புதன், ஏப்ரல் 07, 2004

மழை-1 துளி-3


திசை மாறும் பயணங்கள்
- சிவகாம சுந்தரி (a.sivagamasundari@gail.co.in)


உலகத்தின் வாசற்படியில்
தட்டுத்தடுமாறி நடைபயிலும்
தத்தைகள் முதன்முதலாய்
எதிர்கொள்ளும் பயணங்கள்

வரையறுக்கப்பட்ட பாதைகளை
விட்டுவிலகி தன் போக்கில்
வெட்டவெளியில் சிறகடிக்கும்
சிட்டுக் குருவியின் பயணங்கள்

புதுமையைத் தேடி
புரட்சிப் பாதையில்
இளைய அரும்புகள்
எடுத்து வைக்கும் பயணங்கள்

பருவக் காற்று அடிப்பதனால்
பாதைகள் புலப்படாமல்
பாதிவழியில் நின்றுபோகும்
பேதைகளின் பயணங்கள்

நிலையில்லா இவ்வுலகில்
நேசமில்லா மனிதர்களாலும்
நேசமுள்ள நினைவுகளாலும்
நிலைகுலைந்த பயணங்கள்

உள்ளங்கள் கசிந்தபோதும்
உண்மைகள் கசந்தபோதும்
ஊமையாய் நிற்கச் செய்த
உதவாக்கரைப் பயணங்கள்

கவலைகளைக் கண்ணீரில்
கரைத்துவிட்டு, கால்களோடு
உள்ளமும் சேர்ந்து நடக்கும்
ஒருமித்த பயணங்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக