திங்கள், ஏப்ரல் 12, 2004

ஓடை பழைய படைப்புகள் 16

ஓடை மே 2000 தாள் 4

கடிதம் - கைகாட்டி

சதாசிவத்துக்கு,
நீண்ட காலமாய் என்னுள் தேங்கிக் கிடந்த சிந்தனைகளை, என்னைக் குடைந்து கொண்டிருந்த கேள்விகளை உனக்குத் தெரிவிக்க வேண்டிய விருப்பத்தில் ( கட்டாயத்தில் என்று கூடச் சொல்லலாம் ) இந்தக் கடிதத்தை உனக்கு எழுதுகிறேன்.
வாழ்க்கை என்பதைப்பற்றி என்னதான் பிறருடய கருத்துகளைப் படித்தாலும், கேட்டாலும், அதனை வாழ்ந்து பார்க்கும்போதுதான் அதன் உண்மையான அனுபவம் கிடைக்கிறது. சிலர் ஏன் பிறந்தோம் என்று தெரியாமலேயே வாழ்ந்து செத்துப் போய்விடுகிறார்கள். ஆனால் என்னால் ஏதோ போகிறது, நாமும் போகிறோம் என்று சும்மா இருக்க முடியவில்லை. எதையேனும் சாதித்தே தீர வேண்டும் என்ற வேட்கை இல்லாவிடினும், வீணாய் வாழ்ந்து மடிவதை என்னால் சீரணிக்க முடியவில்லை.

என்னைச் சுற்றிய மனிதர்கள் என்னை நிறையவே பாதிக்கிறார்கள். நேற்றுவரை என்னோடு டயர் வண்டி ஓட்டி விளையாடியவர்கள் இன்று திருமணம் செய்து கொண்டு விட்டார்கள். இரண்டு பேர் இரண்டு பேரை இழுத்துக் கொண்டு (?!) ஓடிவிட்டார்கள் (!).
என்னுடன் படித்த பெண்கள் 'குவா குவா' வுக்குச் சொந்தமாகி விட்டார்கள்.

இவை எல்லாம் 'நான் இன்னும் சிறுபையன்' என்ற எண்ணத்தைச் சுத்தமாகப் போக்கடித்துவிட்டன. இன்னும் இரண்டு வருடங்களில் நான் ஒரு எஞ்சினீயர் . அதற்கடுத்த மூன்று நான்கு வருடங்களில் என்கென்று குடும்பம், மனைவி. எப்படி இது? என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை.

ஒரே பொருள் முன்பு தெரிந்ததற்கும், இப்போது தெரிவதற்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளன. ஒவ்வொன்றின் மீதான என் நோக்கும் போக்கும் மாறி இருக்கிறது. நேற்று வரை என்னைக் கண்டு கொள்ளாத என் தந்தை இப்போது எல்லாமே என்னைக் கேட்டுத்தான் செய்கிறார். ( என்னைக் கேட்டாலும் கடைசியில் தான் நினைப்பதைத்தான் செய்வார் என்பது வேறு விஷயம் !! ) ஊரில் இருப்பவர்கள் என்னிடம் பழகும் முறை மாறி இருக்கிறது. நேற்று வரை நின்ற இடத்தில் இன்று உட்காரும்படி உபசரிப்பு.

எது எனக்கு இந்த அங்கீகாரத்தை வழங்கியது? எது திடீரென என்மீதான மற்றவர்களின் பார்வையை மாற்றியது? கேள்விகள், கேள்விகள், கேள்விகள் மட்டுமே.
எனது பேச்சு மாறி இருக்கிறது. எனது விளையாட்டுத்தனம் போய்விட்டது. பொறுப்புகள் கூடியது போன்ற சுமையான உணர்வு தோன்றுகிறது. முன்பு போல் அல்லாது, ஒவ்வொரு செயலுக்கும் முன்னால் பலமுறை சிந்திக்கச் சொல்கிறது.

எங்கிருந்து, எப்படி வந்தது இந்த மாற்றம்? நான் யார்? என்னுடைய அடுத்த அடி எந்தப் படிமீது? எதைச் சாதிக்கப் பிறந்தேன் நான்? எது இந்த நிமிடத்தில் இதை எழுதுமாறு என்னை ஆட்டி வைக்கிறது? மண்டை நிறையக் கேள்விகள்.

பெண்களைப் பற்றிய எண்ணங்களும் மாறி இருக்கின்றன. இதுவரை அழகான பெண்ணைப் பார்த்தால் இரண்டு முறையாவது திரும்பிப் பார்க்கச் சொல்லும் மனம். அவள் சிரித்தால் ( ஏன் என்று தெரியாமல் ) நானும் சிரித்த அனுபவங்கள் உண்டு. ஏன் காதலித்த (!) அனுபவம் கூட இலேசாக (?) உண்டு.

ஆனால் தற்போது அப்சரஸைப் பார்த்தாலும் மனம் எனோ அலை பாய்வதில்லை. எல்லாம் மிகச் சாதாரணம் என்பதாகவும், இதில் என்ன இருக்கிறது? எதோ பெண்ணின் முகம் என்பதாகவும் எனக்குத் தோன்றுகிறது. ' நிலவா ? மலரா? ' என்று நிலை தடுமாற வைத்த முகம், இன்று ' குப்பை ' எனத் தோன்றுகிறது. மனம் ஒவ்வொரு முகத்திற்கு அப்பாலும் எதையோ தேடுகிறது. அழ்கு மட்டுமே ஒரு பெண்ணிற்கான அளவுகோலா என்ற கேள்வி அலையாய் எழும்பி நிற்கிறது.

உனக்கு இந்த மாதிரி எண்ணங்கள் ஏற்பட்டதுண்டா ? இல்லை, ஒருமுறையாவது வாழ்க்கையின் போக்கில் ஒரு ஓரமாக நின்று கவனித்ததுண்டா? எழுதவும்.

கருவூர், இப்படிக்கு,
16 - 9 -96 கைகாட்டி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக