புதன், ஏப்ரல் 07, 2004

மழை-1 துளி-7


எப்பொழுதும் - ஆங்கில மூலம் : போன் ஜோவி
தமிழில்- கைகாட்டி


இந்த ரோமியோ இரத்தம் சிந்துகிறான்,
ஆனால் உன்னால் காண முடியாது
உணர்வுகளால்
உதைபட்டதாலான
குருதியை

நீ விட்டுச் சென்றதிலிருந்து
பெய்கின்ற மழையின் வெள்ளத்தில்
நான் மூழ்கிக் கொண்டிருக்கிறேன்
நான் எப்பொதுமே கடைசிவரை போராடுபவன்
இருப்பினும் கைவிடலாயிற்று
உன் இன்மையால்

என்னால் எந்தவொரு காதல் பாடலையும்
பாட இயலாது இனிமேல்
முன்பிருந்த
உணர்வுகளின் உருக்கத்தோடு

என் செல்லமே,
நான் இப்போதும் காதலிக்கிறேன் ,
விண்மீன்கள் ஒளிர்வதை நிறுத்தும் வரை,
சொர்க்கம் வெடித்துச் சிதறும் வரை,
வார்த்தைகள் கவிதையாகாதவரை,
நான் எப்பொழுதுமிருப்பேன்
உன் நினைவுகளோடு
என் மூச்சின் கடைசிச் சுவாசம் காற்றில்
கலக்கும் வரை
நான் செத்தொழியும் வரை
உன்னை காதலித்திருப்பேன்
எப்பொழுதும்

நீ விட்டுச் சென்ற படங்கள்
நினைவுறுத்துகின்றன வேறொரு வாழ்க்கையை
சில நம்மை சிரிக்க வைத்தன
அழ வைத்தன சில,
என்னிடமிருந்து
விடை பெற வைத்ததொன்று

என் கண்மணியே,
என்னால் என்ன விலை தந்து விட முடியும்
உன் கூந்தலில் என் விரல் துழாவ
உன் உதடுகள் தொட்டு
அரவணைக்க

உன் பிரார்த்தனையின்போது
என்னைப் புரிந்துகொள்
நான் தவறுகள் புரிந்தவன்தான்,
நான் மனிதன், மகானல்லவே.

அவன் உன்னை அருகே இழுத்து அணைக்கும்பொழுது
நீ கேட்கக் காத்திருந்த மொழிகளை
உன் செவிகளுக்குள் உதிர்க்கும்பொழுது
அவனாக இருந்திருக்க நான் விழைகிறேன்
ஏனெனில்
அந்த மொழிகள் என்னுடையவை
காலம் மறையும் கணத்துளியின் வரை
உனக்கு சொல்வதற்காக
நான் இதயத்தில் வைத்திருந்தவை

என் கண்ணே,
உன்னை காதலித்திருப்பேன்
எப்பொழுதும்
எப்பொழுதுமிருப்பேன் உன் நினைவுகளுடன்

நீ அழச் சொல்லியிருந்தால்
அழுது கரைந்திருப்பேன்
நீ சாகச் சொல்லியிருந்தால்
செத்திருப்பேன் நம் காதலுக்காக

என் செல்லமே,
ஒரேயொருமுறை
என் முகத்தைப் பார்,
இந்த வார்த்தைகளுக்காக
நான் தர இயலா விலையொன்றுமில்லை
இந்த மாய தாய விளையாட்டில்
நான் அதிர்ஷ்டமற்றவனாய்..

என்னுயிரே!
நாம் இன்னொருமுறை முயன்றால்
நம் பழைய கனவுகளை
சேகரித்துவிட முடியும்
உயிரோட்டத்துடன்
மீட்டெடுத்துவிடலாம்
நம் பழைய வாழ்வையும்
கதிரவன் ஒளிர்கின்றவொரு இடத்தையும்

என் செல்லமே,
நான் இப்போதும் காதலிக்கிறேன் ,
விண்மீன்கள் ஒளிர்வதை நிறுத்தும் வரை,
சொர்க்கம் வெடித்துச் சிதறும் வரை,
வார்த்தைகள் கவிதையாகாதவரை,
நான் எப்பொழுதுமிருப்பேன்
உன் நினைவுகளோடு
என் மூச்சின் கடைசிச் சுவாசம் காற்றில்
கலக்கும் வரை
நான் செத்தொழியும் வரை
உன்னை காதலித்திருப்பேன்
எப்பொழுதும்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக