புதன், ஏப்ரல் 07, 2004

மழை-1 துளி- 1


தாழ் திறவாய் ---- கைகாட்டி


வெட்டரிவாள் தாங்கி
வில்லனாய் எந்த
மாமனும் வரவில்லை.

கவுரவ வேடம் பூண்டு
எந்த அப்பனும்
துப்பாக்கி காட்டி மிரட்டவுமில்லை.

' நான் செத்துப் போவேன்'
என்று
எந்தத் தாயும்
பாசத்தடையைப் பதிக்கவுமில்லை.

''கைவிடவில்லையெனில்
காலை வெட்டுவேன்''
என்று
எந்தச் சகோதரனும்
கத்தி தீட்டவுமில்லை.

சாதிப் பிணைப்புகள்
அவ்வளவாய் ஒன்றும்
சதிவலை பின்னவுமில்லை.

பழிதூற்றி
ஊர்விட்டு விரட்ட
இந்தச் சமுதாயமும்
எண்ணவில்லை.

இப்படியாக,

பூசாரிகள்
பூத்தூவத் தயாராய் இருந்தும்,

என் தேவியே !

ஏன் பூட்டிக்கொள்கிறாய்
உன் கோவிலின் வாசலை ?

ஏன் சூட மறுக்கிறாய் - இந்த
ஏழை பக்தனின்
எருக்கம் பூக்களை ?

புன்னகை தவழும்
உன் உதடுகள் உச்சரிக்கும்
அந்த
மூன்று வார்த்தைகளுக்காகத்தான்
நான் காத்திருக்கிறேன்.

சொல்லிவிடு
உன் இதழ் திறந்து
சொல்லிவிடு -- இல்லையெனில்
இன்றே
இக்கவிதைக்குக்
கொள்ளியிடு.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக