புதன், ஏப்ரல் 07, 2004
மழை-1 துளி-12
தனியொருவனுக் குணவிலையெனில்..... சகாரா
பேருந்து ஓடிக்கொண்டிருக்கிறது. எதையெதையோ இலக்காக வைத்து ஓடிக்கொண்டிருக்கிற நம்மைப் போலவே. இருக்கைகளுக்கும் மேலாக மனிதர்கள் கூட்டம். தகுதிக்காக நாற்காலிகள் காத்திருப்பதில்லை.
ஒவ்வொரு முகத்திலும் கவலையின் சாயல்கள். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வேதனை. நான் வந்தவேலையை விட்டுவிட்டு மனதில் சலனங்களோடு திரும்பிக் கொண்டிருக்கிறேன்.
மகாத்மாவின் முகத்தைவிட அந்த பிச்சைக்காரனின் முகம் நன்றாகவே நினைவில் பதிந்து விட்டது. பெருந்து முன்னோக்கி ஓட, நினைவு பின்னோக்கி நகர்ந்தது.
கரூர் முத்துக் குமாரசாமி பேருந்து நிலையம்..
ஏதோ எழுத வேண்டுமே என்பதற்காக எழுதுவதுபோல ஓட்டையாகிப் போன பேருந்துகள் ஓட வேண்டுமே என்பதற்காக ஓடிக் கொண்டிருந்தன.
வெயில் உச்சகட்டத்தில் இருந்தது. நான் வந்திறங்கிய பேருந்து வந்த வழியிலேயே, தொலைத்துவிட்ட வாழ்க்கையைத் தேடிக்கொண்டுபோனது.
பேருந்து நிலையத்திற்கு முன்னாலிருந்த நியாயவிலைக் கடையின் நீண்ட வரிசையில் நிறைய வயிறுகள் காத்துக்கிடந்தன. நிழற்குடையின் கீழே நின்றுகொண்டிருந்த எனக்கு வியர்த்துக் கொட்டியது. அதன் கீழும் கச கசவென்று மனிதத்தலைகள் நிரம்பியிருந்தன.
எது முதலில் புறப்படும், எது எங்கே போகும் என்று தெரியாத சிலர் தெரியாத பலரிடம் விசாரித்து ஏமாற்றத்தை வாங்கிக் கொண்டிருந்தார்கள். அங்கங்கே திருமணப் பேச்சுகளும் வரதட்சணைப் பிரச்சினையில் வாழ்விழந்து போன இள மொட்டுக்களின் இயலாமைகளும் காதில் மோதின.
நான் மீண்டும் நியாய விலைக் கடையில் என் பார்வையை ஓடவிட்டேன். கடைவீதியில் அவ்வளவாகக் கூட்டமில்லை. ஒருவன் ஒவ்வொரு கடையாக ஏறி இறங்கி ஏதோ சொல்லிக் கொண்டு வந்தான். என் நினைவுகள் மாலை நடக்கப் போகும் விழாவைக் குறித்து சுற்றி வந்தன.
இன்று பாரதியாரின் பிறந்த நாள் விழா. இளைஞர் மன்றத்தின் சார்பாக நடைபெறும் இவ்விழாவில் பேசுவதற்காக பேராசிரியர் ஒருவரை அழைத்துவர ஏற்பாடாகியிருந்தது. ஏற்கனவே கூலி பேசியாகிவிட்டது. போய் அழைத்து வரும் பொறுப்பு என்னிடம் ஒப்படைக்கப் பட்டது.
தூரத்தில் பார்த்த அவன் இப்போது எதோ பாடிக்கொண்டு வந்தான். நிழற்குடையின் கூட்டத்தைப் பார்த்ததும் ஒரு புத்துணர்வு வந்துவிட்டதுபோல் தெரிந்தது. அவனது குச்சிக்கால்கள் இப்போது நிழற்குடையை நோக்கி நகர்ந்தன.
அவன் குரல் பிசிறின்றி ஒலித்தது. மிக அருகில் அவன். பாரதியார் பாடலைத்தான் பாடிக்கொண்டு வந்தான். பிச்சைக்காரன்தான் அய்யமில்லை. நான் திரும்பித் திரும்பிப் பார்த்தேன். அவரவர் அவரவர்பாட்டுக்கு நின்றிருந்தார்கள். அவன் அவன்பாட்டுக்குப் பாடிக்கொண்டு வந்தான் வயிற்றுப்பாட்டுக்கு.
' ஏழையென்றும் அடிமையென்றும் எவனுமில்லை ஜாதியில்.......' பாடல் தொடர்ந்தபோது சற்றே பளபளப்பான முகங்கள் தங்களுக்குள் சிரித்துக் கொண்டன. ஓட்டப் பந்தயத்தில் ஓடத்தயாராவதுபோல சிலர் கீழே வைத்திருந்த பெட்டியைக் கையில் எடுத்துக் கொண்டார்கள்.
அவனது விடுதலைப் பாடல் நின்றது. கையேந்திக் கொண்டு வந்தான். சிலர் கைவிரித்தார்கள். சிலர் தமக்கும் வாழ்க்கைக்கும் சம்பந்தமில்லை என்பதுபோல நின்றிருந்தனர்.
பழைய தலைமுறையொன்று பத்து பைசா போட்டது. தூசு தட்டி வாங்கிக் கொண்டான். இளைஞர் இருவரை நோக்கினான். அவர்கள் ஏதோ முடிவுக்கு வந்தவர்களைப் போலத்தெரிந்தனர்.
'அடி ராக்கம்மா கையத்தட்டு ' பாட்டுப் பாடினால், அய்ந்து உரூபாய் தருவதாகச் சொன்னார்கள் இருவரும்.
அவன் பார்வையில் ஒரு வேகம் தெரிந்தது. தலையாட்டி மறுத்து விட்டான். ' அதெல்லாம் அவனுக்கெங்கடா தெரியப் போவுது ' என்றான் அருகிலிருந்தவன்.
சொன்னவனைத் திரும்பிப் பார்த்தான். வான வீதியை அளந்து பார்த்திருக்கிறாயா ? என்று பார்வையில் கேள்வி தெரிந்தது. சொன்னவன் முகம் சிதறிப் போகும்படியாகக் கேட்ட பாடலைப் பாடிக்காட்டினான். கேட்டவனின் நண்பன் அவன் முகத்தைப் பொருக்கிக் கொண்டான். கொடுத்த அய்ந்து உரூபாயை வாங்க மறுத்து , அவன் வீட்டு நாய்க்கு ரொட்டி வாங்கிப் போடச் சொன்னான்.
மீண்டும் பாட ஆரம்பித்தான். பாரதியின் பாடல்.
இனியொரு விதி செய்வோம் - அதை
எந்த நாளும் காப்போம்
தனியொரு வனுக்கு உணவிலை யெனில்
சகத்தினை அழித்திடுவோம்...
என்னருகில் வந்தான்.
பாரதியார் பாடலைப் பாடிப் பிச்சை எடுக்கக் காரணம் கேட்டேன்.
" அவர் பாடல்கள்ள இருக்கற தெளிவு, ஞானம், பொருந்தாதவற்றைப் பொறுத்திக் காட்டி இசையையுண்டாக்கற சக்தி வேற பாடல்களுக்கு இல்லை. ஒரு மன நிறைவை அவர் பாடல்கள் எனக்குக் கொடுக்குது. அதுக்கும் மேல அவர் பாடல்களப் பாடுறத ஒரு கவுரமாகக் கூட நான் நெனக்கிறேன். "
நிறையப் பேர் பற்களைச் சிந்தினார்கள். எரிச்சல் முத்துக்கள் அம்மையாய் வந்து விழுந்தன . " எடுக்கறதே பிச்ச, இதுல கவுரவம் வேற .." அவனது காதுகளில் இந்த ஊசிகள் ஓட்டையேற்படுத்தியிருக்குமோ ? அவன் அமைதியாக நின்றிருந்தான்.
நான் சற்றே ஏறிட்டுப் பார்த்தேன். ஆங்காங்கே அவனது மனதைப் போலவே வெள்ளை பூசிய தாடியும், ஒட்டிய உருவமும், மருத்துவமனையில் குளுக்கோஸ் ஏற்ற வேண்டுமாயின் மருத்துவருக்கு சிரமம் வைக்காத நரம்புகளும், கையிலே உலகைக் கடலாகவும் நிலமாகவும் பிரித்துவைத்த சப்லாக்கட்டைகளும் , கூர்மையான வறுமைக் கண்களும், கிழிந்து நைந்த உடைகளும் தன்னைப் பிச்சைகாரனென்று எழுதி ஒட்டிக்கொண்டிருந்த நெற்றியும் தாண்டி அவனது வைராக்கியம் என்னை உலுக்கியது.
நேற்று பிச்சை போடாததால் ' யானைமேல போறவனைச் சுண்ணாம்பு கேட்ட ' கதையைச் சொன்ன அந்தப் பிச்சைக்காரனுக்கு இவன் முற்றிலும் மாறுபட்டிருந்தான்.
பாடலைத் திரும்பப் பாடச் சொன்னேன்.
" பாரத சமுதாயம் வாழ்கவே.. " மீண்டும் பாடினான் , இடையில் நிறுத்தினேன்.
" ஆமா, தனியொருவனுக்குச் சொறு இல்லைன்னதும் ஒலகத்த அழிச்சிட வேண்டியதுதானா ? "
இந்த நெருஞ்சி முள்ளை அவன் எதிர்பார்க்கவில்லைபோலும். கண்கள் உருத்தன. கடலின் ஆழம் தெரிந்தது. எல்லோரும் எங்களிருவரையும் மாறி மாறிப் பார்த்தார்கள். அய்ந்து உரூபாய் கூலி தர முன் வந்த இளைஞர்களின் முகங்கள் கேலியை எப்பொதோ அழித்துவிட்டிருந்தன, நிழற்குடை ஒருமுறை தன்னைத் தானே பார்த்துக் கொள்வதுபோலிருந்தது. நியாய விலைக்கடையின் நீண்ட வரிசை சற்றே குறைந்திருந்தது.
" ஒலகத்துல எத்தனைபேர் திண்ணைதூங்கிகளாகவும் ஊதாரிகளாகவும், எங்கே உழைச்சா தாய்நாடு முன்னேறிடுமோன்னு பயந்து உழைக்காம சாப்பாடு வரணுமுன்னு அலையறாங்க தெரியுமா ? அந்தப் புனைசுருள்களுக்கும், பொய்யர்களுக்கும் , பித்தர்களுக்கும் சோறு இல்லைன்னு சொன்னதும் அவங்களுக்காக உடனே உலகத்த அழிச்சிட வேண்டியதுதானா?
எனக்குந்தான் சோறு கிடைக்கல. சோறு கொடுக்கற வேலை கிடைக்கல. அதுக்காக நான் ஒலகத்த அழிக்க கையில கத்தியும் கம்புமாப் புறப்பட்டுட வேண்டியதுதானா? அவ்வளவு ஏன்? ப்படிப்பாடுன பாரதிக்கே சோறு கெடைக்கல. பின்ன ஏன் அவர் ஒலகத்த அழிக்காம உட்டுட்டுப் போனாரு ? "
எனது கேள்வியின் தீர்க்கம் வியர்வையாய் வழிந்தது. எனக்குள் ஏதோ பொத்துக்கொண்டது போல் உணர்வு. கும்பியிலிருந்து குரல் எம்பியது.
" அப்படியெல்லாம் அழிக்கப் போனா இந்தியாவுல சோறு கிடைக்காத நாற்பது கோடிப்பேருக்கும் அழிக்கறதுக்கு நாற்பது கோடி உலகங்கள் வேணும். எல்லா நாடுகளையும் எடுத்துக்கிட்டா எத்தனை உலகங்கள் வேணும் தெரியுமா ? "
அவன் என்னை மேலுங்கீழுமாகப் பார்த்தான். ன்னைக்கும் எனக்கு வேலை கிடைக்கும்னு நம்பிக்கை ல்லப்பா என்று நேர்முகத்தேர்வு முடித்து வந்து சொன்னதும் என் அப்பா எப்படிப் பார்ப்பாரோ அதே போல.
சுற்றியிருந்த கூட்டம் அதிகரித்திருந்ததுபோலத் தோன்றியது. மவுனத்தைக் கிழித்துக் கொண்டு சொற்கப்பல் அவன் வாயிலிருந்து புறப்பட்டது.
" உங்க கேள்வி நியாயந்தான். பாடலோட முழு ஒட்டத்தையும் நீங்க பாக்கலைன்னு நினைக்கிறேன். பாடலோட பல்லவியில ' முப்பது கோடி சனங்களின் சங்கம் முழுமைக்கும் பொதுவுடைமை' ன்னு ஒருவரி படியிருக்கிறார்ங்கிறது யாரும் மறுக்க முடியாதது.
பொதுவுடைமை நிலவுற ஒரு நாட்டுல எல்லோரும் சமம். அங்க உழைக்காதவங்கன்னு யாரும் ருக்க வாய்ப்பே ல்லை. அப்படி ருக்கும்போது அவனவனுடைய உழைப்புக்குரிய சோறு அவனவனுக்குக் கிடைக்கனும். கிடைக்கலைன்னா அது எரிமலையா வெடிக்கும். புரட்சி எழும். உலகம் அழியும். "
தொடர்ந்தான். குரல் லேசாகக் கம்மியது. சரி செய்து கொண்டு முடிவாகச் சொன்னான்.
" மாபெரும் வல்லரசாயிருந்த சோவியத் நாடு அழிஞ்சு போனதுக்கு என்ன காரணம்னு நினைக்கிறீங்க ? பாரதி ஒரு தீர்க்கதரிசி. அவ்ர் வாழ்க்கையே ஒரு விதை. அதுக்குப் பின்னாலதான் அது கவிதையானது. "
மலையிலிருந்து தாவிவரும் சிந்துநதியின் வேகம் எனக்கு இப்போது தெரிந்து விட்டது. பொருந்தாதவற்றைப் பொருத்திக் காட்டி இசையையுண்டாக்குகின்ற சக்தி புரிந்தது. எங்கோ தொலைத்துவிட்ட பாரதியைத் திரும்ப கண்டெடுத்துவிட்ட மகிழ்ச்சி என்னுள்ளே.
சற்றே விக்கித்து நின்றுவிட்டேன். நினைவு வந்து சுற்றும் முற்றும் பார்த்தேன். அந்தப் பிச்சைக்காரன் நியாய விலைக்கடையின் வரிசையைத்தாண்டிப் போய்க்கொண்டிருந்தான்.
சுற்றிலுமிருந்தவர்கள் வந்த பேருந்தில் ஏறிப் போய்விட்டிருந்தார்கள்.
பாம்பாட்டி ஆடவைக்கும் வரை ஆய்ந்து விட்டு, தெருக்கூத்து முடியும் வரை தேர்ந்து விட்டு, பச்சிளங்குழந்தையைப் பாதையில்போட்டுத் தாண்டும் வரை பார்த்திருந்துவிட்டு, சர்க்கல் காரனின் மனைவியின் அவயங்கள் தெரியுமாவென்று அங்கலாய்த்திருந்துவிட்டு, உடல் அழுகும்வரை எதோ வாழ்ந்துவிட்டுப் போகிறவர்களைப் போலப் போய்விட்டிருந்தார்கள்.
அய்ம்பதோ நூறோ வாங்கிக் கொண்டு அரை மணி நேரம் அரட்டையடித்துவிட்டுப் போகிற அந்தப் பேச்சாளரைப் போய்க் கூட்டி வரத்தான் வேண்டுமா என்று தோன்றியது.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக