புதன், ஏப்ரல் 07, 2004

மழை-1 துளி-2


கடவுள் வணக்கம் - சகாரா
(முள்ளின் நுனியிலும் ஆகாயம் தொகுப்பிலிருந்து)


பாட்டனின் முதுகில் உப்புமூட்டை ஏறி
காதுகடித்துக் கிச்சுக்கிச்சு மூட்டி
கண்ணைப் பொத்தி விளையாடியதில்லை.

பாட்டியின் மடியில் பழங்காலத்து
ராஜாக் கதைகளை ரசித்தபடியே
தூங்கிப் போன அனுபவமில்லை.

தாத்தாவின் தடியை ஒளித்துவைத்து
மூக்குக் கண்ணாடியைப் பிடுங்கிப் போட்டு
முகஞ்சுழித்துக் காட்டி வாங்கிக் கட்டிக்கொண்ட
மகிழ்ச்சி கிட்டியதில்லை.

அம்மாயி அருகமர்ந்து
குழிவிழுந்த கன்னந்தாங்கிய
பொக்கைவாய்ச் சிரிப்புப் பொக்கிஷத்தால்
ஒரு முத்தச் சுகம் பெற்றதில்லை.

மாமாவோ மாமியோ
அத்தையோ மாமனோ
மடியில் தூக்கிவைத்துத்
தலைகோதி விட்டதில்லை.

சித்தப்பாவோ பெரியப்பாவோ
சின்னம்மா பெரியம்மாவோ
தளர்ந்த நேரத்தில் தட்டிக் கொடுத்து
தைரியம் ஊட்டியதில்லை.

எல்லாரும் முகமற்றுப் போய்
உறவறுந்த அநாதை பூமியில்
பெற்றுப் போட்டு
எல்லாமாய் இருந்து

தத்துவம் கற்பித்தவள்
தாய்
சத்தியம் கற்பித்தவன்
தந்தை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக