி
(a.sivagamasundari@gail.co.in)


கண்ணெதிரே கடல் விரிந்தாற்போல்
கண்கொள்ளாப் புத்தகங்கள்
காண்போர் கற்போர்
குழந்தைகள் முதியோர்

ஆடவர் பெண்டிர்
அனைவர்க்கும் ஏற்றாற்போல்
ஆவலைத் தூண்டிடும்
அளவற்றப் புத்தகங்கள்

பல்வேறு துறைகளிலும்
பன் மொழிகளிலும்
பல நாட்டவரும்
படிக்கும்வண்ணம் புத்தகங்கள்

அமர்ந்திருந்தோர் கைகளிலே
அவசியம் ஒரு புத்தகம்
அவரவர் தேர்ந்தெடுத்த
அருமைப் புத்தகங்கள்

அதிலே விளக்கங்கள் கிடைத்ததா?
வேண்டியதைப் பெற முடிந்ததா?
படித்தது பயன் தந்ததா?
படித்தோரே பதில் சொல்வார்

அண்மையில் நின்றவர்
அற்புத நூலென்று
தான்படித்த புத்தகத்தை
தந்து படிக்கச் சொன்னார்

என்ரசனை என்குறிக்கோள்
ஏதொன்றும் அறியார்;
இருக்கட்டும் என் தேவைக்கும்
இங்கு புத்தகம் இருக்குமல்லவா?

இதோ! நான் விரும்பிய
நல்லதொரு புத்தகம்
இது நயமுடன் விளங்குமா?
நன்மைதான் பயக்குமா?

நம்பிக்கை என்னிடம் உள்ளது;
நாமெல்லாம் படிப்பதற்கு
என்னே இந்த உலகம்
எத்தனை பெரிய பொதுநூலகம்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக