தொலைந்து போனவர்கள்
- சித்ரா விஸ்வநாதன்.
மதம் தேடி மதம் தேடி
மனம் தொலைத்தவர்கள்.
கடவுள் தேடி கடவுள் தேடி
கண்ணியம் தொலைத்தவர்கள்.
இரத்தம் தேடி இரத்தம் தேடி
இதயம் தொலைத்தவர்கள்.
மிருகம் தேடி மிருகம் தேடி
மனிதம் தொலைத்தவர்கள்.
எதைத் தேடுகிறோம்
என்றே புரியாமல்
எதையோ தேடி எதையோ தேடி
தன்னைத் தொலைத்தவர்கள்.
தொலைந்து போனவர்கள்
தேடிச் சேர்த்து
நேர் வழியில்
நடத்திச் செல்ல
எவருக்கும் இங்கே
நாட்டமில்லாமல் போய்விட்டது.
தட்டுத் தடுமாறித்
திரும்பி வந்தாலும்
தொலைந்து போனதாய்க்
கணக்குக் காட்டித்
தூக்கிலிடவும்
தயங்காத
தலைவர்கள்தான்
இருக்கிறார்கள்.
இப்படியே போனால்
என்
அடுத்த வீடே
அண்டை நாடாய்ப்
போய்விடும்
அபாயம் இருக்கிறது!
ஓராயிரம் ஆண்டுகளில்
ஒற்றை மனிதனாய் -
தொலைந்தவர்கள் சேர்த்து
தேவையானதை மட்டும்
தேடிச் சேர்ப்பவனாய் -
ஒருவன் தோன்றுவதாய்
புராணங்கள் சொல்கிறது.
இன்னமும் எரிந்து
இடுகாடாய்ப் போவதற்குமுன் -
ஏசுவோ நபிகளோ
ராமனோ கிருஷ்ணனோ -
மேய்ப்பவன் ஒருவனை
சீக்கிரம் அனுப்புங்கள்
மொத்த ஆடுகளும்
மொத்தமாய்த் தொலைவதற்குமுன் .......
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக