திங்கள், செப்டம்பர் 25, 2006

மழை 4 துளி 10

இணையமும் காகிதமும் (செவ்வாய், ஏப்ரல் 27, 2004 )

வலைப்பூவில் திரு கண்ணன் எழுதிய கட்டுரை படித்தபோது ஏற்பட்ட உணர்வுகளை இங்கு பகிர்ந்து கொள்கிறேன். திரு கண்ணனைப் போலவே நானும் இது பற்றி சிந்தித்திருக்கிறேன் (கொஞ்சம் வேறு பாதையில்). காகிதங்களில் வெளிவந்து கொண்டிருக்கும் சிற்றிலக்கியங்களில் உள்ள நல்ல படைப்புகள் இணையத்திலும் இடம் பெற வேண்டிய தேவையைப் பற்றி ஏற்கனவே ஒரு கடிதம் எழுதியிருக்கிறேன். சில நல்ல நூல்களைப் படிக்கும்போது இதனை இணையத்தில் அனைவரிடமும் பகிர்ந்துகொள்ள முடியுமானால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று தோன்றுவதுண்டு. அதே நேரத்தில் இணையத்தில் சில நல்ல கட்டுரைகளைப் பார்க்கும்போது இது இணையத் தொடர்பற்ற பொதுமக்களால் படிக்க முடிந்தால் எவ்வளவு நன்மை விளையும் என்றும் நினைத்ததுண்டு. இப்போதெல்லாம் , அனைத்து நூல்களும் கணினியில் ஏற்றப்பட்டுத்தான் அச்சிடப்படுகின்றன. ஏற்கனவே கணினியில் ஏற்றப்பட்ட நூல்களை இணையத்தில் ஏற்றுவதில் அதிகப் பிரச்சினை இருக்கப் போவதில்லை. தேவை ஒரு விழிப்புணர்வும் கருத்து மாற்றமும் அவ்வளவே. திரு கார்த்திக் குறிப்பிட்டதுபோல இன்தாம் இணையத் தளத்தில் இருக்கும் நிறையப் பக்கங்கள் பயன்படுத்தப்படவில்லை என்பதே உண்மை. இன்தாம் நூலகத்தில் கொடுக்கப்பட்ட புத்தகப் பட்டியல்கள் மிகவும் பழையவை. இணையம் இன்னும் பரவி எல்லா ஊர்களையும் அடய வேண்டும், குறைந்த செலவில் அனைத்துத் தள மக்களும் இணையத்தைப் பயன்படுத்தும் வாய்ப்பு உருவானால், இந்த இடைவெளி குறைய வாய்ப்பிருக்கிறது. ஆனால் இந்த நிலை வர இன்னும் பல ஆண்டுகள் ஆகும் அது வரையில் இணையத்தில் எழுதி வரும் நண்பர்கள், செய்தித்தாள்கள், சிற்றிதழ்களிலும் எழுத வேண்டும் என்பதே என் கருத்தும். நிறைய நல்ல சிற்றிதழ்கள் வந்து கொண்டிருக்கின்றன . சொந்தமாக எழுதவில்லையாயினும், மொழிபெயர்த்தும் எழுதலாம். சிற்றிதழ் நடத்திவருபவர்களுக்கும் இணையத்தின் பயன்பாடுகள் புரிய வரும். இணையத்தில் தமிழ் இலக்கியம் என்ற தலைப்பில் எழுத வேண்டும் என்று நீண்ட நாட்களாக நான் யோசித்து வந்திருக்கிறேன். ஆரம்பிக்காமல் காலத்தை இவ்வளவு நாள் கடத்தி வந்திருக்கிறேன் (கொஞ்சம் என்மீதே எனக்குக் கோபமும் உண்டு ), சீக்கிரம் எழுதுவேன் (எல்லாம் ஒரு நம்பிக்கைதான்!!!) இப்போது சிற்றிதழிலிருந்து இணையத்துக்குப் படைப்புகளைக் கொண்டுவருவது பற்றி சில கருத்துக்களைப் பார்ப்போம். இந்த நல்ல நிகழ்வு ஈடேறாமலிருப்பதற்கு சில காரணங்களை நம்மால் பட்டியலிட முடியும். அவை
1. இணையம் பற்றிய அறியாமை
2. நம்பிக்கையின்மை
3. விற்பனை/ உரிமை குறித்தான பிரச்சினைகள்
4. உதவ யாரும் இல்லாதது

1. இணையம் பற்றிய அறியாமை:
90 விழுக்காட்டு இலக்கியவாதிகள் இணையம் என்ற பெயரை காதில் மட்டுமே கேட்டிருக்கிறார்கள். பார்த்ததில்லை. அதனால் இணையம் என்பது ஏதோ பெரிய பேய்கள் உலாவும் மாளிகை என்பது போன்ற பயமும், தெளிவின்மையும் உள்ளது. இவர்களில் நிறைய பேர் தெரிந் துகொள்ள முயல்வதுமில்லை என்பது ஒரு பரிதாபம். “அதெல்லாம் நமக்கு வராதப்பா, இதே போதும் “ என்று வசனம் பேசும் பலரை நான் பார்த்திருக்கிறேன். இங்கு தேவைப்படுவதெல்லாம் ஒரு கருத்து மாற்றமே.

2. நம்பிக்கையின்மை
“உங்கள் படைப்புகளைக் கொடுங்கள், இணையத்தில் வெளியிடலாம்” என்று கேட்டால் எவ்வளவு தெரிந்தவராக இருந்தாலும் நிறையப் பேர் கொடுக்க முன்வருவதில்லை. நேரடியாகச் சொல்ல முடியாமல் “எல்லாக் கவிதைகளுக்கும் தலைப்பு எழுதி மொத்தமாக உங்களிடம் தருகிறேன்” என்று கூறி இரண்டு வருடங்களாக இன்னும் தலைப்பு எழுதிக் கொண்டிருக்கும்(??) சில படைப்பாளிகளை நான் சந்தித்திருக்கிறேன். இவர்களுடைய பயமெல்லாம் எங்கே நாம் அதை நமது பெயரில் வெளியிட்டு விடுவோமோ, கருத்துத்திருட்டு நடக்குமோ, இணையத்தில் யார் படிப்பார்களோ, யாரெல்லாம் தன் கருத்துக்களை அவர்கள் கருத்துக்களாக பயன்படுத்திக் கொள்வார்களோ என்பவைதான். இதனாலேயே இன்னும் இருட்டு அறைகளுக்குள் இரும்புப் பெட்டிகளில் தூங்கிக் கொண்டிருக்கும் நல்ல படைப்புகள் பல. என்னைப் பொறுத்தவரை கருத்துத் திருட்டு என்பது தடுக்க முடியாத ஒன்று. அதுவும் இணையம் போன்ற ஒரு கட்டற்ற கடலுக்குள் இதனைத் தடுக்க முடியாது, தன்மரியாதை உடைய எழுத்தாளர்கள் யாரும் இதில் ஈடுபடப் போவதுமில்லை. (திருட்டுக்கு பயந்து நகை போட்டுக்கொள்ளாமலா இருக்கிறார்கள் மக்கள்?) . தன் படைப்பு வெளியாக வேண்டும் என்ற ஆர்வமுடைய எவருக்கும் இந்தக் காரணம் ஒரு தடையாக இருக்கப் போவதில்லை
3. விற்பனை/ உரிமை குறித்தான பிரச்சினைகள்
இது கொஞ்சம் விரிவாக விவாதிக்க வேண்டிய ஒரு பிரச்சினை. ஏற்கனவே நூலாக வெளியான படைப்புகளை திரும்ப மின்வடிவிலும் கொண்டுவருவதிலும் இந்தப் பிரச்சினை இருக்கிறது. ஒரு நூலை இணையத்திலும் வெளியீடு செய்வதாக எடுத்துக் கொள்வோம். இணையத்தில் படிக்கும் வாய்ப்புக் கிடைத்தவர்கள் நூலை விலை கொடுத்து வாங்கப் போவதில்லை. மேலும் மின்னஞ்சல் வழியாக நண்பர்களுக்கெல்லாம் அனுப்பவும் வாய்ப்பிருக்கிறது. இதுவும் விற்பனையை பாதிக்கும் என்ற கருத்து இருக்கிறது. என்னைப் பொறுத்தவரை காகித வடிவிலான நூலைப் படிக்கக்கூடிய வாசகர்களின் எண்ணிக்கையுடன் ஒப்பிடும்போது இணையத்தில் படிப்பவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு. மேலும் சொந்தமாகக் கணினி இல்லாதவர்கள் காசுகொடுத்து இணையம் பார்க்கின்ற சமயங்களில், மின்வடிவிலான படைப்புகளைப் படிக்க வாய்ப்புகளில்லை. எனவே என் பார்வையில் இணையத்திலும் நூல் வெளிவரும்போது படைப்பாளிக்கு/பதிப்பாளருக்கு எந்த இழப்பும் இல்லை. மாறாக

அ) இணையம் வழியாக நல்ல வாசகர்கள் நிறையப் பேரை சம்பாதிக்க அவர்களால் முடியும்.

ஆ) நூலைப்பற்றி நிறைய விவாதங்கள் இணையத்தில் நடக்க வாய்ப்பிருக்கிறது. இது படைப்பாளிக்கும், பதிப்பாளருக்கும் நன்மையே தரும்.

இ) படைப்பின் வழியாக வரும் வருமானத்தில் வாழவேண்டிய நிர்ப்பந்தம் இல்லாதவர்களுக்கு இதனால் எந்த இழப்பும் இல்லை

ஈ) மின்வடிவத்தில் வராவிட்டால் வெளிநாட்டு வாசகர்கள் நிறையப் பேர் படிக்கப் போவதில்லை. (40 ரூபாய் நூலுக்கு அஞ்சல் செலவு எவ்வளவாகும் ??) ஊருக்கு வரும்போது வாங்கிக் கொள்ளலாம் என்று தள்ளிப் போட வாய்ப்பிருக்கிறது. அவர்கள் ஊருக்கு வரும்போது, நூல் கிடைக்காது என்பது வேறு விசயம்

உ) உண்மையாலுமே வறுமையிலிருக்கும் படைப்பாளிக்கு வாசகர்கள் உதவி செய்யாமல் போய்விடுவார்களா என்ன?

ஊ) Open Source நோக்கி உலகம் நடந்து கொண்டிருக்கும்போது மின்வடிவ நூலுக்கு விலை என்பது விவாதத்துக்குரிய விசயமே.

எ) மிக நல்ல படைப்பாக இருப்பின் அது மொழிபெயர்க்கப்பட்டு வேறு மொழிகளுக்குச் செல்லவும் வாய்ப்பிருக்கிறது

4. உதவ யாரும் இல்லாதது இணையத்தில் நூலை வெளியிடுவதில் உதவ / பாலமாக இருக்க யாரும் இல்லாததாலும் சிலர் வெளியிட இயலாமல் இருக்கலாம். இது இணையத் தொடர்புடைய நாமனைவரும் இறங்கிப் பணி செய்ய வேண்டிய ஒரு பிரச்சினை
**இது நேரமின்மையால் பிழை திருத்தப்படாத / சீரமைக்கப்படாத கட்டுரை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக