திங்கள், ஜூன் 07, 2004

கொஞ்சம் இடைவெளி

எனது Reporting Officer பணியிட மாற்றம் பெற்றுச் செல்வதால் அவருடைய அனைத்து வேலைகளையும் நான் ஏற்றுக் கொள்ள வேண்டியிருக்கிறது. அதனால் கொஞ்ச நாளுக்கு இங்கு வர இயலாது,
10 நாள் கழித்து சந்திப்போம்

ஞாயிறு, மே 30, 2004

மீண்டும் ஓடைக்கு. . .

மீண்டும் ஓடைக்கு. . ஞாயிறு, மே 30, 2004

ஒருவார காலமாக வலைப்பூவில் ஆசிரியராக இருந்து விட்டு இன்றுதான் திரும்பினேன். வலைப்பூவில் இருந்தபோது நான் நிறையக் கற்றுக்கொண்டேன். பல நல்ல நண்பர்கள் கிடைத்தார்கள். நிறைய சிந்தித்தேன்,எழுதினேன். மேலும் மேலும் நிறைய நூல்களைப் படிக்க வேண்டும், இன்னும் நம் எழுத்தை மேம்படுத்த வேண்டும், படைப்புக்களத்தை விரிவாக்க வேண்டும் என்ற ஆவல் ஏற்பட்டது. ஓடையிலும் நிறைய மாற்றங்களைக் கொண்டு வரவேண்டும், நிறைய பேரை எழுத வைக்க வேண்டும் என்று தோன்றியது.நான் கடந்துவந்த பாதையை இன்று திரும்பிப் பார்க்கிறேன். ஓடை உருவாகி தமிழ் புத்தாண்டோடு 4 வருடங்கள் முடிந்து விட்டன. காகிதத்தில் உருவாகி, மின்னஞ்சலில் உயிர் வாழ்ந்து, பின் யாஹூ மடற்குழுவுக்கு இடம் பெயர்ந்து இன்று வலைப்பதிவுக்கு வந்திருக்கிறது ஓடை. பலருடைய இளக்காரமான பார்வைகளைப் பொய்யாக்கி ஓடையை வற்றாமல் ஓட வைத்துக் கொண்டிருக்கும் மன உறுதியை நான் எங்கிருந்து பெற்றேன் ? நான் படித்து எனக்குள் பதிந்து வைத்திருந்த பல அறிஞர்களின் வாழ்க்கை வரலாறுகளில் இருந்து பெற்றேன் எனக் கொள்ளலாம். மேலும் பயணம் புதிது சிற்றிதழின் வளர்ச்சியை, அதனை வெளியிடுவதில் புலியூர் முருகேசன், பிச்சைமுத்து போன்ற நண்பர்கள் எதிர்கொண்ட போராட்டங்களை அருகிலிருந்து பார்த்தது ஒருவேளை எனக்கு இந்த உறுதியை அளித்திருக்கலாம். தன் படைப்பு வாழ்க்கைக்கும், படிப்பிக்கும் ஆசிரியத் தொழிலுக்கும் இடையில் நிறைய சிரமங்களை, இழப்புகளைச் சந்தித்தும் இயல்பாய் படைப்பைத் தொடர்ந்துவரும் திரு சகாராவின் வாழ்க்கையிலிருந்து நான் கற்றுக்கொண்ட பாடங்களாயிருக்கலாம். இவற்றுக்கும் மேலாய் என்மீது நம்பிக்கை வைத்துத் தங்கள் படைப்பாக்கங்களை எனக்கு அனுப்பி வைத்த தோழர்கள், தோழியர்கள் அனைவரது ஒத்துழைப்பும் காரணமாக இருக்கலாம். ஓடையைப் படித்துப் பாராட்டி குறைகளைச் சுட்டிக்காட்டி அதன் வளர்ச்சியில் அக்கறை கொண்ட நண்பர்கள் காரணமாக இருக்கலாம். மொழி புரியாதபோதும், என் எழுத்துப்பணியை ஊக்குவித்த எனது அலுவலக நண்பர்களின் அன்பு காரணமாக இருக்கலாம். எப்போதும் நூல்களில், கணினியில்,செய்தித்தாளில் புதைந்து சூழல் மறந்து உட்கார்ந்திருக்கும் என்னைப் புரிந்துகொண்டு பொறுத்துக் கொண்ட என் குடும்பத்தினரின் தியாகமாய் இருக்கலாம். இவற்றுக்கெல்லாம் நடுவில் நான் பிறந்து வளர்ந்த, மழையற்ற , வளமற்ற மண்ணில் இருந்து என்னை மாதிரி வெளியேறாமல் இன்னும் வாழ்ந்து உழன்று உயிர் வாழ்ந்து கொண்டிருக்கும் விவசாயக் குடியானவர்களின்நெஞ்சுரத்தில் இருந்து உருவாகி, எனக்குள் எழுப்பப்படும் என் இருப்பு குறித்தான தார்மீகக் கேள்விதான் என்னை முன்செலுத்துகிறது என்று நம்புகிறேன். அக்கேள்வியின் முன்னால் தோற்றுப்போகாமல் இருக்கவே நான் எழுதுகிறேன் என்று நினைக்கிறேன்.

சனி, மே 29, 2004

தமிழ் செம்மொழியாவதும் சில குரல்களும்

சில குரல்கள்

தமிழ் ஒரு செம்மொழியாக இத்தனை நாள் ஏன் ஆக்கப்படவில்லை என்று கவலைப்படாமல் இதை திராவிட இயக்கத்தின் பம்மாத்து என்று சிலர் பரிகசிப்பது வேதனையாக இருக்கிறது. மற்ற மொழியினர் பயப்படுவார்கள் என்ற சப்பைக்கட்டு வேறு. தமிழ் மொழி மற்ற மொழிகளை என்றும் ஒழிக்க முயற்சி செய்ததில்லை. ஆனால் இந்தியின் மூலம், இராஜஸ்தானி,பிகாரி போன்ற மொழிகள் ஒழிக்கப்பட்ட/படுகிற வரலாறுகளை நாடே அறியும். தமிழ் செம்மொழி என்பதை உத்திரப்பிரதேசத்தில் கூட ஏற்றுக்கொள்கிறார்கள். எதிர் கருத்தை இதுவரை நான் கேட்கவில்லை. என்னுடன் மலையாளிக்ள் வேலை செய்கிறார்கள், தெலுங்கர்கள் இருக்கிறார்கள், மராத்தி பேசுபவர்களும் இருக்கிறார்கள். திருக்குறளின் ஆங்கில மொழியாக்கத்தை என்னிடம் கேட்டுப் படிப்பவர்களும் உண்டு. யாரும் இதுவரை அதை ஒரு பிரச்சினையாகப் பேசவில்லை. இந்திக்காரர்கள் பயப்படாதபோது தம்ழ்நாட்டில் சிலபேருக்கு எங்கிருந்து பயம் முளைத்தது எனத் தெரியவில்லை. தமிழ்நாட்டிலிருந்து இப்படிக் குரல் கிளம்புவது வேதனை அளிக்கிறது. இந்தியை வளர்க்கும் பொருட்டு எவ்வளவு செலவு செய்கிறார்கள் என்பதை நாங்கள் எங்கள் அலுவலகத்தில் பார்த்து வருகிறோம். ஒரு தனிப்பட்ட மொழியை வளர்ப்பதற்கு ஒரு நாடு முழுவதிலும் திரட்டப்பட்ட வரிப்பணத்தைச் செலவு செய்வது குறித்துக் குரல் எழுப்ப யாருமில்லை. 'தமிழக அரசியலில் ஆளாளுக்கு இதைக் கேட்டுக்கொண்டிருக்கின்றனர். ' என்கிறார் பத்ரி. இது அரசியல்வாதிகளின் கோரிக்கை மட்டும் அல்ல. மக்களின் கோரிக்கை கூட. 'எது எப்படியிருந்தாலும் வரலாறு என்ன சொல்லும்? திமுக-க்கு நிறைய ஸீட் இருந்தது.. கழுத்துல கத்திய வெச்சி வாங்கிட்டானுவன்னு தானே?' என்கிறார் ஹரி. வரலாறு சொல்கிறதோ இல்லையோ, உங்களைப்போன்றவர்கள் சொல்லிக்கொண்டுதான் இருந் தார்கள், மேலும் இருப்பார்கள். இதுவொன்றும் புதிதில்லை. அது தமிழ் நாட்டின் தலையெழுத்து.
இதையெல்லாம் மீறித்தான் தமிழும் தமிழனும் வளர்ந்து வருகிறார்கள்
இதையும் படியுங்கள்

வியாழன், மே 06, 2004

கேலிக்கூத்து

2,3,5,..22,...
இவையெல்லாம் என்னவென்று கேட்கிறீர்களா?
நேற்று எங்கள் ஆலையில் வேலை செய்யும் ஒப்பந்த ஊழியர்கள் சிலர் போட்டுவிட்டு வந்த கள்ள வாக்குக்களின் எண்ணிக்கை.(இவை அனைத்துமே பாஜக வுக்குப் போட்ட வாக்குக்கள்) முலாயம் சிங்கின் சொந்த ஊரான இடாவா தொகுதியில்தான் எங்கள் ஆலை அமைந்துள்ளது. உண்மையான வாக்குச் செலுத்தச் சென்ற எங்கள் பொறியாளர்கள் சிலர் அடித்துத் துரத்தப்பட்டார்கள்!! 'துமாரா வோட் டால்னேகேலியேதோ ஹம் ஹெய்னா ' (உங்கள் வாக்கைச் செலுத்தத்தான் நாங்கள் இருக்கிறோமே) என்று அந்த குண்டர்கள் கத்தியதாகக் கேள்வி. தேர்தல் பணிக்கு அதிகாரிகளாகச் சென்ற எங்கள் உதவிப் பொறியாளர் ஒருவரின் வாக்குச் சாவடியில் பாஜக,சமாஜ்வாதி இரண்டு கட்சிகளுக்கும் நடந்த சண்டையில் மின்னணு வாக்குப் பெட்டியை NDTV-யின் காருக்குள் ஒளித்து வைத்துக் காப்பாற்ற வேண்டிய நிலை. அரை நூற்றாண்டு காலமாக எப்படி உ.பி, பீகாரில் தேர்தல் நடக்கிறது என்பதை கண்கூடாகத் தெரிந்து கொள்ள முடிந்தது.

திங்கள், மே 03, 2004

மழை 4 துளி 4

மறுபடியும் - புலியூர் முருகேசன்

மறுபடியும் -
நம் வாக்குகளுக்குச் சவப்பெட்டி!

இருப்பவர்களுக்காக இரக்கப்படத் தெரியாமல்
பிணங்களுக்காக பரிதாபப்படும் இந்தியர்கள் நாம்!

பாராளுமன்றத்தில் வேதம் ஓதும் சாத்தான்களுக்காகவே
பிணம் காய்ச்சி மரங்கள் வளர்கின்றன.

ஜாதி மத வேறுபாடின்றி எல்லாப் பேய்களும்
எப்படியோ தயாராகி ஒன்றுபடுகின்றன
பிண அறுவடை நாளில் !

அழுகிய, பிணி பிடித்த , துர்நாற்றம் கிளப்புகிற
பிணங்களைக் கூட கட்டியணைத்து
முத்தம் கொடுக்கிற அளவிற்கு
மோகம்
அந்த சுடுகாட்டு நாற்காலி மேல் !

எச்சரிக்கை -
பாராளுமன்றத்தில் ஒப்பாரி வைக்க
பிணங்களைச் சேகரித்துக் கொண்டேயிருந்தால் -

ஒருநாள்
இந்தியாவில் பாராளுமன்றம் இருக்காது -
பாரழுமன்றம் மட்டுமே மீதமாயிருக்கும்
ஊர் ஓர சுடுகாடு போல.

செவ்வாய், ஏப்ரல் 27, 2004

இணையமும், காகிதமும்

இக்கட்டுரை மழை 4, துளி 10 ஆக வெளிடப்பட்டிருக்கிறது.

சனி, ஏப்ரல் 24, 2004

மழை 4 துளி 3

எல்லைகள் என்பது முடிவு அல்ல
- அ.சிவகாமசுந்தரி

சிட்டுக்குருவிக்கு சிறகொடிந்துபோனால்
உள்ளம் சோர்ந்து ஓய்ந்து விடுமா?
சிறகுகள் முளைத்ததும் மீண்டும்
விண்ணில் பறக்க முயற்சிக்காதா?
அடிபட்டு வீழும் வேங்கை
அமைதியாய் அடங்கி ஒடுங்கிடுமா?
பின்பு புயலெனச் சீறிப் பாயாதா?
எல்லைகள் என்பது முடிவு அல்லவே!
வெட்ட வெட்ட ரோமங்கள் கூட
ரோசம் கொண்டு முளைக்கின்றதே!
மயிர் நீப்பின் உயிர் வாழாக்
கவரிமான்கள் நமக்கு வேண்டாம்
எதை இழ்ந்தாலும் தன்னம்பிக்கையை
இழக்காத மனமே வேண்டும்
உடலில் உயிர் என்ற ஒன்று
உள்ளவரையில் போராடு
தோல்விகள் உன்னை தலைவனாக்கும்
வெற்றியோ உன்னை அடிமையாக்கும்
உன் வாழ்க்கைக் காட்டில் இடிஇடித்தால்
இடிந்துபோய் விழுந்து விடாதே
கண்டிப்பாய் ஒரு மின்னல் ஒளி
உண்டாகும், இன்ப மழை
விரைவில் பெய்யும் என நம்பு
வரும் தோல்விகளை உன்
வலிய தோள்களின் மீது தாங்கு
ஆனால் இதயத்தில் போட்டு அழுந்தாதே
வெற்றி உன் காலடியில்
தானாக வந்து வீழும்!

சனி, ஏப்ரல் 17, 2004

கேள்விகளின் பிறப்பிடம்

நான் கேள்விகள் என்ற ஒரு தனி வலைப்பக்கத்தைத் தொடங்கியுள்ளேன். இருப்பினும் நான் எழுதுவதெல்லாம் ஓடையில் மட்டுமே இருக்கும். கேள்விகள் மட்டும் அங்கே.
-துடிமன்னன்

yarl.net ல் சில ஓட்டைகள்

யாழ்.நெட்டில் எப்படியும் வலைப்பதிவு ஆரம்பித்து விடுவது என்று முயற்சி செய்து இரண்டுமுறை தோற்றுப்போனேன்.
முதலில் ஒரு வலைப்பதிவை ஆரம்பித்தேன்.
1. இதில் நம் கருத்துக்களை ஒரு முறை வெளியிட்ட பிறகு அதனை அழிக்க வழியில்லை, மாற்ற மட்டுமே முடியும் (இப்போதும் test என்ற பெயரில் ஒரு வெற்று posting-ஐ யாழ்.நெட்டில் நீங்கள் பார்க்கலாம்).
2. இரண்டாவது முறை புதிதாகப் பதியும்போது, எல்லா விவரங்களையும் மின்னஞ்சலில் அனுப்பி விட்டதாகச் சொன்னது. ஆனால் மின்னஞ்சல் வரவே இல்லை. மின்னஞ்சல் முகவரியைச் சரியாகக் கொடுத்தேனா என்று சரிபார்க்கவும் வழியில்லை.
3. ஐயா யாழ்.நெட் நடத்துநர்களே, கொஞ்சம் உங்களைத் தொடர்புகொள்ள ஒரு சுட்டியாவது கொடுக்கக் கூடாதா? 'contact us' என்பது எல்லா இணையத் தளங்களிலும் இருக்கிறதே.

மூன்றாம் முறையாக வந்து முயற்சி செய்யுமளவுக்கு உங்கள் வலைத்தளத்தைக் கொஞ்சம் எளிமையாக்கக் கூடாதா?
-துடிமன்னன்

வெள்ளி, ஏப்ரல் 16, 2004

சித்திரை வந்தென்ன...

கவிஞர் தீட்சண்யணின் "சித்திரைப்புத்தாண்டு வந்தென்ன போயென்ன" என்ற அருமையான கவிதை படித்தேன். நீங்களும் இங்கு படிக்கலாம்.

செவ்வாய், ஏப்ரல் 13, 2004

தூர் வாருதல்

முன்பு சொன்னது போல் ஓடையைத் தூர் வாரி, அனைத்து பழைய படைப்புகளையும் தொகுத்து அவற்றிற்கான சுட்டிகளை இணைத்துள்ளேன் (வலது பக்கத்தில் ஓடை-சுட்டிகள் என்ற தலைப்பின் கீழ் காணலாம்). ஜனவரியில் வெளியிட்ட படைப்புகளைத் திரும்ப பிரித்து ஏப்ரலில் வெளியிட்டதால் ஓடையைத் தொடர்ந்து படித்து வருபவர்களுக்கு சிறிது குழப்பம் ஏற்படலாம். பொறுத்தருள வேண்டுகிறேன்

மழை-4 துளி-2

தென்றல் - விமர்சனம்
-------துடிமன்னன் (thudimannan@kickedout.com)


திரைப்பட விமர்சனம் எதுவும் ஓடையில் இது வரை வெளிவராதிருப்பினும், ஒரு எழுத்தாளனைப் பற்றிய படம் என்பதால், நம் கருத்துக்களை முன் வைக்க வேண்டி இந்த விமர்சனம் வெளியாகிறது.
சமூக அக்கறையுள்ள ஒரு எழுத்தாளனின் மீது ஒரு வாசகி கொண்ட அன்பு காதலாகி, தாயை இழந்தபின் தங்க இடம் தேடித் திரிகையில் அந்த எழுத்தாளனுக்கே தன்னைக் கொடுத்து அவன் குழந்தைக்குத் தாயுமாகிறாள். அவன் முன்னேற்றத்துக்குத் தடையாகி விடுவோம் என்ற எண்ணத்தில் யாரிடமும் உண்மையைச் சொல்லாமலே அவள் வளர்த்துவந்த அவளது மகன், வீட்டை விட்டு ஓடிப்போய் அந்த எழுத்தாளரிடமே கொஞ்ச நாள் வளர்கிறான். இறுதியில் எழுத்தாளனுக்கு உண்மை தெரிந்து வாசகியைத் தேடும்போது அவள் மரணப்படுக்கையில் கிட(டை)க்கிறாள். அவள் சாவுக்குப் பின் எழுத்தாளன் மகனுக்காய் வாழ்கிறான் என்ற முற்றுப்புள்ளியோடு , சமூக அக்கறையைக் காட்டிலும் குடும்ப வாழ்க்கை முக்கியம் என்று சொல்லி முடிகிறது படம்.
கதை கேட்கும்போது நன்றாகத்தானிருக்கிறது. இருப்பினும் அதை படமாகப் பார்க்கும்போது நம்மை அறியாமலே நம் காதில் உள்ள ஓட்டையை கை தடவிப்பார்க்கிறது.
படத்தின் அடிப்படையாகக் கட்டமைக்கப்படும் கீழ்க்கண்ட கருத்துக்களை எடுத்துக் கொள்வோம்
1. எழுத்தாளன் நலங்கிள்ளி(பார்த்திபன்)யின் சமூக,தமிழ் அக்கறை, தன்மானம் மற்றும் பிற
2. வாசகியின் கண்ணில்லாத (மூளையில்லாத) காதல் & வாசகி எதிர்கொள்ளும் சமூக அவலங்கள்


1. கதாநாயகனான எழுத்தாளன் நலங்கிள்ளி சமூக அக்கறை கொண்டவன் என்பதைக் காட்டுவதற்காக அமைக்கப்பட்ட காட்சிகள் சில மிகவும் செயற்கையாகப் படத்துக்கு வெளியில் துருத்திக் கொண்டு நிற்கின்றன. அவை பெரும்பாலும் எந்த ஒரு ஆரம்ப முடிச்சுமில்லாமல் திடீரென்று படத்தில் வருகின்றன. எடுத்துக்காட்டாக தமிழில் வழிபாடு செய்ய வேண்டும் என்ற கூட்டத்தில் நலங்கிள்ளி முன்னிற்பதாகக் காட்டப்படும் காட்சி. இந்தக் காட்சி வருவதற்கு முன், இந்த பிரச்சினை குறித்து கொஞ்சமாவது ஒரு உரையாடலோ அல்லது வேறு வடிவான அறிமுகமோ இல்லை. இது ஒட்டவைத்தும் ஒட்டாமல் தொங்கிக் கொண்டிருக்கும் ஒரு பிசிறாகத் தெரிகிறது.
சமூக அக்கறை கொண்ட நலங்கிள்ளி, சக மனிதர்களிடம் எரிந்து விழுவதும், விலங்குகளிடம் பாசமாக இருப்பதாகக் காட்டப்படுவதும் ஒரு முரண். எழுத்தாளன் நலங்கிள்ளியின் தன்மானத்தைக் காட்டுவதற்காக கதை கேட்டு வந்தவன் மீது நாற்காலியை எறிவது போன்ற காட்சி, அவனது திமிர் என்பதாகத்தான் நம்மில் உணர்வுகளை ஏற்படுத்துகிறது. நடைபாதை வாசிகள்மீது சகட்டுமேனிக்கு நலங்கிள்ளி எறியும் வார்த்தைகள் அவனது சமூக அக்கறை மீது நமக்கு ஐயத்தை ஏற்படுத்துகிறது.

ஹோட்டல் அறையில் நலங்கிள்ளியிடம் தான் அவனது வாசகி என்று நாயகி அறிமுகம் செய்துகொண்ட பின்னும் அவள் யார், என்ன என்று கேட்காமலேயே அவளைக் காசுக்குப் படுக்க வந்தவளாக நாயகன் நினைப்பதும், வந்தவள் விலைமகள் அல்ல என்று தெரிந்தபின்னும் கொஞ்சம் கூட நாயகன் கவலைப்படாததும், தனது தவறுக்கு வருந்தாமல் நாயகிக்கு படுத்ததுக்குப் பணம் கொடுத்து விட்டு 'இன்றைக்கு என் பிறந்த நாள். என்னைப் போலவே நீயும் சந்தோஷமா இரு' என்று சொல்லி வழி அனுப்புவதாய்க் காட்டுவது படத்தின் ஒரு மிகப் பெரிய ஓட்டை. அந்தப் பணத்தை நாயகி பத்திரமாக வைத்திருப்பதாகவும், குழந்தைக்கு வைத்தியச் செலவுக்கு அந்தப் பணம் பயன்படுவதாகவும் காட்டுவது சகிக்கவில்லை.
இது பெண்கள் மீதான திரைப்படவாதிகளின் ஒரு வக்கிர, கீழ்த்தரமான பார்வை.
மேலும் இது எந்த வகையிலும் நலங்கிள்ளியை ஒரு சமூக அக்கறையுள்ள எழுத்தாளனாகக் காட்டாமல் அவனை ஒரு மிகப்பெரிய சாடிஸ்டாகவும், மன நோயாளியாகவும், பெண்களை ஒரு போகப் பொருளாக நினைக்கும் ஒரு சராசரிக்கும் கீழான மிருகமாகவும் நமக்குப் புரிய வைக்கிறது.

2.இப்படிச் சீரழித்தவனைக் கேள்வி கேட்காமல் கடவுள் போல நினைத்து, யாருக்கும் சொல்லாது தனக்குள்ளே வைத்து (மகிழ்ச்சியாக ?) சித்திரவதை அனுபவிக்கும் நாயகி, தனக்குச் சோறும் போட்டு, துணையாகவுமிருந்து, நாயகியின் மகனைத் தன்மகனாகப் பாவித்துப் பாலூட்டி வளர்த்த தோழிக்குக் கூட உண்மையைச் சொல்லாமலே இருப்பது கொஞ்சம் கூடப் பொருந்தவில்லை. தனக்கு விருப்பமான எழுத்தாளனுக்கு மணமாகிற்றா இல்லையா என்றுகூடத் தெரியாமல் நாயகி அவன் வீட்டுக்குள்ளிருந்து அவன் பேசும் பேச்சை வைத்து அவன் குடும்பத்தோடு வாழ்வதாக நினைத்து வெளியேறுவதும் படத்தின் இன்னொரு பெரிய ஓட்டை.
தாய் இறந்த பின் தனக்கு அடைக்கலம் கொடுத்த பெரிய மனிதரின் வீட்டை விட்டு சொல்லிக்கொள்ளாமல் வெளியேறுவதும் மிக செயற்கையாக உள்ளது. அப்படி தன் விருப்பமான எழுத்தாளனைத் தவிர வேறு யாருக்கும் தன் மனதில் இடமில்லையென்று சொல்லும் நாயகி, தன் விருப்பத்தை/அவன் குழந்தைக்குத் தான் தாயானதை நாயகனிடம் சொல்ல நிறைய வாய்ப்புகள் கிடைத்தும் பேசாமடந்தையாய் நிற்பது ஒன்றும் நம்பும்படியாய் இல்லை.
குடிசை தீப்பிடித்து எரிவதை வேடிக்கை பார்த்துப் புலம்பிக்கொண்டிருக்கும் கும்பலைக் காணும்போது 'நெட்டை மரங்களென நின்று புலம்பினார்' என்ற பாரதியின் வரிகள்தான் நினைவுக்கு வருகிறது. இந்தமாதிரி வேடிக்கை மட்டுமே பார்க்கும் கும்பல்களை எல்லாத் தமிழ்ப் படங்களிலும் காட்டுவதை ஏன் இயக்குனர்கள் மாற்றிக் கொள்வதில்லை என்பது ஒரு புரியாத புதிர்.
மொத்ததில் ஒரு எழுத்தாளனைப் பற்றி எந்தவிதமான தவறான கருத்துக்களை மக்களிடம் எடுத்து செல்கிறோம் என்ற உணர்வே இல்லாமல் கதை பின்னப்பட்டிருக்கிறது. சமூக அக்கறையோடு எழுதிய / எழுதுகிற எத்தனையோ போராளிகளின் வாழ்க்கை கண்முன்னால் இருக்க , கீழ்த்தரமான குணமுள்ள ஒரு கதாபாத்திரத்தை எழுத்தாளன் என்ற பெயரில் கதாநாயகனாக்கும் முயற்சியில் தங்கர் பச்சான் இறங்கியிருப்பது வருத்ததை அளிக்கிறது.

இனிமையான பாடல்கள், தமிழரின் அடிப்படை இசைக்கருவியான 'பறை' க்காக நாயகன் குரல் கொடுப்பது , வழியற்றவர்களுக்கு வாழ உதவுகின்ற மடங்கள் இன்னுமிருக்கின்றன என்ற உண்மை, எழுத்தாளன் பேசும்போது கல்லெறியாமல் அமைதியாக உட்கார்ந்து கேட்கும் மக்கள் கூட்டம் ஆகிய காட்சிகள் நமக்கு ஓரளவிற்கு ஆறுதலளிக்கின்றன.
மொத்தத்தில் இது நம் நேரத்தைக் கொன்று நமக்குக் காது குத்தும் இன்னும் ஒரு வியாபாரப் படம் அவ்வளவே.

மழை-4 துளி-1

நான் தெரிந்து கொண்டேன் --ஆங்கில மூலம்: ஓமர் பி.வாஷிங்டன்

தமிழில்: கைகாட்டி


நான் தெரிந்து கொண்டேன்
உன்னால் யாரையும் உன்மீது காதல் கொள்ளச் செய்யமுடியாதென்று
உன்னால் முடிந்ததெல்லாம் எவருடைய அன்புக்காவது பாத்திரமாவது
மீதம் அவர்களைப் பொறுத்தது.
நான் தெரிந்து கொண்டேன்
நாம் எவ்வளவுதான் சிலரின் நலன் மீது அக்கறை கொண்டாலும்
அவர்கள் அதைப்பற்றிக் கண்டு கொள்வதேயில்லை
நான் தெரிந்து கொண்டேன்
நம்பிக்கையை வளர்க்க வருடங்களாகும்
அழிக்கப் போதும் சில நொடிகள்
நான் தெரிந்து கொண்டேன்
உன்வாழ்க்கையில் என்ன இருக்கிறது என்பது முக்கியமில்லை
யார் இருக்கிறார்கள் என்பது முக்கியம்
நான் தெரிந்து கொண்டேன்
கால்மணிநேரம் மகிழ்ச்சியாய்க் கழித்துவிடலாம்
அதற்குமேலோ கொஞ்சம் புரிய ஆரம்பித்துவிடுகிறது
நான் அறிந்து கொண்டேன்
மற்றவர்கள் செய்ய முடிந்ததோடு உன்னை ஒப்பிடாதே
உன்னால் முடிவதோடு மட்டுமே ஒப்பிடு
நான் அறிந்து கொண்டேன்
யாருக்கு என்ன நேர்கின்றதென்பதல்ல,
அதனை அவர்கள் எப்படிக் கையாள்கிறார்கள் என்பது முக்கியம்
நான் அறிந்து கொண்டேன்
எத்தனை மெல்லியதாக சீவினாலும்
ஒரு துண்டிற்கு இரு பக்கங்கள் உண்டென்று
நான் அறிந்து கொண்டேன்
அன்புக்குரியவர்களிடம் எப்பொழுதும் அன்பான வார்த்தைகள் சொல்லிப் பிரிய வேண்டும்
ஒருவேளை அதுவே கடைசிச் சந்திப்பாகவும் இருக்கலாம்
நான் அறிந்து கொண்டேன்
நாயகன் என்பவன் செய்ய வேண்டியதைத் தேவையான தருணத்தில்
விளைவுகளைப் பற்றிக் கவலைப்படாது செய்பவன்
நான் அறிந்து கொண்டேன்
நீ கற்பனை செய்யாத தூரங்களுக்குக்கூட தடையின்றி சென்றுகொண்டிருக்கலாம்.
நான் அறிந்து கொண்டேன்
உன்மீது நிறைந்த அன்பு கொண்டவர்கள் யாரேனுமிருக்கலாம்
அதை வெளிப்படுத்தும் முறை தெரியாமல்
நான் அறிந்து கொண்டேன்
சிலசமயம் நான் கோபம் கொள்வது என் உரிமை என்று நினைக்கிறேன்
ஆனால் வெறியனாகும் உரிமையை அது எனக்கு எப்போதும் அளிப்பதில்லை
நான் அறிந்து கொண்டேன்
உண்மையான நட்பு தூரங்களைக் கடந்து வளரும்
உண்மையான காதலும் அப்படியே
நான் அறிந்து கொண்டேன்
நீ எதிர்பார்க்கும் வகையில் அன்பு செலுத்தாமல் இருப்பவரது அன்பு
முழுமையற்றது என்பதாகாது
நான் அறிந்து கொண்டேன்
உன் நண்பன் எவ்வளவு நல்லவனாக இருந்தாலும் அவ்வப்போது காயப்படுதல்
தவிர்க்க முடியாதது, அவனை நீ மன்னிக்கத்தான் வேண்டும்
நான் அறிந்து கொண்டேன்
மற்றவர்களிடம் மன்னிப்புக் கிடைப்பது மட்டுமே போதுமானது அன்று
சிலநேரங்களில் நம்மை நாமே மன்னிக்கக் கற்றுக்கொள்ள வேண்டியிருக்கிறது
நான் அறிந்து கொண்டேன்
உன் இதயம் எவ்வளவு மோசமாக நொறுங்கியிருந்தாலும்
இவ்வுலகம் உன் ஆறுதலுக்காக நிற்பதில்லை
நான் தெரிந்து கொண்டேன்
நம்முடைய பிண்ணனியும், சூழ்நிலையும் எப்படி நம்மை மாற்றினாலும்
நாம் எப்படி உருவாகிறோம் என்பதற்கு நாமே பொறுப்பு
நான் தெரிந்து கொண்டேன்
விவாதம் செய்வதால் மட்டுமே இருவர்க்கிடையே அன்பில்லையென்றும்
விவாதம் செய்யாதிருப்பவர்களிடையே அன்பு கொழிக்கிறதென்றும் சொல்லமுடியாது
நான் தெரிந்து கொண்டேன்
சிலநேரங்களில் செயல்களையல்ல செய்தவனை முன்னிறுத்த வேண்டும்
நான் தெரிந்து கொண்டேன்
ஒரே பொருளை நோக்கும் இருவர் முற்றிலும் வேறுபட்ட இரு பொருள்களைக் காண முடியுமென்று
நான் தெரிந்து கொண்டேன்
பின்விளைவுகளைப் பற்றிக் கவலையற்று தனக்குத் தானே உண்மையாய் நடப்பவர்கள்
வாழ்க்கையில் முன்னேறிச் செல்வார்கள்
நான் தெரிந்து கொண்டேன்
ஒருசில மணித்துளிகளில் உன் வாழ்க்கை மாற்றப்படலாம்
முற்றிலும் உனக்கு அறிமுகமில்லாதவர்களால்
நான் தெரிந்து கொண்டேன்
கொடுக்க ஒன்றுமில்லை என்று நீ நினைத்திருந்தாலும்
நண்பனொருவன் வருந்தும்போது உதவத் தேவையான மன உறுதியை நீ பெறுவாய்
நான் தெரிந்து கொண்டேன்
எழுதுவதும் பேசுவதும் உன் மனவலிகளைத் தீர்க்க உதவ முடியுமென்று
நான் தெரிந்து கொண்டேன்
எவரின்மீது நீ அதிகம் அன்பும் அக்கறையும் கொண்டிருக்கிறாயோ
அவர்கள் உன்னிடமிருந்து சீக்கிரம் பிரிக்கப்படுவார்கள்
நான் தெரிந்து கொண்டேன்
நல்லவனாயும், அடுத்தவர்களைக் காயப்படுத்தாதவனாகவும் இருப்பதற்கும்
உன் மனசாட்சிக்கு உண்மையானவனாக இருப்பதற்கும் இடையேயான
எல்லையைத் தீர்மானிப்பது மிகவும் கடினமானதென்று
நான் கற்றுக் கொண்டேன்
அன்பு செலுத்துவதற்கும்......
அன்பு கொள்வதற்கும்.......
நான் கற்றுக்கொண்டேன்...

ஓடை ( முந்தைய படைப்புகள் )


அன்புடையீர்
ஓடை இதழினை வலைப்பூவிலும் துவக்கிய பிறகு, ஓடையின் முந்தைய படைப்புகளையும் ஒரு மீள்பார்வைக்காக blog-ல் சேமித்து வைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் கடந்த மூன்று வருடங்களில் ஓடை- யாஹூ
குழுமத்தில் வெளியான படைப்புகளை இங்கு வெளியிடுகிறோம்
அன்புடன்
கைகாட்டி
(ஓடைக்காக)

ஓடை பழைய படைப்புகள் - சுட்டிகள்

வரிசை எண் படைப்புபடைப்பாளி வகை
ஓடை பழைய படைப்புகள்-1முன்னுரைகைகாட்டி கட்டுரை
ஓடை பழைய படைப்புகள்-2மொழிபெயர்ப்புகர்ணன்கவிதை
ஓடை பழைய படைப்புகள்-3மொழிபெயர்ப்பு சகாரா கவிதை
ஓடை பழைய படைப்புகள்-4சிறகுகள்நா.வெ.ராகவிதை
ஓடை பழைய படைப்புகள்-5உமாவுக்குகைகாட்டிகவிதை
ஓடை பழைய படைப்புகள்-6நாட்டு நடப்புகள்நாவெராகவிதை
ஓடை பழைய படைப்புகள்-7பூக்களின் கதைகர்ணன்கவிதை
ஓடை பழைய படைப்புகள்-8வக்கத்தவன்கைகாட்டிகவிதை
ஓடை பழைய படைப்புகள்-9கடிதம்-தெய்வாகைகாட்டிகடிதம்
ஓடை பழைய படைப்புகள்-11காதல் ஓவியம்கைகாட்டிகவிதை
ஓடை பழைய படைப்புகள்-12ஆசிரியர் உரைகைகாட்டிகட்டுரை
ஓடை பழைய படைப்புகள்-13ஓர் மழை நாள்நா.வெ.ராகவிதை
ஓடை பழைய படைப்புகள்-14மீளாத்துயர்கைகாட்டிகவிதை
ஓடை பழைய படைப்புகள்-16கடிதம்-சிவத்துக்குகைகாட்டிகடிதம்
ஓடை பழைய படைப்புகள்-17விழியில் முள்கைகாட்டிகவிதை
ஓடை பழைய படைப்புகள்-18புழு வாழ்வுகைகாட்டிகவிதை
ஓடை பழைய படைப்புகள்-19ஓர் இரவுவிசிறிகட்டுரை
ஓடை பழைய படைப்புகள்-20தாய்மைதிருமதி ஜப்பார்கவிதை
ஓடை பழைய படைப்புகள்-21மவுனம்அ.சிவகாமசுந்தரிகவிதை
ஓடை பழைய படைப்புகள்-22அந்த ஒரு நிமிடம்சகாராசிறுகதை
ஓடை பழைய படைப்புகள்-23சிறைகைகாட்டிகவிதை
ஓடை பழைய படைப்புகள்-24பொதுத்தொண்டுசகாராகவிதை
ஓடை பழைய படைப்புகள்-25புதிய வானம்கைகாட்டிசிறுகதை
ஓடை பழைய படைப்புகள்-26சங்கிலிகைகாட்டிகவிதை
ஓடை பழைய படைப்புகள்-27துரோகம்கைகாட்டிகவிதை

ஓடை பழைய படைப்புகள் 27

ஓடை ஜூலை 2000 தாள் 4

துரோகம் - கைகாட்டி

கபாடிப் போட்டியில்
ஸ்கோர் மாற்றிப் போட்டுத் தோற்கடித்த
PET ஆசிரியரின் துரோகம்

ஒதுங்கி இருந்த என்னை
மயக்க முடியாது தோற்று
கை பிடிட்டு இழுத்ததாய்
கறை அடித்துப்
பழி தீர்த்துக் கொண்ட
உடன் படித்தவளின் துரோகம்

பத்தாம் வகுப்புத் தேர்வில்
கல்வி மாவட்டத்தில் இரண்டாமிடம் பெற்றதற்குக் கிடைத்த
இரண்டாயிரத்துச் சொச்ச பரிசுப் பணத்தினை
பாக்கெட்டில் போட்டுக்கொண்ட
தலைமை ஆசிரியரின் துரோகம்

வேர்பூலில் வேலை கிடைக்கவிருந்தபோது
எனது பயோடாட்டாவைத்
'தொலைத்து' விட்ட
வகுப்புத்தோழனின் துரோகம்

எல்லாம் மறந்தாகி விட்டது.

தினமும் இரண்டு மணி நேரம்
இனிக்க இனிக்கப் பேசி
விலகிச் சென்றபோதெல்லாம்
உள்ளிழுத்து
திருமணத்திற்குப் பின்பான
சமையல் வரைக்கும் அலசி
இரு வீட்டினரின் பச்சைக் கொடிக்குப் பின்னும்
ஏதும் காரணமற்று
காதலை மண்ணாங்கட்டிக்கு ஒப்பிட்டு
என்னை மறுதலித்துப் போன
உன்
பச்சை துரோகத்தைத்
தவிர.

ஓடை பழைய படைப்புகள் 26

ஓடை ஜூலை 2000 தாள் 4

சங்கிலி - கைகாட்டி

'சம்பளம் எப்போ வரும்?'
25-ஆம் தேதியிலிருந்தே
அப்பா போடும்
கிடுக்கி,

அடகிலே முழுகிப்போன
பத்துப்பவுன் சங்கிலியைக் கேட்டு,
பிய்த்தெடுக்கும்
தாலிக்கயிறு,

மருமகள் பற்றி
தினமும் மகாபாரதம் பாடி
பாச வலை போடும்
தொப்புள் கொடி,

ஒயிலாய் நடந்து வந்து
பக்கத்து சீட் டைப்பிஸ்ட்
போடும்
பார்வைக் கொக்கி,

'பத்தாயிரம் தாரேன்,
பவிசாய்
முடிச்சுக்குடுங்க'-
மேசைக்கடியில் நீளும்
தூண்டில்கள் ,

எல்லாவற்றிலுமாய்ச்
சிக்கி இழுபட்டு,
சித்திரவதைக்காட்பட்டுச்
செத்துப்போனதென்
மனிதம்.

ஓடை பழைய படைப்புகள் 25

ஓடை ஜூலை 2000 தாள் 3

புதிய வானம் - கைகாட்டி

காலை 11 மணி. இனி மேலும் வகுப்பில் உட்கார்ந்திருக்க முடியாது எனத்தோன்றியது. தலை மிகவும் வலித்தது. கடந்த மூன்று நாட்கள் தூக்கமின்றித் தவித்ததில் கண்கள் மிகவும் மங்கலாகத் தெரிந்தது போன்ற பிரமை. மிகுந்த எரிச்சலுடன், தண்ணீர் வடிகின்ற கண்களுடன் எப்போது வகுப்பு முடியும் என்ற எதிர்பார்ப்புடன் வகுப்பின் கடைசி பெஞ்சின் மூலையில் தலையைக் கவிழ்த்து கொண்டு உட்கார்ந்திருந்தான் செல்வா. தன்னைத்தானே வெறுக்குமளவிற்கு சுஜாதாவுடன் நடந்த சண்டையை மூளைக்குள் நுழைத்துக் கருவிக் கொண்டிருந்தான் அவன்.
அசிரியர் வெளியேற, அவசர அவசரமாய் அடுத்த ஆசிரியர் உள் நுழைவதற்குள் புத்தகங்களை அருகிலிருந்தவனிடம் கொடுத்து விட்டு, " எங்கடா போற ? " என்ற அவனது கேள்விக்கு பதில் சொல்லாது வெளியேறினான்.
இனிமேலும் தன்னால் பொறுக்க முடியாது இந்த வேதனை என்று தோன்றியது அவனுக்கு. கல்லூரி நுழைவாயிலுக்கு வந்து திருவெறும்பூர் செல்லும் பேருந்தில் ஏறிக்கொண்டான். அம்பிகா ஒயின்ஸ் என்ற பெயரைக் கண்டதும் சிறிதும் யோசிக்காமல் உள் நுழைந்தான். அவனுக்கே ஆச்சரியமாக இருந்தது எப்படித் தனக்கு இவ்வளவு தைரியம் வந்தது என்று.
உள்ளே யாரும் இல்லை. கடைக்காரனைத்தவிர. இருட்டாக மூலையில் இருந்த ஒரு மேசையைப் பார்த்து உட்கார்ந்தான்.
கடைக்காரன் ஒருவித சந்தேகத்துடன் நெருங்கி வந்தான். " தம்பி இது ஒயின் ஷாப். உங்களப் பாத்தா நீங்க தவறுதலா வந்திட்டிங்களோன்னு நினைக்கறேன்" என்று மிகுந்த தயக்கத்துடன் சொன்னான். அவனைச் சொல்லிக் குற்றமில்லை. இன்னும் மீசை கூட சரியாக முளைக்காமல் பால் வடியும் முகத்துடன் இருந்த அவனைப்பார்த்தால் அனைவருக்கும் அதுதான் தோன்றும்.
" இல்லை நான் தெரிஞ்சுதான் வந்தேன்" என்றான் செல்வா.
கடைக்காரனின் நம்பிக்கையின்மை அவன் கண்களில் தெரிந்தது. இருப்பினும் " சரி என்ன வேண்டும்? ஹாட் அல்லது கூல்?' என்று கேட்டான்.
செல்வாவுக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை. ஹாட்டுக்கும் கூலுக்கும் என்ன வித்தியாசம் என்று கேட்க நினைத்து அடக்கிக் கொண்டான். வெளியில் வெய்யிலாக இருந்தது எனவே " கூல்" என்றான். " என்ன பிராண்டு?" என்று கடைக்காரன் கேட்க செல்வாவுக்குப் பேசாமல் எழுந்து வெளியில் வந்து விடலாமா என்று தோன்றியது. அன்றொருநாள் ராஜாராமன் " பீர் அடிச்சேனா சுர்ருனு ஏறிடுச்சு " என்று பேசிக்கொண்டிருந்தது நினைவுக்கு வந்தது. என்வே இவனும் "ஒரு பீர் " என்றான் சர்வ சாதாரணமாக, ஏதோ " ஒரு தோசை போடப்பா" என்பதுபோல.
கடைக்காரனும் கொண்டு வந்து கொடுத்தான். ஏதோ ??பழுப்பு நிறமாய் இருந்தது. உள்ளே நுரை தழும்பிக் கொண்டிருந்தது. கொடுத்த கிளாசில் ஊற்றி நிரப்பினான். அந்த நுரையையே சிறிது நேரம் பார்த்துக் கொண்டு உட்கார்ந்திருந்தான். பீர் பழங்களைப் பிழிந்து தயாரிக்கிறார்கள் என்று யாரோ சொல்லியது நினைவுக்கு வந்தது. பழம் நினைவுக்கு வந்ததுமே அவனுடைய அப்பா நினைவுக்கு வந்தார்.
நெடிய ஒல்லியான உருவம். தலையில் ஒரு துண்டும் இடுப்பில் ஒரு நாடா டிரவுசருமாய் எப்போதும் வெற்றிலையை மெல்லும் வாயுடன் அவர் நினைப்பு வந்ததும் செல்வாவுக்கு சப்த நாடியும் அடங்கி விட்டது.
சென்ற மாதம் ஊருக்குச் சென்றபோது கடந்த ஆறு மாதங்களுக்கான மெஸ் பில் கட்டுவதற்காக நான்காயிரம் பணம் கேட்டபோது சிறிது நேரம் அவர் எதுவும் பேசவில்லை. அவனுக்குத் தெரியும் இப்போது அவர் கையில் பணம் இருக்க வாய்ப்பில்லையென்று. ஏனெனில் போன வாரம் தான் அவன் அக்காவுக்கு வளைகாப்பு நடந்தது. மாப்பிள்ளை வீட்டார் அவ்ன் அப்பாவை மொட்டை அடித்திருப்பார்கள் என்றும் அவனுக்குத் தெரியும். இருப்பினும் அவனுக்கு வேறு வழியில்லை. இந்த மாதம் பணம் கட்டவில்லையெனில் தேர்வெழுத இயலாது. எதுவும் பேசாது கையில் மம்மட்டியுடன் புதிதாய் வைத்த கொய்யாக் கன்றுகளுக்கு தண்ணீர் பாய்த்துக் கொண்டிருந்த அவரையே வரப்பில் நின்றுகொண்டு பார்த்துக் கொண்டிருந்தான். சிறிது நேரம் கழித்து " சரி, நீ வீட்டுக்குப் போ, நான் பார்த்துக் கொள்கிறேன்" என்றார் அவனைப் பார்க்காமலேயே. அவனுக்குத் தெரிந்தது தன் கவலையை அவன் முன்னால் காட்டாது தவிர்க்க விரும்புகிறார் என்று.
அவனுக்கு மிகவும் பயமாக இருந்தது, ஒருவேளை பணம் புரட்ட முடியாதோவென்று. அனேகமாக அக்காவின் வளைகாப்பிற்கு வாங்க முடிந்த இடத்திலெல்லாம் வாங்கியிருப்பார். இதுவரை ஒரு இடத்தில்கூட திருப்பித்தந்திருக்க வழியில்லை. விலையற்றுப் போய் மிளகாய் இன்னும் வீட்டில் கிடக்கிறது. அடுத்த மாதம் கட்டி விடலாம், அடுத்த மாதம் கட்டி விடலாம் என்று தள்ளிப் போட்டு இப்போது மெஸ் பில் கழுத்துக்கு வந்து நிற்கிறது.
இரவெல்லாம் சரியான தூக்கமில்லாமல் புரண்டு கொண்டிருந்தான். பக்கத்துத் தெரு செங்கல் சூளையிலிருந்து மண் கொட்டும் சத்தம் வந்தது. அப்படியானால் மணி அதிகாலை இரண்டரை என்று அர்த்தம். சிறுநீர் கழிக்க எழுந்து வெளியில் வந்த போது தற்செயலாய் அப்பா படுத்திருந்த ஓலைச் சாலையின்மீது அவன் பார்வை சென்றது. அவரும் தூங்காமல் வெற்றிலையை மென்று துப்பிக் கொண்டிருந்தார். அவர் காலை சென்ற வாரம்தான் பிறந்திருந்த எருமைக் கன்று நக்கி தொந்தரவு செய்து கொண்டிருந்தது. முழுகாமல் இருக்கும் அக்கா, மெலிந்து போயிருக்கும் அம்மா இருவருக்காகவும் வெங்கிடசாமி நாயக்கரிடம் பாதி கடனுக்கு சென்ற மாதம் அப்பா வாங்கிக் கொண்டு வந்த எருமை போட்ட கன்று அது.
ஒண்ணுக்கிருந்து விட்டு வந்தவனை " ஏ இங்கே வாடா " என்றார். " என்ன தூக்கம் வரலையா" என்று கேட்டவருக்கு என்ன பதில் சொல்வதென்றே தெரியவில்லை. " இங்க பாரு, உனக்குப் பணம் ரெடி பண்ணிக் கொடுப்பது என்னோட பொறுப்பு, நீ ஏன் துங்காம இருக்கற ? போ, போய்த் தூங்கு " என்றார்.
செல்வாவுக்கு மிகவும் வேதனையாக இருந்தது. இனியும் நின்று கொண்டிருந்தால் திட்ட ஆரம்பித்து விடுவார் என்று தெரியுமாதலால், மெதுவாக நகர்ந்தான். எப்போது தூங்கினான் என்று நினைவில்லை. "டே எழுந்திருடா" என்று அவன் அம்மா எழுப்பியபோதுதான் அவனுக்கு உறைத்தது காலை பத்து மணியாகிவிட்டது என்று. "வெந்நீர் வெச்சிருக்கேன் குளிச்சிட்டுக் கிளம்பு பஸ் வந்துடும்" என்று சொன்ன அம்மாவை ஒருமுறை முழுமையாகப் பார்த்தான். தன் சிறு வயதில் பார்த்த அம்மாவா இவள்? கண்கள் குழிவிழுந்து, உடல் மெலிந்து , பேசும்போது இருமலுடன் வரும் பலகீனமான குரலும் அவனை என்னவோ செய்தது.
குளித்து விட்டுக் கிளம்பியபோது அப்பா உள்ளே வந்தார். " இந்தா நாலாயிரம் , நல்லபடியாப் படி. வீட்டு நிலமை உனக்குத் தெரியும், நான் எதுவும் சொல்ல வேண்டியதில்லை, காலேஜ் போய்ச் சேந்ததும் லெட்டர் போடு" என்றவாறே துண்டுக்குள் மடித்து வைத்திருந்த ஒரு மஞ்சள் பையை எடுத்தார்.

" பணத்துக்கு என்னாப்பா பண்ணினீங்க ? " , என்று கேட்க வந்ததை வாயிலேயே நிறுத்திக் கொண்டான். அவர் சொல்ல மாட்டார். "போயிட்டு வா" என்று சொல்லி விட்டு துண்டை எடுத்து உதறித் தோளில் போட்டுக் கொண்டு நகர்ந்தார்.
பணத்துக்கு என்ன பண்ணியிருப்பார் என்றவாறு யோசித்துக் கொண்டிருந்தவனின் சிந்தனையை , "தம்பி, காரமா ஏதாவது வேணுமா" என்ற கடைக்காரனின் கேள்வி கலைத்தது.

"வேண்டாம் " என்றவனுக்கு தனக்காக காரம் சாப்பிடுவதைக் குறைத்துக் கொண்ட தாயின் நினைவு வந்தது. பையன் நன்றாய்ப் படித்துத் தம் கனவுகளையெல்லாம் நனவாக்குவான் என்ற நம்பிக்கையுடன் வறண்ட காட்டை உழுது , கிளறிக் கொண்டிருந்த தாய் தந்தை நினைவு வந்ததும் அவனுக்கு தன் மீதே பெரும் வெறுப்பாய் வந்தது. மூன்று மாதமாய்ப் பழக்கமான பக்கத்து வகுப்புக்காரியுடன் முறிந்து போன
காதலுக்காக (?) குடிக்கத் துணிந்த உண்மை பொட்டில் அறைந்தது செல்வாவுக்கு. முன்னாலிருந்த பாட்டிலை நெருப்பைப்போல் பார்த்து பயந்தான் அவன்.
அப்படியே விட்டுவிட்டு அவசரமாய் பணத்தைக் கொடுத்துவிட்டு நடந்தவனுக்குப் பக்கத்திலிருந்த குமாரசாமி வொர்க்ஷாப்பில் பார்வை நிலைத்தது. பதினைந்து வயதுப் பையனொருவன் அழுக்கு டிரவுசருடன் பம்பரமாய்ச் சுற்றிக்கொண்டிருந்தான். எச்சில் துப்ப வெளியில் வந்த ஓனர் இவனைப் பார்த்து சினேகமாய்ச் சிரித்தார்.
" என்ன தம்பி , அப்படிப் பாக்கிற? என் பையந்தான். பத்தாவது படிக்கிறான். ஸ்கூல் லீவு விடுற நாளையில அவனே வேலயில எறங்கிடறான். நானும் எதும் சொல்லறதில்ல. படிப்பிலயும் கெட்டிக்காரன்." முன் பின் தெரியாத தன்னிடம் அவ்ர் இந்த விஷயத்தைச் சொன்னது எதற்காக என்று புரியாவிடினும், ஊரிலிருக்கும்போது மோட்டரை ஆஃப் பண்ணக்கூடப் போகாது படிக்கிற திமிரில் படுத்திருந்த தன்னைச் சாட்டையில் அடித்து விட்டார் என்பது மட்டும் தெரிந்தது. சிறிதும் யோசிக்காமல் வொர்க் ஷாப்புகுள் நுழைந்தான்.
டிகிரி படிப்பவனிடம் ஸ்பேனர் தரத் தயாராயில்லை என்றாலும் மகனுக்கு கணக்குச் சொல்லித்தர அவனை அனுமதித்தார். அன்று மாலையில் இருந்தே செல்வா பகுதி நேர ஆசிரியரானான்.
-----
-----
-----
மெஸ் பில்லுக்காகக் காலியான எருமைக்கொட்டத்தைத் திரும்பவும் நிறைத்தன, அதே வெங்கிடசாமி நாயக்கரிடம் முழுத் தொகைக்கு வாங்கிய பசுவும் கன்றும் வெகு சீக்கிரமாகவே.

ஓடை பழைய படைப்புகள் 24

ஓடை ஜூலை 2000 தாள் 2

பொதுத்தொண்டு - சகாரா

தார்ச்சாலை போட்டதில் சுருட்டியது
தனயன் பெயரில்.

பள்ளிக்கூடம் கட்டியதில் பதுக்கியது
பத்தினி பெயரில்.

பொதுக்கழிப்பிடம் அமைத்ததில் அமுக்கியது
மகள் பெயரில்.

தெற்குச் சாலைக்கு மேல்மண் போட்டதில் வாரியது
மருமகள் பெயரில்.

காலனி வீடு கட்டிக் கொடுத்ததில் கபளீகரம் செய்தது
மருமகன் பெயரில்.

கோயில் கட்டியதில் நாமம் போட்டது
அப்பன் பெயரில்.

ஒருபைசா சம்பளம் வாங்காமல்
எங்களூர்ப் பஞ்சாயத்துத் தலைவர் செய்கிறார்,
பொதுத் தொண்டு

ஓடை பழைய படைப்புகள் 23

ஓடை ஜூலை 2000 தாள் 1

சிறை - கைகாட்டி

சிறையில்தான் பிறந்தோம்
வளர்ந்ததும் சிறையில்தான்
எங்கே சென்றாலும், திரிந்தாலும்
இரவில்
இந்தச் சிறைக்குத்தான்
திரும்ப வேண்டியிருக்கிறது.

தனக்குரியதை மறந்துவிட்டு
அடுத்தவனுடையதை காவல் காக்கின்ற
போலிஸ்காரர்கள்!
மாறிவிடக்கூடாது
அடையாளமாய் ஒரு மரமோ அல்லது செடியோ
நட்டு வைத்திருக்கிறோம்

தபால்காரனுக்காக கதவிலே
பெரிய எழுத்தில் எண்களை வரைந்திருக்கிறோம்,
சில சமயங்களில் பெயருங்கூட.

எங்கோ,
ஏதோவொன்றிலிருந்து வந்தவளுடன்
போனோம் வேறொன்றிற்கு .
நேற்றுப் பிறந்த
குழந்தை சிரித்தது,
உணராமலே

ஓடை பழைய படைப்புகள் 22

ஓடை ஜூன் 2000 தாள் 3

அந்த ஒரு நிமிடம் - சகாரா

படுக்கையை விட்டு அவசரமாக எழுந்தேன். படிக்க வேண்டியது நிறைய இருந்தது. முகம் கழுவிக் கொண்டு உட்கார்ந்தேன்.
வெளியே வந்து பார்த்தபோது உலகம் விடிந்துவிட்டிருந்தது. காலைக் கடன்களை முடித்துக் கொண்டு கண்ணாடியில் முகம் பார்த்தபோதுதான் கறுமையாய்த் தாடி இருப்பது தெரிந்தது. நேரம் கடந்து கொண்டிருந்ததால் அவசரமாய் உட்கார்ந்து ஷேவிங் செய்ய ஆரம்பித்தேன். அவசரமாய் இழுத்ததில் பிளேடு தனது பதத்தைக் காட்டியது. விழுப்புண்ணைத் தடவியவாறே எழுந்தேன்.
அவசர அவசரமாகக் குளித்து ஏதோ ஒப்புக்குச் சாப்பிட்டு அவசர கதியில் புறப்பட்டு சைக்கிளில் ஏறினேன். நான் பணியாற்றும் பள்ளிக்குச் செல்ல 5 கி.மீ சைக்கிளில் சென்றுதான் பஸ் ஏற வேண்டும். சென்று கொண்டிருந்தபோது ஒருவர் 'நானும் வரலாமா? ' என ஓடி வந்தார்.
உதவுதல் கடனெனினும் எனக்கிருந்த அவசரத்தில் அதை உதறிவிட்டு வேகத்தைக் கூட்டினேன். வழியில் நீண்ட நாட்களாய்ச் சந்திக்காத நண்பனொருவன் எதிர்ப்பட்டான். மிகமிக நெருங்கிய நண்பன்.
'ம் ம் .. வேல கெடச்சத என்கிட்ட சொல்லவேயில்ல' என்றவாறு ஆரம்பித்தான். 'பஸ் வந்துடும், நான் சாயங்காலம் வர்ரேன் பேசிக்குவோம்' என்று கூறித் தவிர்க்க நினைத்தேன்.
' எல்லாம் பெரிய ஆளாயிட்டிங்க, ம் ம்.. நீங்க சொல்றபடிதானே நாங்க செய்யனும்' என்று அவன் அங்கலாய்த்தான். எனக்கு இரண்டுங்கெட்டான் நிலைமை. ' என்னவாயினும் மாலையில் பேசுவோம்' என்று அவசரமாக சைக்கிளை மிதிக்க ஆரம்பித்தேன். மிதித்த வேகத்தில் பெடல் கட்டை ஒடிந்து போனது.
அதைக் கையில் எடுத்துக் கொண்டு ஒற்றைக் கால் தவத்தோடு போய்ச் சேர்ந்தேன்.
சைக்கிளைக் கடையில் விட்டு பூட்டி வைக்கச் சொல்லிவிட்டு, பஸ் ஸ்டாப் நோக்கி ஓடினேன். ரேடியோவில் ' அவசரமா நான் போகனும்...' என்ற லைப்பாய் ப்ளஸ் விளம்பரம் நிகழ்ந்து கொண்டிருந்தது.
நின்றும் நிற்காமல் சென்ற பஸ்ஸில் ஓடி ஏறினேன். அதை விட்டால் பின்பு 10 மணிக்குத்தான் பஸ். நெருக்கியடித்துக் கொண்டு உள்ளே போனேன். செக்கர் வந்து விடுவார் என்ற அவசரத்தில் கண்டக்டர் 'சீக்கிரம் டிக்கெட் வாங்குங்க' என அவசரப் படுத்தினார். அப்போதுதான் தெரிந்தது.....
பஸ்ஸுக்கு பணம் எடுக்காமலேயே அவசரத்தில் வந்து விட்டேன் என்பது. பக்கத்தில் நின்றிருந்த எனது ஊர்க்காரரிடம் நிலைமையை விளக்கி, பத்து ரூபாய் கடன் வாங்கி டிக்கெட் வாங்கினேன்.
பேருந்தை நோட்டம் விட்டேன். ஒரு பெண்ணை கண்டக்டர் திட்டிக் கொண்டிருந்தார். ' நாலு கொழந்தைய வெச்சுக்கிட்டு இப்படி நடுவழில நின்னா எப்படிம்மா டிக்கட் ஏத்தறது? ஓரமா நில்லு. இல்லாட்டி அடுத்த ஸ்டாப்ல இறங்கிக்க ',
அந்தப் பெண்ணைப் பார்த்தேன். அவளது கணவன் அவசரப்பட்டுவிட்டானோ எனத் தோன்றியது. இடுப்புயரம் ஒன்று, முழங்காலுயரம் ஒன்று, அதற்குக் கீழே காலைப் பிடித்தவாறு ஒன்று. கையிலே ஒன்று.... வயிற்றிலேயும் ஒன்று வளர்ந்து வருவது போல் தோன்றியது.
எங்கோ இழவுக்குச் சென்று வந்த கும்பல் நொய் நொய் என்று பேசிக் கொண்டு வந்தது.
'சாந்தா அவ்ளுக்குப் புடிச்சவனத்தான் கட்டிக்குவேன்னு சொன்னாளாம். மொத நாள் காலையில அவளச் சண்டப்போட்டு வேற எடத்துலதான் கண்ணாலம்னு நல்லியப்பனும் செல்லம்மாவும் சொல்லியிருக்காங்க. அப்புறம் யோசிச்சுப் பார்த்ததுல சரி அவ விரும்புனவனயே கட்டி வெச்சுடலாம்னு முடிவு செஞ்சு இன்னக்கிக் காலையில போய்ப் பார்த்தா அவ செத்துக் கிடக்குறா--தூக்கு மாட்டிக்கிட்டு!'
' அடிப் பாவி அவசரப் பட்டுட்டாளே!' என்றொரு கிழம் அங்கலாய்த்தது. 'அப்புறம்?'
' அப்புறமென்ன ? போலிஸ் கேஸ் ஆயிடக் கூடாதுங்கறதுக்காக அவ்சர் அவ்சரம் பொணத்த எரிச்சுட்டாங்க. நாங்க போனபோதே பொணம் இல்ல.'
கிழவி நச்சுக் கொட்டினாள். கசகசவென்று அதைப் பற்றியே பேசி கொண்டிருந்தனர். டிரைவர் பாட்டுப் போட்டார்.
'அண்ணன் என்னடா தம்பி என்னடா
அவசரமான ஒலகத்துல'
என்றவாறு பாடல் ஓட ஆரம்பித்தது.
பள்ளி வந்திருந்தது. அவசரமாக இறங்கினேன். காலாண்டுக்கு பாடங்கள் நிறைய முடிக்க வேண்டி இருந்தது. கட்டுரை வேறு திருத்த வேண்டும். அவசரமாய்த் திருத்த ஆரம்பித்தேன்.
வகுப்பில் பாடங்களை விரட்டினேன். நண்பகல் நேரத்தில் ஒரு மாணவன் அவசரமாக ஓடி வந்ததில் மற்றொருவனைப் படியில் உருட்டி விட்டான். அவனைப் பிடித்து நாலு சாத்து சாத்தினேன்.
'உனக்கென்னடா அவ்வளவு அவசரம்?'
தேர்ச்சி அறிக்கைகளை அவசரமாக நிரப்பி கையெழுத்துக்கு வைத்து விட்டு நிமிர்ந்தபோது மணி 5. அவசரமாகப் புறப்பட்டு பஸ் ஸ்டாப்பிற்கு வந்த போது 5.10 க்கு வர வேண்டிய பேருந்து 4.55 க்கே போய்விட்டிருந்தது. அவர்களுக்கென்ன அவசரமோ?
அடுத்த பஸ்ஸில் வீடு வந்தேன். அவசரமாகச் சாப்பிட்டுப் படிக்க ஆரம்பித்தேன். அடுத்த நாள் பள்ளியில் விளையாட்டு விழா. காலை 7 மணிக்கே செல்ல வேண்டும். எனவே சீக்கிரமே எழ வேண்டும் என்றவாறே தூங்கச் சென்றேன்.
'காலையில நம்ம ஊரு நடராஜ சைக்கிள்ள ஏத்திக்காம அவசரமாகப் போயிட்டியாமே. அவர் வந்து என்னக் கேட்டார். எல்லாரையும் அனுசரிச்சுப் போகனும். நமக்கு நாளைக்கொரு அல்ல அவசரம்னா யாரு வருவா?' என் அம்மா அறிவுறுத்தினாள். அந்த அவசரக்காரன் அதையும் இங்கு வந்து சொல்லி விட்டானே என்று அங்கலாய்த்தவாறே அவசரமாகப் படுக்கை விரித்துப் படுத்தேன்.
ஒரு நாளுக்கு ஏன் 24 மணி நேரம் ? பூமி சுற்றுவதால்தானே? ஒரு நிமிடத்திற்கு பின்னால் பிறந்திருந்தால் ஒருவேளை அமெரிக்காவில் பிறந்திருப்பேனோ? பூமியை மெதுவாகச் சுற்ற வைத்து நாளுக்கு நாற்பது மணி நேரம் ஆக்கியிருப்பேனோ?
அவசரப்பட்டு ஒரு நிமிடத்திற்கு முன்னே பிறந்து விட்டதாய்த் தோன்றியது.

ஓடை பழைய படைப்புகள் 21

ஓடை ஜூன் 2000 தாள் 2

மவுனம் - அ.சிவகாமசுந்தரி

பாடி வரும் நெஞ்சத் திரைக்கடலில்
ஓடி வரும் பசுமை நினைவலைகளின்
நடுவே நின்றாடும் ஓடம்

கவலை ஏடுகளில் கறுப்புப் பேனாவால்
கண்ணீர் மையூற்றி எழுடப்பட்ட
காலத்தால் அழியாத காவியம்

விசாலமான இதயத்திரையில் வரைந்த
வார்த்தைகளால் வருணிக்க இயலாத
விந்தை மிகு வண்ண ஓவியம்

என்னவென்றே தெரியாத உணர்வுகள்
இனம் கண்டறிய முடியாத உறவுகள்
எல்லோரிடத்தும் ஏற்படுத்தும் நிலைமை

உள்ளமெனும் ஓயாத குரங்கு
உவகையின் உச்சத்தில் திளைக்கும்போது
உதடுகள் உச்சரிக்கும் பாஷை

சுகமென சுமைகளை உள்ளம்
சுமந்து வரும்போதெல்லாம்
அதனிச் சுட்டிக் காட்டிடக்
கைகொடுக்கும் கருவி

பதினெட்டு வயது இளங்குருவி
பாடும் புதியதோர் ராகம்
கற்பனையில் உதிக்கும் கட்சிகளின்
கட்டுக்கோப்பு கலையாத தொகுப்பு

கட்டுக்கடங்காத எண்ண அலைகள்
கரையில் சேர்க்கும் ஈரவிழிக் கவிதை

ஓடை பழைய படைப்புகள் 20

ஓடை மே 2000 தாள் 8

தாய்மை ---திருமதி. ஜப்பார்


கண்ணுக்குள் மணியை
இமை காப்பது போல்
கண்மணியே நானும் உனை
கருவறையில் கருத்தாய் காத்திட்டேன்

கண் துஞ்சாது கனவு கண்டேன்
கற்பனையில் நீ எனைப் பார்த்து
கண்மலரத்தான் சிரித்தாய்.
கால்தூக்கி தளிர் நடை போட்டாய்.

அதிர நான் நடந்தால் அழுவாயோ நீ என்று
அடிமேல் அடி வைத்தேன்
அழகே உன்னை வளர்த்திட்டேன்

என்ன பெயர் வைக்கவென்று ஏழு கோடி பெயர் மறுத்து
புதியதாய் ஒன்று சொல்லென
பார்ப்போரையெல்லாம் கேட்டுச் சலித்தேன்.

பிடித்ததெல்லாம் வெறுத்து-
வேண்டாமென மறுத்ததெல்லாம் உண்டு மகிழ்ந்தேன்,
மகவே அதுவுனை வளர்த்திடும்
மகிழ்வாய் மனம் பொங்கிடுமென்று.

நின்றாய், நிமிர்ந்தாய், நேசித்தாய்
மகனாய், மாணவனாய், மருத்துவனாய்
மனந்தனிலே நாளொரு வண்ணம்
நான் போட்டேன் கோலம்.

நாட்கள் நகர நகர
வலியும் வலிமை தந்தது- எனக்கு
அம்மா என்ற சொல்லின்
அருமை தெரிந்தது, பொருள் புரிந்தது.

காதலில் வேண்டுமானால் காத்திருத்தல் சுகமாகலாம்
தாய்மையிலோ காத்திருத்தல் - தவமல்லவா ?

ஓடை பழைய படைப்புகள் 19

ஓடை மே 2000 தாள் 7

ஓர் இரவு - விசிறி


ஓடு ஓடு என்று ஓடுகிறேன். முன்னால் என்ன இருக்கிறது என்றே தெரியவில்லை. என்ன ஒரு இருட்டு , காரிருட்டு கிலியூட்டும் என்பதுதான் எவ்வளவு பெரிய உண்மையாகிவிட்டது ? இந்த இருட்டினால்தான் கண் தெரியவில்லையா அல்லது பார்வையே மங்கிப் போய்விட்டதா ? சிறு மரக்கிளைகள் முகத்திற்கு நேராக வருகிறது. அதில் மோதிக் கொள்ளக்கூடாது, ஓடுகிற வேகமும் குறையக்கூடாது. காலை அகட்டி, தாவித் தாவி ஒருகாலை இலைச் சருகுகளினூடேயும், அடுத்த தப்படியை கருங்கல் சரட்டு மேலேயும் வைத்து ஓட வேண்டியிருக்கிறது.


வானம் கூடத்தெரியவில்லை. வானத்திலிருக்கிற நட்சத்திரம், நிலா எதுவும் தெரியவில்லை. அடர்ந்து ஓங்கியிருக்கிற மரங்களால்தான் இந்த இரவு ஒரு கும்மிருட்டாகிவிட்டது. ஏன் இந்த ஓட்டம் ? எனக்குப் பின்னால் அப்படி என்னதான் ஆபத்து ? நினைத்துப் பார்க்கக்கூட முடியவில்லை. எந்தவிதமான ஆபத்து என்று தெரியாத போது.... அது ஒரு பயங்கரம். அதனால் பயமும், இதயத்தின் துடிப்பும் வேகாக அதிகரிக்கிறது. இந்த மாதிரியான சூழல் ஒரு கொடுமைதான்.


ஓட்டத்தின் நடுநடுவே, இலைக்கொடிகள் காலில் சிக்குவதும், குறுஞ்செடியின் முற்கள் உடலைக் கிழிப்பதையும், அவைகள் ஏற்படுத்தும் இரண வேதனையையும் உணரத்தானே முடிகிறது. ஆ...! என்ன அந்தரங்கத்தில் ஓரிரு வினாடிகள் மிதந்த மாதிரி... 'பச்' என்றொரு சத்தம். அவ்வளவுதான் கைகளைக் கூட ஊன்ற முடியவில்லை.

நல்ல வேளை, வலிக்கிற அளவிற்கு அடிபடவில்லை. இருந்தாலும் என்ன இது முகத்தில், உடல் முழுவதும் மசமசவென்று, சேறாகத்தானிருக்க வேண்டும். ஹம்... என்ன ஒரு நாற்றமும் இல்லை, மண் வாசனையைத்தவிர?

சீக்கிரமே எழ உல் மனம் கட்டளையிட, புதைகுழியாக இருக்கப் போகிறது என்ற பயம் வேறு. தட்டுத்தடுமாறி ஓடு, ஓடு என்று மனத்தாக்கல். இப்பொழுது அதிக எடை சேற்றால் சேர்ந்து விட்டதை நன்கு உணர முடிகிறது. கைகளையும் கால்களையும் உயர்த்துவதற்கு என்ன கஷ்டமாக இருக்கிறது. முடியவில்லை என்றே தோன்றுகிறது.

இன்னும் முயற்சி செய். எழுவதற்கு முடியும். இது நம்மால் முடியும். எழுந்து ஓட முடியாதா, என்ன ? உடலில் வலுவையெல்லாம் ஒன்று திரட்டி எழுந்தால்..... எங்கிருந்தோ சன்னமாக shift பஸ்ஸின் ஹாரன் ஒலி கேட்கிறது. உடல் பூராவும் மொட்டு மொட்டாக வேர்த்து விருவிருத்துப் போயிருக்கிறது. சுவர்க் கடிகாரத்தின் ஒற்றை மணியோ?ஓசையில் எல்லாம் கலைந்து
A shift செல்ல வேண்டிய உண்மை மண்டையில் சுளீரென்று உறைத்தது.

திங்கள், ஏப்ரல் 12, 2004

ஓடை பழைய படைப்புகள் 18

ஓடை மே 2000 தாள் 6

புழு வாழ்வு -- கைகாட்டி

'படிப்பு முடிஞ்சுதா
அடுத்து என்ன பண்றாப்புல?'
எந்துபல் தெரியக் கேட்ட
எண்ணெய்க்கடைக் காரருக்கும்,

'அண்ணன் மாதிரி நீயும்
கவர்மெண்டு உத்தியோகத்துக்குப் போ'
என்று யோசனை சொன்ன
காய்கறிக் காரனுக்கும்

'தம்பிக்கு வேல கெடச்சாச்சா'
வெற்றிலையோடு என்னையும்
சேர்த்து மென்று துப்பிய
அப்பாவின் நண்பர்களுக்கும்

'ஏதோ தம்பி, வேல வந்ததும்
நாலு எழுத்துப் படிக்க வெச்ச
அப்பா, அம்மாவ மறந்துடாத'
குளிக்கப் போன இடத்தில்
சோப்போடு சேர்த்து
அரித்துப் புண்ணாக்கிய
பக்கத்துத் தோட்டத்துக் காரனுக்கும்,

'என்ன பண்ணிக்கிட்டிருக்கே'
என்று கடைவீதியில் கேட்கும்
கோரப்பல்லுடனும், பாம்பு நாக்குடனும்
திரிகின்ற ஒருநூறு பேருக்கும்

'ரிசல்ட்டு இன்னும் வரல
வந்த பின்னாலதான் எதுவும்'

சொல்ல வைத்திருந்த பொய்யை
செல்லாததாக்கினான்
புரொவிசனல் சர்டிபிகேட்டு
கொணர்ந்த
ஓட்டைவாய்த் தபால்காரன்.

ஓடை பழைய படைப்புகள் 17

ஓடை மே 2000 தாள் 5

விழியில் முள் -----கைகாட்டி

இத்தனை நாட்களாய்
இதயங் கசியத்
தவித்துக் கிடந்தது
ஒரு முகந்திருப்பலுக்காகத்தானா?


ஹலோ என்ற ஒற்றை வார்த்தை
எப்படித்தளர்த்தும்
இரண்டு மாதத்திய இறுக்கத்தை ?


எனது தனிமையான
தருணங்களிலெல்லாம்
இமை முடியே
கண்ணுக்குள் விழுந்ததைப்போல்
நீ சொன்ன வார்த்தைகள்
உறுத்துகின்றன.

நாம் இருவருமே
அடுத்தவரிடமிருந்து எதிர்பார்ப்பது
ஒரே ஒரு சொல்லைத்தான்.
முதலில் சொல்லிவிடாது
நம் மனச்சிறைகளைப்
பின்னி வைக்கிறோம்.

நம் உடைபடா
மவுனம்
உணர்த்துவதெல்லாம்
எனக்குள் நீயும்,
உனக்குள் நானும்
உருகிக்கொண்டிருப்பதைத்தான்.

நீ தேவையில்லை என்று
இருவரும் சொல்லத்தான் செய்கிறோம்,
உள்ளுக்குள்
இதயங்களை நிறுத்தி வைத்துக்கொண்டு.

உன்னில் இயங்குமென் உயிர்,
என்னில் இயங்குமுன் உயிர்
இரண்டும் சேரும் வரை
ஊனில்லை,
உறக்கமுமில்லை.

கூறுபட்ட உள்ளத்தின்
இடுக்குகளிடயே
இன்னும் மிச்சமிருக்கிறது
நம் காதல்.
மறுக்கவும், மறைக்கவும்
நம் உதடுகளுக்கும் உள்ளத்திற்கும்
ஏனிந்த
ஏகப்பட்ட இடைவெளி ?

இதுதான் முடிவென்றால்
நாம் இன்னொருமுறை
சந்திக்க வேண்டாம்.
இந்தக் கொப்புளம்
தானாய் உடையட்டும்.
சொரிந்து புண்ணாக்க வேண்டாம்.

ஓடை பழைய படைப்புகள் 16

ஓடை மே 2000 தாள் 4

கடிதம் - கைகாட்டி

சதாசிவத்துக்கு,
நீண்ட காலமாய் என்னுள் தேங்கிக் கிடந்த சிந்தனைகளை, என்னைக் குடைந்து கொண்டிருந்த கேள்விகளை உனக்குத் தெரிவிக்க வேண்டிய விருப்பத்தில் ( கட்டாயத்தில் என்று கூடச் சொல்லலாம் ) இந்தக் கடிதத்தை உனக்கு எழுதுகிறேன்.
வாழ்க்கை என்பதைப்பற்றி என்னதான் பிறருடய கருத்துகளைப் படித்தாலும், கேட்டாலும், அதனை வாழ்ந்து பார்க்கும்போதுதான் அதன் உண்மையான அனுபவம் கிடைக்கிறது. சிலர் ஏன் பிறந்தோம் என்று தெரியாமலேயே வாழ்ந்து செத்துப் போய்விடுகிறார்கள். ஆனால் என்னால் ஏதோ போகிறது, நாமும் போகிறோம் என்று சும்மா இருக்க முடியவில்லை. எதையேனும் சாதித்தே தீர வேண்டும் என்ற வேட்கை இல்லாவிடினும், வீணாய் வாழ்ந்து மடிவதை என்னால் சீரணிக்க முடியவில்லை.

என்னைச் சுற்றிய மனிதர்கள் என்னை நிறையவே பாதிக்கிறார்கள். நேற்றுவரை என்னோடு டயர் வண்டி ஓட்டி விளையாடியவர்கள் இன்று திருமணம் செய்து கொண்டு விட்டார்கள். இரண்டு பேர் இரண்டு பேரை இழுத்துக் கொண்டு (?!) ஓடிவிட்டார்கள் (!).
என்னுடன் படித்த பெண்கள் 'குவா குவா' வுக்குச் சொந்தமாகி விட்டார்கள்.

இவை எல்லாம் 'நான் இன்னும் சிறுபையன்' என்ற எண்ணத்தைச் சுத்தமாகப் போக்கடித்துவிட்டன. இன்னும் இரண்டு வருடங்களில் நான் ஒரு எஞ்சினீயர் . அதற்கடுத்த மூன்று நான்கு வருடங்களில் என்கென்று குடும்பம், மனைவி. எப்படி இது? என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை.

ஒரே பொருள் முன்பு தெரிந்ததற்கும், இப்போது தெரிவதற்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளன. ஒவ்வொன்றின் மீதான என் நோக்கும் போக்கும் மாறி இருக்கிறது. நேற்று வரை என்னைக் கண்டு கொள்ளாத என் தந்தை இப்போது எல்லாமே என்னைக் கேட்டுத்தான் செய்கிறார். ( என்னைக் கேட்டாலும் கடைசியில் தான் நினைப்பதைத்தான் செய்வார் என்பது வேறு விஷயம் !! ) ஊரில் இருப்பவர்கள் என்னிடம் பழகும் முறை மாறி இருக்கிறது. நேற்று வரை நின்ற இடத்தில் இன்று உட்காரும்படி உபசரிப்பு.

எது எனக்கு இந்த அங்கீகாரத்தை வழங்கியது? எது திடீரென என்மீதான மற்றவர்களின் பார்வையை மாற்றியது? கேள்விகள், கேள்விகள், கேள்விகள் மட்டுமே.
எனது பேச்சு மாறி இருக்கிறது. எனது விளையாட்டுத்தனம் போய்விட்டது. பொறுப்புகள் கூடியது போன்ற சுமையான உணர்வு தோன்றுகிறது. முன்பு போல் அல்லாது, ஒவ்வொரு செயலுக்கும் முன்னால் பலமுறை சிந்திக்கச் சொல்கிறது.

எங்கிருந்து, எப்படி வந்தது இந்த மாற்றம்? நான் யார்? என்னுடைய அடுத்த அடி எந்தப் படிமீது? எதைச் சாதிக்கப் பிறந்தேன் நான்? எது இந்த நிமிடத்தில் இதை எழுதுமாறு என்னை ஆட்டி வைக்கிறது? மண்டை நிறையக் கேள்விகள்.

பெண்களைப் பற்றிய எண்ணங்களும் மாறி இருக்கின்றன. இதுவரை அழகான பெண்ணைப் பார்த்தால் இரண்டு முறையாவது திரும்பிப் பார்க்கச் சொல்லும் மனம். அவள் சிரித்தால் ( ஏன் என்று தெரியாமல் ) நானும் சிரித்த அனுபவங்கள் உண்டு. ஏன் காதலித்த (!) அனுபவம் கூட இலேசாக (?) உண்டு.

ஆனால் தற்போது அப்சரஸைப் பார்த்தாலும் மனம் எனோ அலை பாய்வதில்லை. எல்லாம் மிகச் சாதாரணம் என்பதாகவும், இதில் என்ன இருக்கிறது? எதோ பெண்ணின் முகம் என்பதாகவும் எனக்குத் தோன்றுகிறது. ' நிலவா ? மலரா? ' என்று நிலை தடுமாற வைத்த முகம், இன்று ' குப்பை ' எனத் தோன்றுகிறது. மனம் ஒவ்வொரு முகத்திற்கு அப்பாலும் எதையோ தேடுகிறது. அழ்கு மட்டுமே ஒரு பெண்ணிற்கான அளவுகோலா என்ற கேள்வி அலையாய் எழும்பி நிற்கிறது.

உனக்கு இந்த மாதிரி எண்ணங்கள் ஏற்பட்டதுண்டா ? இல்லை, ஒருமுறையாவது வாழ்க்கையின் போக்கில் ஒரு ஓரமாக நின்று கவனித்ததுண்டா? எழுதவும்.

கருவூர், இப்படிக்கு,
16 - 9 -96 கைகாட்டி.

ஓடை பழைய படைப்புகள் 15

ஓடை மே 2000 தாள் 3

மூலம் இல்லாததால் விடப்படுகிறது

ஓடை பழைய படைப்புகள் 14

ஓடை மே 2000 தாள் 2

மீளாத்துயர் -கைகாட்டி

உன் கால் தொட்டு
கடைசி ஆசிர்வாதம்
வாங்கிக்கொள்ள
எனக்கு வக்கில்லை.

வயிற்றுப்பாட்டுக்கு
வாழ்வின் துரத்தலில்
இத்தனை தூரம் வந்த பிறகு
உனது கடைசிச் சுவாசத்தின்போது
என்னால் உடனிருக்க முடியவில்லை.

பணங்கள் சேர்த்து,
பதவி ஆண்டு
என்ன பயன்?
மண்ணில் கால் பரவவிடாது
என்னை உயிராய்
தோளிலும் மடியிலும்
போட்டு வளர்த்த உனக்கு
ஒரு துளி நீர் கொடுக்க
எனக்கு வாய்க்கவில்லை

உன் அடக்கத்தின்போது
சமாதிக் குழியில்
ஒருதுளி கண்ணீர் விட
நான் வந்து சேரவில்லை.

என் பேரனைப்பார்க்க வேண்டும்
என்ற உன் கடைசி ஆசை
நிறைவேறவேயில்லை

எல்லாம் முடிந்து
நான்கு நாட்கள் கழித்து
உன் சாவுக்கு வந்த
இந்த சூழ்நிலைக் கைதியை
மன்னித்துவிடு.

உண்மையில்
செத்துப் போனது நீயில்லை
துக்கத்தில் தேவைப்பட்டபோது
ஆறுதலாய் அனைவருக்கும்
ஒரு வார்த்தை சொல்ல
வழியில்லாது போன
நான்தான்.

ஓடை பழைய படைப்புகள் 13

ஓடை மே 2000 தாள் 1

ஓர் மழை நாள் -நா.வெ.ரா

வயல்வெளித் தீவில்
பறவைகளின்
மழைக்காலக் கூட்டத் தொடர்,
ஒழுகாத கூரைகள் வேண்டியோ?

மூச்சையடக்கி
முங்கிக் குளித்து,
வெய்யிலின் வெம்மை தீர்க்க
குட்டை நோக்கி
எருமைகளின் குட்டிப் பேரணி!

பருவம் சுமந்த பாவையாய்
தரை நோக்கி, தலை குனிந்து
நீர்த்திவலைகள் சுமந்த புற்கள்
என்ன வெட்கமா?

பூமிக்குக் குடைபிடிக்க
வேர்பிடிக்கும் காளான்கள் !
வெய்யில் குறைந்து விட்டதா?
மண்ணை முட்டி
விண்ணை எட்டிப் பார்க்கும் பூக்கள் !

சற்று முன்கூட்டியே வரக்கூடாதா?
எப்படிக் கறுத்துவிட்டேன் பார்!
உடலைச் சிலுப்பி
மழையிடம் கரையும்
நனைந்த காகம்!

என்னப்பா,
சற்றுப் பரந் து விரியக்கூடாதா?
மழைக்கு ஒதுங்கலாமில்லையா?
நாய்க்குடையிடம் நாய்

ஐயையோ! அம்மா திட்டுவாள்,
மழையில் நனைந்தால்
சளிப்பிடிக்கும்
குடை - மன்னிக்கவும்,
தோகை விரிக்கும் மயில்கள்.

அம்பின்றி என்ன பயன்?
மழை நம்மை விரட்டுமுன்
நாமே மறைந்து விடுவோம்!
தூரத்தே எட்டிப் பார்க்கும்
வானவில்!

என்னப்பா,
அருகில் மனைவியின்றி
மழை வந்து என்ன பயன்?
தர்க்கம் செய்யும் தவளைகள்

ஓடை பழைய படைப்புகள் 12

ஓடை மே 2000 தாள் 1
அன்புடையீர் வணக்கம்
சென்ற மாத ஓடைக்குக் கிடைத்த வரவேற்பு, எங்கள் மீதான பொறுப்புகளை மிகவும் நன்றாகவே உணர வைத்தது. கேலியயும், கிண்டலையும், "இவனுகளுக்கு வேற வேலை கிடையாதப்பா " என்பது மாதிரியான விமர்சனங்களையும் எதிர்பார்த்த எங்களுக்கு அது பொய்த்துப்போய், எல்லாவிடங்களிலும் இருந்து கிடைத்த நல்ல வரவேற்பு, ஆர்வத்துடனான கைகுலுக்கல்கள், கண்களில் தெரிந்த மின்னல்கள், நான்கைந்து நாட்களுக்குத் தரையில் இல்லாது ஏதோ வானத்தில் பறப்பது போன்ற உணர்வு. அதிக சந் தோஷத்திலும் ஏனோ அழுகைதான் வந்தது. ஒருவேளை ஆனந்தக்கண்ணீராக இருக்கலாம். நாம் பெற்ற குழந்தையச் சுற்றியுள்ளவர்கள் தூக்கி வைத்துக் கொஞ்சும்போது ஏற்படும் ஒரு பெருமித உணர்வு எங்களுக்கு ஏற்பட்டது. தமிழ்ப்புத்தாண்டு கொண்டாடுவதா வேண்டாமா என்று இருமனத்தில் இருந்தவர்களை உசுப்பி விட்ட ஓடை பற்றி மேடையில் பேசப்படாவிடினும், விழாவின் ஒவ்வொரு இழையும் ஓடையின் ஒவ்வொரு வார்த்தையின் வெளிப்பாடுதான். முத்துக்களாய்ச் சிதறிக்கிடந்த அனைத்து பாட்டாத் தமிழர்களையும் ஒன்று கூட்டவேண்டும் என்ற ஓடையின் முதன்மையான நோக்கம் முதல் இதழிலேயே நிறைவேறிவிட்டது. இதோ அடுத்த ஓடை உங்கள் கைகளில். அதிகம் அடித்து சவலைப் பிள்ளையாக மாற்றிவிடாமலும், அளவுக்கதிகமாகச் செல்லம் கொடுத்து பிடிவாதக் குழந் தையாக ஆக்கிவிடாமலும் வளர்ப்பது இனி உங்கள் பொறுப்பு. ஜூன் மாத இதழுக்கான படைப்புகளை அளிக்க விரும்புவோர் ஜூன் 5 ஆம் தேதிக்கு முன்னால் கொடுத்து உதவுங்கள்.
இப்படிக்கு
ஆசிரியர் குழு

ஓடை பழைய படைப்புகள்-11

ஓடை ஏப்ரல் 2000 தாள் 8

காதல் ஓவியம் ---கைகாட்டி

இது இரவின் விடியலா?
அல்லது
பகலின் முடிவா?

இந்தஒற்றை மனிதனின்
செதுக்கப்படாத மனத்தில்
விடி விளக்கை ஏற்றி வைத்தது யார்?

இந்த விளக்கின் திரியில் பின்னப்பட்டிருப்பது
உன்மீது கொண்ட
என் தீராக் காதலல்லவா?

உன் உறவின் உயிர்ப்பில்,
கருகிக்கிடந்த
என் பாலை மனத்தில்
பசுந்தளிர் துளிர்ப்பதின்
ஓசை அலைகளை
உணர முடிகிறதா
உன்னால்?

நேசத்துக்கு நீட்டிய கரம்
பாசத்தில் நனைந்ததேன்?

உனது விழிகளில்
தொக்கி நிற்கும்
அந்தக் கேள்விக்கு
என்னால்
எப்படி விடையளிக்க முடியும்?

உன் உதடுகள் துடிப்பதும்,
என் உதடுகள் துடிப்பதும்
ஒரே வார்த்தையை
உச்சரிக்கத்தானா?

இந்த சப்பாத்திக்கள்ளியின்
முள்ளின் நுனியில்
பூமொட்டுகளைக்
கண்டு பிடித்தது யார்?

இந்தக் காட்டாற்று வெள்ளத்துக்கு
எப்படி
ஒரு தாமரை
மதகாய் அமைந்தது?

என் இதயக்கதவுகள்
திறந்தே இருப்பது
எந்தத் தென்றலின் வருகைக்காக?

இந்த மலை கரைவது
ஒரு பூவின் புன்னகையிலா?

எந்தக் குயிலின் வருகையினால்
இந்தக்காடு சோலையானது?

இந்தப் பாழ்மண்டபம் கோயிலானது
எந்தப் புறாவின் பாடலில்?

இந்த குயில்கள்
யாரிடம் பாடலை யாசித்து நிற்கின்றன?

இந்தப்பூக்கள்
எவர் கூந்தலின் மணத்தைக் கடன் கேட்கின்றன?

யாருடைய மேலாடைக்காக
இந்த வெண்மேகங்கள் இறங்கி வருகின்றன?

யருடைய கால் நனைக்க
இந்த நதி பாதை மாறி வருகிறது?

இந்த இரவு ஓடி வருவது
யாருடைய கண் மைக்காக?

அந்த நிலா ஓடி வருவது
யாருடைய முகத்தில் தன் முகம் பார்க்க?

ஓடை பழைய படைப்புகள்-10

ஓடை ஏப்ரல் 2000 தாள் 6,7

நா.வெ.ரா சிறுகதை
மூலம் கிடைக்காததால் விடப்ப்டுகிறது.

ஓடை பழைய படைப்புகள்-9

ஓடை ஏப்ரல் 2000 தாள் 4,5

கடிதம் -- கைகாட்டி

(அடுத்தவர்களின் கடிதங்களைப் படிப்பது என்றாலே ஒரு சுகமான அனுபவந்தான். கடிதங்கள் உறையிடப்பட வேண்டும் என்ற அவசியம் எதுவும் இல்லை. இதோ இரு கல்லூரி நண்பர்களிடையே கசப்பு ஏற்படுகிறது. கசப்பு கடிதமாய் உருவெடுக்கிறது. இனி............)

தெய்வா,
அனுபவம் சிறந்த ஆசிரியர். குழந்தை பிறந்தவுடன் நடந்து விடுவதில்லை. அது பலமுறை 'முயன்று, தவறி'க் கற்கிறது. ஒருவனுடைய குணம், பேச்சு, செயல் நடத்தைக்கு அவன் மட்டும் அல்லாது அவனது சூழ்நிலையும் காரணமாக அமைகிறது. நான் மற்றவர்களைப்போல் அல்லாமல் ஒரு செயலைச் செய்யப் போகுமுன் சிந்திப்பது மட்டுமில்லாது, செயல் முடிந்த பின்னும் அதனை அலசுபவன். சில சமயங்களில் கோபம் மனிதனின் நற்குணங்களை மறைத்து, அவனது முகத்தை மாற்றிக்காட்டுகிறது. தூங்கும்போது மட்டுமே மனிதன் மனிதனாக வாழ்கிறான் என்று யாரோ சொன்னது முற்றிலும் உண்மை.

சுயவிமர்சனம் என்பதைக் குறித்து எனக்குக் கவலை இருந்ததில்லை. சுய விமர்சனம் மூலமே ஒரு மனிதன் தன் தவறுகளைத் திருத்திக் கொள்ள முடியும். தன்னைத்தான் விமர்சனம் செய்ய மறுப்பவன், தன் தவறுகளை மூடி மறைப்பவன், முழு மனிதனாக முடியாது.

தேவையற்ற தற்பெருமைகளை அளந்து, 'நான் கிழித்தேன் , நீ கிழித்தாயா?' என்பதுபோலப் பேசுவது நல்லதன்று. எப்பொதும் தனது பக்கமே சரியென்று கண்ணை மூடிக் கொண்டு, ஒரு சிறிதேனும் அதனை ஆராய முயலாமல், த்னக்கு எல்லாம் தெரியும் என்று பேசுபவர்கள், அடுத்தவர் முதுகையே முறைத்துப் பார்த்துக் கொண்டு, தன் முதுகை சிறிதும் ஆராயாது விடுப்பவர்களை, நான் என் வாழ்வில் நிறையக் கண்டிருக்கிறேன். அவர்களால் இந்த உலகுக்குப் பாரமே ஒழிய எந்தவிதமான இலாபமுமில்லை.

இது தலைகளை எண்ணும் உலகம். எண்ணிக்கையில் குறைவாக இருப்பதாலேயே அறிவாளிகள் நிறைய இடர்ப்பாடுகளைச் சந்திக்க வேண்டியிருக்கிறது. தொண்ணூற்றொன்பது முட்டாள்களின் எதிர்ப்பை ஒரு அறிவாளியால் சமாளிக்க இயலுவதில்லை. எந்த் நாட்டிலுமே அறிஞர்கள் அவர்களின் வாழ்வுக் காலத்தில் மக்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டதில்லை. கவிஞர் சகாரா கூறுவது போல '' இன்று இந்த உலகம் அறிவாளியை அடித்துக் கொல்லும். ஐம்பது ஆண்டுகள் கழித்து அவனையே தீர்க்கதரிசி என்று கொண்டாடும்". எனவே அச்சுறுத்தும் உலகத்துக்கு அடிபணிவதால், அறிவு பயன்தராமல் போக நேருகிறது.

மனிதர்கள் தவறுகளின் கலவை. அவன் எளிதில் தவறுகளைச் செய்பவன். அறியாது தவறு செய்பவர்கள் அநியாயக்காரர்கள் அல்லர். அந்த நேரத்துச் சூழ்நிலை , சிந்தனை அவர்களை அவ்வாறு மாற்றுகிறது. நான் பல முறை வருந்தியிருக்கிறேன், எனது தவறுகளுக்காக. என்னால் சிலரது மனம் புண்படுகிறது என்பதை அறியாது பலமுறை செயல்பட்டிருக்கிறேன். யாரிடமோ செல்ல வேண்டிய கோபம் யாரிடமோ சென்று அவமானப்பட்டதும் உண்டு. அழுக்காறுகள் நம்மாலும் நேரலாம். தானாகவும் நாம் மாட்டிக் கொள்வதுமுண்டு.

ஒவ்வொரு மனிதனுக்கும் இரண்டு பக்கங்கள் உண்டு. ஒரு நாணயத்தின் இரு பக்கங்களைப் போல. பெரும்பாலான சமயங்களில் வெளித்தெரிவது- மற்றவர்களால் உணரப்படுவது, ஒரு மனிதனின் சாதாரண முகம். எப்போதாவது நெருக்கடியான சமயங்களில் வெளிப்படுவது அவனுடைய இரண்டாவது முகம். மனிதர்களுடன் பழகுவது கயிற்றின் மீது குச்சியின்று நடப்பதுபோல. பயிற்சி இன்றி நடந்தால் விபத்துகளைச் சந்திக்க நேர்ந்து விடுகிறது. கீழே விழாமல் நடப்பவர்கள் மிகக்குறைவு. கீழே விழுந்தபின்பு மீண்டும் எழுந்து நடந்து, மீண்டும் கீழே விழுவதைவிட, சிறிது நேரம் செலவழித்து, ஏன் கீழே விழுகிறோம் என்பதற்கான காரணத்தை அறிவது நல்லது. காரணத்தை அறிய மனமின்றி இருப்பவர்கள் மூடர்கள். நான் மூடர்களில் ஒருவனாக இருக்க விரும்பவில்லை.

தன்னைத்தவிர மற்றவர்கள் அனைவரும் மடையர்கள் என்று நினைப்பது நடைமுறை வாழ்விற்கு ஒத்து வராது. அடுத்தவன் என்ன சொல்ல வருகிறான் என்பதைப் பற்றிக் கவலைப்படாது, தான் தன் போக்கில் புரிந்துகொண்டு பேசித்திரிவது அறிவாளிக்கு அழகு சேர்ப்பதில்லை. பொறுமை நிதானத்துடன், குறைந்த வார்த்தைகளை அளந்து பேசுவது மிக உயர்ந்தது. மௌனம் வலிமை வாய்ந்த, எவரையும் காயப்படுத்தாத நல்ல ஆயுதம்.
தேவையான இடத்தில் தேவையான அளவில் மௌனம் காட்டுவது நமக்குப் பாதுகாப்பானது.

அறிவை, தெளிவைத் தேடிச் செல்லும் பாதை மிக நீண்டது. அதன் நடுவில் நாம் சந்திக்கும் இடையூறுகளைக் களைய முழுமுனைப்பும் காட்டாவிட்டால், தொடங்கிய இடத்துக்கே திரும்பி வர வேண்டியிருக்கும். அடுத்தவர்களை மட்டம் தட்டியே அற்ப மகிழ்வு பெறும் மனிதர்களை நாம் நம் வாழ்க்கையில் நிறையச் ச்ந்தித்துக் கொண்டிருக்கிறோம். எவன் வாயில் எப்போது விஷம் வெளிப்படும், எந்தப்புற்றில் எந்தப் பாம்பு ஒளிந்திருக்கும் என்றெல்லாம் எவருக்கும் தெரிவதில்லை. மனிதர்கள் அனைவரும் வெவ்வேறு பாதைகளில் சென்று கொண்டிருக்கிறார்கள். எல்லாப் பாதைகளும் இணையாக இருப்பதில்லை. எங்காவது குறுக்கில் கடக்க வேண்டியிருக்கிறது. அந்தச் சமயங்களில் அடுத்தவன் மீது மோதிவிடாமல் எச்சரிக்கையுடன் செல்வது எல்லோருக்கும் நல்லது.

ஓடை பழைய படைப்புகள்-8

ஓடை ஏப்ரல் 2000 தாள் 3

வக்கத்தவன் -- கைகாட்டி

கொதிக்கிற ஒலயில மாட்டிக்கிட்ட
கொசு மாதிரி,
மோட்டாருல சிக்கி அரைபட்ட
பல்லி மாதிரி,

ஓரத்துல ஒட்டியிருந்த
ஒடஞ்ச கம்பத் திங்கப்போய்
ஒரலுல மாட்டிக்கிட்ட
எறும்பு மாதிரி,

ஆசையில
அவசரமாக ஏறி
உச்சந்தாவுக்குப் போய்ட்டு
எறங்க வழி தெரியாம முழிக்கிற
சின்னப்பையன் மாதிரி,

ஒண்ணுக்கடிச்சுட்டு வந்து பாக்கயில
ஒட்டி வந்த ஆட்ல ஒண்ணக்கூடக் காணாம
பண்ணயக்காரனுக்கு
பதில் சொல்ல முடியாம நிக்கிற
பண்ணயாள் மாதிரி,

காசநோய்க்காரன்
காரித்துப்பின எச்சல்ல
மாட்டிக்கிட்ட ஈ மாதிரி,

ஒடம்பெல்லாம் கூனிக் குறுக,
மனசெல்லாம் வலிக்க,
கண்ணீர மறச்சுக்கிட்டுக்
காது கேக்காதவன் மாதிரிப்
போறேன்
கடவீதில
ஒவ்வொருத்தனும்
'என்ன பண்ணிக்கிட்டிருக்கே' னு
கேக்கும்போதும்.

ஓடை பழைய படைப்புகள்-7

ஓடை ஏப்ரல் 2000 தாள் 3

பூக்களின் கதை --கர்ணன்

பூக்களைப் பற்றி
உனக்கு அதிகமாகவே தெரியும்
வண்ணங்கள் பார்த்து,
வாசனைகள் முகர்ந்து
கனகாம்பரம்
குண்டுமல்லி
நீதான் பெயரிட்டாய்

உனக்குப் பிடித்தவை
மஞ்சள் பூக்கள்
பெரும்பாலும் உன்னைச்சுற்றி
பூக்கள் இருக்கும்படி
பார்த்துக் கொள்கிறாய்

பூக்கள் வாசமிக்கவை என்கிறாய்
பூக்கள் விதைகளின் ஆதாரம்
பூக்கள் ரசிக்கத்தக்கவை
பூக்களிடமே பாராட்டுகிறாய்

மகரந்தப் பூக்களுக்கு
சூலகம் தேடும் வெறியைத் தூண்டுகிறாய்
மது சமைக்கும் பூக்களுக்கு
போதையூட்டுகிறாய்

ஓர் இனிய பொழுதில்
தங்கள் இனிய வாசம் ஏந்தி
உன் வாசற்படியில் சில பூக்கள்

நீயோ
கதவுகளைப் பூட்டிக்கொள்கிறாய்
திறப்பதேயில்லை

உன் பேர் சொல்லி மணக்கும்
பூக்களை நீ
உன் கூந்தலில் வைத்துக் கொள்வதுமில்லை

இறுதியில்
பூக்களுக்கு
சருகு
பெயர் மாற்றம் செய்வதும் நீதான்

ஓடை பழைய படைப்புகள்-6

ஓடை ஏப்ரல் 2000 தாள் 2

நாட்டு நடப்புகள் - நா.வெ.ரா

புதிய பொருளாதாரக் கொள்கை,
தாராளமயமாக்கல்,
அன்னிய முதலீடு,
அமெரிக்க டாலர்

வல மனை
வலைப்பின்னல்
மின்னஞ்சல்
கணினி, கால இயந்திரம்

காட்டுக் கூச்சல்களுக்கிடையே
சன்னமாக

ஏம்ப்பா,
எப்ப கம்மா தெறப்பாகளாம்?
நடவு நட்டு நாலு நாளாவுது

ஏங்க்கா,
கிலோ இருவது ரூவாயாமுல்ல
வெங்காயம்
எங்க போயி சொல்ல இத!

அம்மா!
இன்னக்கி பள்ளிக்கூடம் லீவு
நேத்து காத்துல
அரசமரம் அடியோட சாஞ்சிரிச்சி !

பத்தமட பஸ்ஸூ
மூணு நாளாக் காணோமப்பா
என்ன எழவோ?

எங்கள்
கிராமத்து சிணுங்கல்கள்!

ஓடை பழைய படைப்புகள்-5

ஓடை ஏப்ரல் 2000 தாள் 2

உமாவுக்கு -- கைகாட்டி

அந்த மாலை நேரத்துக்
கதவு தட்டலில்
எதிர்பார்க்கவில்லை
நீயென.

போகச்சொல்லாதீர்கள்
என்றுநீ
சொல்லியிருக்கத் தேவையில்லை.

அத்தனை
பதைப்பிலும்
என் மீதான உன் நம்பிக்கை
உன் கண்களில்.

குழந்தை போல்
அள்ளி அணைத்து
ஆறுதல் சொல்லிடத்
துடித்த மனத்தை
அடக்கத்தான் வேண்டியிருந்தது.

ஆட்டோவில்
அருகிலிருந்த போதும்
பேசுவதற்கு நம்மிடம்
வார்த்தைகளில்லை
உன் புன்னகையே
போதுமானதாயிருந்தது

கரம் பற்றி
விடைபெற்றபோதும்
விட்டுப் பிரிய விரும்பாத
உன் மனம்
தெரிந்தது
அந்த இறுக்கமான பிடிப்பில்.

இரயிலின் திசையில்
ஓடின கால்கள்.
உயிர் உன்னோடு போக
திரும்பத்தான் வேண்டியிருந்தது
உன் கைகாட்டுதலை
மனதில் நிறுத்தி.

ஓடை பழைய படைப்புகள்-4

ஓடை ஏப்ரல் 2000 தாள் 1

சிறகுகள் - நா.வெ.ரா

ஓர் இமைப் பொழுதில்
சட்டென்று உதிர்த்து
உயரே எழும்பி
விண்ணில் செலுத்தி

பல நாட்கள் என் காலுக்குக் கீழே
பூமியைப் பதித்த சிறகுகள்
சட்டென்று சுமைகளானதால்
ஈர்ப்பு விசையால்
பூமியை நோக்கி வெகு வேகமாய் நான்

அந்தி வானமாய்
அந்த நாளைய காட்சிகள்
நெஞ்சம் படபடக்க
சிறகுகளின் சுமையால்
முட்டிக் கொண்டு நிற்கிறது கண்ணீர்

இனி எப்படி வாழ்வேன் சிறகின்றி?
பூமியில் தலை முட்டி,
தவிடு பொடியாகி
மண்ணோடு மண்ணாகிக் காற்றில் கலந் தாக வேண்டும்!

எனைச் சுற்றி நீர் நிலைகள்
எனக்கொன்றும் ஆகவில்லை
அனிச்சையாய் நீந்துகின்றன காலகள் -
கரையடைந்து மீண்டும் நடக்கின்றன
இத்தனை நாட்களாய்
எப்படி மறந் தேன் கால்களை ?

இப்போது சிறகின் பாரம் உணரவில்லை
திரும்பிப் பார்க்கிறேன்
சிறகுகள்
வெறும் இறக்கைகளின் கூடாய் !

ஓடை பழைய படைப்புகள்-3

ஓடை ஏப்ரல் 2000 தாள்-1

சகோதரனுக்காக - மொழிபெயர்ப்பு -சகாரா

இயல்பாகவே சிறிது நாணம்
தேங்கியிருக்கிறது நம்மிடம்
நம் உள்முகக் கோலங்களை
பரஸ்பரம் வெளிப்படுத்திக் கொள்வதில்

நான் அடிக்கடி தெரியப்படுத்துவதில்லை
எனக்கு நீ
எவ்வளவு அர்த்தமுள்ளவன் என்பதை
நீயுமதைச் சொலவதில்லை

ஆனாலும் நான் உணர்கிறேன்
பரஸ்பரம் தேவைப் படும்போதெல்லாம்
எனக்கு நீயும்
உனக்கு நானுமாக
இருந்திருக்கிறோம் என்பதை
நாமறிவோமென

ஆக
நெடுங்காலம் கூற விழைந்ததில்
சிற்சிலவற்றைத் தெரிவிக்க
இதுவே சரிநேரமென நினைக்கிறேன்

இவ்வையத்துள்
என் இதயங்கவர்ந்த
மாமனிதரில் ஒருவன்
மிகச்சிறந்த சகோதரன் நீ

To my Brother (Taken from a greeting card)

We have always been a little
shy about expressing our
sentiments for each other.

I don't tell you very often
how much you mean to me , and
you don't often say it to me,
but I think we both know
that if you ever needed me
or I ever needed you,
we'd be there for each other.

so, I think it's time
i told you something
that I wanted to say
for a long time.
You are a great brother,
and you'll be one of
my favourite people
in this world.

ஓடை பழைய படைப்புகள்-2

ஓடை - ஏப்ரல் 2000 தாள் 1

மொழிபெயர்ப்பு --கர்ணன்

இது தவிர வேறு வழியில்லை
வா முத்தமிட்டுக்கொன்டு பிரிவோம்
நான் கொடுத்துவிட்டேன்
உனக்காக என்னிடம் இனி எதுவுமில்லை
மகிழ்ச்சியடைகிறேன்
மனப்பூர்வமாக நான் விடுதலை அடைகிறேன்
கைகுலுக்கிக் கொள்வோம்,
நம் வாக்குறுதிகளை அழித்துவிடுவோம்
மீன்டும் எப்பொழுதாவது சந்திக்க நேரலாம் - முடிந்தவரை
இருவரும் பார்த்துக் கொள்ளாமலிருப்போம்
அது முடிந்து போன காதலின் எச்சத்தையாவது நம்மில் இருத்தும்

இப்பொழுது புதிய காதல் சுவாசத்தின் கடைசி மூச்சில்
உண்மை அவனது மரணப்படுக்கையில் மண்டியிட்டிருக்கும்போது
அறியாமை அவனது கண்களை மூடிக் கொண்டிருக்கும்போது
அவனால் அனைத்தும் கொடுத்து முடிக்கப்பட்ட பிறகு
வாழ்விலிருந்து மரணம வரை
உன்னிலிருந்து அவனை விடுவி

ஓடை பழைய படைப்புகள்-1

ஓடை - ஏப்ரல் 2000, பக்கம்-1

அன்புடையீர் வணக்கம்
அனைவருக்கும் எமது தமிழ்ப்புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். ஓர் கணப்பொழுதில் மனதில் தோன்றிய சிறு ஒளிக்கீற்றுத்தான் இன்று உங்கள் கைகளில் தவழ்ந்து கொண்டிருக்கும் இந்த சோதனைக் குழந்தை. இது சாதனைக் குழந்தையாவதற்கு உங்கள் அன்பும் அரவணைப்பும், தமிழ்த்தாயின் ஆதரவும் மிகத்தேவை. உங்கள் அனைவரின் கைவண்ணத்தையும் , பங்களிப்பையும் இந்த சிறிய புத்தகத்தில் ஏற்றி இன்னும் சிறப்பிக்க ஆசை. ஆனால் மிகக்குறைந்த கால அவகாசத்தில், இதனை தமிழ்ப்புத்தாண்டுக்குள் இனிதே முடிக்க வேண்டும் என்ற காரணத்தால் அனைவரையும் கலந்தாலோசிக்க முடியவில்லை. பாட்டா வாழ்த் தமிழ் மக்களின் கைவண்ணத்தில் அடுத்த இதழ் இன்னும் அதிகப் பொலிவோடு , அதிக நிறைவோடு வெளிவரும். குறைகளைக் குட்டியும், நிறைகளைச் சுட்டியும், அன்புடன் ஆதரவுக்கரம் தாரீர் என வேண்டி விரும்பிக் கேட்டுக்கொள்கிறோம். உங்கள் அனைவரது காகிதக் கப்பல்களையும் இந்த ஓடையில் மிதக்க விடுங்கள்.
இப்படிக்கு
ஆசிரியர் குழு
ஓடை
(தமிழ் புத்தாண்டு, ஏப்ரல்-2000)

வியாழன், ஏப்ரல் 08, 2004

சுட்டிகள் மழை-3

வரிசை எண் படைப்பு படைப்பாளி வகை
மழை-3 துளி-1 தொலைந்து போனவர்கள்சித்ரா விசுவநாதன் கவிதை
மழை-3 துளி-2வன்மையாய்.. அ.சிவகாமசுந்தரி கவிதை
மழை-3 துளி-3புலியூர் முருகேசன் புலியூர் முருகேசன் கவிதை
மழை-3 துளி-4வெண்மையில்..சித்ரா விசுவநாதன்கவிதை
மழை-3 துளி-5கடிதம்-மாலனுக்குகைகாட்டிகடிதம்
மழை-3 துளி-6hஐகூகணேஷ்hஐகூகணேஷ்கவிதை
மழை-3 துளி-7லாவகம்டி.ஆர்.விகவிதை
மழை-3 துளி-8மழையின் பாடல்கர்ணன்கவிதை
மழை-3 துளி-9சிலுவைகைகாட்டிகவிதை
மழை-3 துளி-10மந்தணம்சகாராகவிதை
மழை-3 துளி-11வானமும் நானும்டி.ஆர்.விகவிதை
மழை-3 துளி-12நாற்றுகைகாட்டிகவிதை
மழை-3 துளி-13சொல்புலியூர் முருகேசன்கவிதை
மழை-3 துளி-14வீற்றிருத்தல் சகாரா கவிதை
மழை-3 துளி-15வேதபுரிகள்கர்ணன்கவிதை
மழை-3 துளி-16பொங்கல்துடிமன்னன்கட்டுரை
மழை-3 துளி-17போர்க்களத்திலிருந்துகர்ணன்கவிதை

மழை 3 துளி 17

போர்க்களத்திலிருந்து - கர்ணன்
என் அன்புள்ள நண்பர்களுக்கு "சங்கமித்திரா" சிறுகதையை ''ஓடை(printed version)"யில் படித்தவர்களுக்கு இந்த கவிதை ஏற்கனவே படித்தது போன்று தோன்றும்.நிலவிவரும்"போர்ச்சூழல்" கருதி சிறுகதையை சிலமாற்றங்களுடன் தருகிறேன். அமெரிக்கா-ஆப்கன் யுத்தத்தின்போது எழுதப்பட்டது


ஹிம்சையை
அடியோடு அழிப்பதாய்
ஆயுதங்களோடு புறப்பட்டுவிட்ட
அஹிம்சாவாதிகளே
நீதியின் கண்களே!

உங்கள் உயிர்களை
நேசிப்பவர்களே!

இதோ இடிந்துபோன வீட்டுக்கடியில்
பதுங்கு குழியிலிருந்து
குரல் கொடுக்கும் நான்

அதோ
என் அடுத்தவீட்டு நண்பன்
தூணோடு துணையாய் கிடக்கிறானே!
மரித்துபோனவனுக்கு அருகில்
அவன் மனைவி
அழுகிறாளா?பயப்படுகிறாளா?

உங்கள் தொலைக்காட்சிக்கு
முகம் காட்டுகிறானே
பயந்த விழிகளுடன் அந்தச்சிறுவன்

இவைகளெல்லாம் உயிர்களில்லையா?

உடலில் இருந்து
உயிர் வலுக்கட்டாயமாய்
பறிக்கப்படுவதுதான் நீதியா?

உயிர்களின் மீது
ஊழிக்கூத்து நடத்திதான்
அதர்மத்தின்
ஆணிவேர் பிடுங்கப்படுமா?

பூமிக்கு இரத்தச்சாயம்
பூசுவதுதான்
விடுதலையா?புனிதப்போரா?

ஏ?
உயிரில்லா தெய்வங்களே
உயிர் கொடுத்துதான்
உங்கள் புனிதம் காக்கப்படுமா?

இரத்தம் குடிக்கும் மதங்களே!
மனிதனை மனிதன்
அழித்துக்கொண்டு
எலும்புக்கூடு மண்டையோடுகள் மட்டும்
நிறைந்த பூமியில்
உங்கள் தெய்வங்கள்
என்ன நீதி செய்யும்?

ஏ! விஞ்ஞானமே
உன் அசுர கை கொண்டு
அனைவரையும்
அள்ளி புதைத்து போ

பின்
புல் பூண்டிலிருந்து
தொடங்கட்டும்
பரிணாமம்

மழை 3 துளி 16

மலரும் நினைவுகள் -பொங்கல் -துடிமன்னன்

மார்கழி மாதத்தின் கடைசி வாரங்களில் எங்கு பார்த்தாலும் சுண்ணாம்பு சிந்திய தளங்களும், சுண்ணாம்புடன் சேர்த்துக் கலக்கப்பட்ட வேதிப் பொருள்களின் மூக்கிலேறும் நாற்றமும் நிறைந்த சூழலும் வீட்டில் காணக் கிடைக்கும்.

தென்னை மரத்துப் பாளையின் அடிப்பகுதியிலிருந்து தயாரித்த 'மட்டை' ஒரு கையிலும் , சுண்ணாம்புக் கலவை நிறைந்த வாளி இன்னொரு கையிலும் , சுண்ணாம்பு அரிக்காமலிருக்க கை கால்களில் கட்டிக் கொண்ட சாக்கு உறைகளும் , தலையில் துண்டுமாய் எல்லா வீடுகளிலும் மனிதர்கள் வெள்ளையடிக்கும் காட்சியில் ஊரே அமர்க்களப்படும்.

'வீட்டுக்கடங்காமல் திரிந்து கொண்டிருக்கும்' என்னைப் போன்ற 'தடிமாடுகளு'க்கு இந்த சமயங்களில் ஏகப்பட்ட கிராக்கி ஏற்படும். புதிய சட்டை, பொங்கலன்று 10 ரூபாய் செலவுக்கு, நிறைய நாட்களாய்
வாங்கித் தராமலிருக்கும் உருண்டையான 'டீக்கடை கேக்' என்று எங்கள் ஒவ்வொருவருக்குமாய் கோரிக்கைகள் வேறுபடும். பொங்கலுக்குத் தேவைப்படும் தேங்காய்களை மரங்களில் ஏறிப் பறித்துத் தரும் கூடுதல் பொறுப்பின் மூலம் எனக்கான தேவை இரு மடங்காகும்.

வெள்ளையடித்தல் முடிந்ததும், போகியன்று வேப்பங்கொத்து, பூளப்பூ, அவாரம்பூங் கொத்து ஆகிய காப்புக் கட்டுவதற்கான பொருள்களைத்தேடி ஒரு பெரிய (சிறுவர்+சிறுமியர்) படை கிளம்பும். ஆற்றுவாரியில் செல்லும் முழங்காலளவு தண்ணீரைத் தாண்டுவதற்காய் கற்கள் தேடிப் பாலம் அமைக்கும் முயற்சியில் அனைவரிடமும் ஓர் ஒற்றுமை தென்படும். பாலம் தாண்டியதும், அவரவர் தேவை நினைவுக்கு வந்து ஆளாய்ப் பறந்து அனைவரும் பூங்கொத்துகளைச் சேகரிக்கும் காட்சி , சுற்றித் திரியும் பட்டாம்பூச்சிகளையும், கம்பங்காட்டில் திரியும் குருவிகளையும் நினைவிற்குக் கொண்டு வரும்.

தேவையான அளவுக்கு ஒடித்த சிலர், இன்னும் தேவை நிரம்பாதவர்களுக்கு உதவி செய்யத் தொடங்குவோம். அனைவருக்கும் தேவை முடிந்த பின், ஆற்றுவாரி ஓரமாயிருக்கும் வேப்பமரத்தில் தொங்கும் கிளைகளில் வித்தை போடுவோம். இப்படியாக விளையாடித்திரிந்த பின் , அவரவர் காடுகளின் மூலைகளில், போர் (வைக்கோல், சோளத்தட்டை, கம்பந்தட்டை இவற்றை அடுக்கி வைத்திருக்கும் அமைப்பு), கிணறு , வீட்டின் தாழ்வாரம் என்று காப்புக் கட்டியதில் 'பெண்டு நிமிரும்'.

பிறகு வீட்டின் பழைய தேவை முடிந்த கிழிந்த, பழைய துணிகள், காகிதங்கள், பிய்ந்த கயிறுகள் அனைத்தும் சேகரித்து வாசலின் மூலையில் சேகரிக்கப்படும். பழைய துணிகள் பெறுவதற்காய் சேரியிலிருந்து வரும் மக்களுக்கு அளித்து மீந்தவை அன்று இரவில் கொளுத்தப்படும். நாள் முழுவதும் அலைந்து திரிந்த அலுப்பில் ஆனந்தமாய் தூக்கம் வரும்.

மறுநாள் விடிந்ததும் , அம்மா கோலம் போடுவதற்குள், பூசணிப் பூக்கள் கொய்து வந்து, பசுமாட்டுச் சாணியில் பிள்ளையார் பிடித்து, பூசணிப் பூவைச் சொருகி கோலத்தின் நடுவில் வைப்பது சொல்லாமலேயே என்க்கு விதிக்கப்பட்ட கடமையாகும். அப்பா கடையிலிருந்து திரும்ப நேரமானால், சாமி கும்பிடும்போது தேங்காய் உடைக்கும் உரிமை எனக்களிக்கப்படும்.

சர்க்க்ரைப் பொங்கலுக்காய் மண்டை வெல்லம் தட்டுகையில் ஆசையை அடக்காமல் கொஞ்சம் வெல்லம் வாய்க்குள்ளூம் போவதுண்டு. பல் விழுந்து முளைக்காத சிறுவர்கள் சாமி கும்பிடுவதற்கு முன் சாப்பிட்டால் சாமி கோபப்படாது என்ற விதித் தளர்வுகளெல்லாம், பல் விழுந்து முளைத்த பின்னும் எங்களால் மீறப்படுவதுண்டு.

சர்க்கரைப் பொங்கலும்,பழங்களும், தேங்காய்ச் சில்லுகளும் தின்று பெருத்த வயிறுடன் மாடுகளை மேய்ச்சலுக்கு ஓட்டிச் சென்றால் வழியிலேயே தூக்கம் வரும். முறை வைத்து மாறி மாறித் தூங்குவோம்.
அடுத்த நாள் மாடு, கன்றுகளைக் குளிப்பாட்டுவதிலும், கொம்புகளுக்குக் காவி அடிப்பதிலும் அப்பாவுடன் உதவிக்குமிருக்க வேண்டும். மாட்டுக் கட்டுத்தரையில் நிற்கும்பொழுது கடிக்கும் ஈக்களின் தொல்லை அனுபவித்தால் மட்டுமே உணர முடியும்.

மாட்டுப் பொங்கல் முடிந்ததும் கரும்புகள் அனைத்தும் பங்கிடப்படும். பற்கள் வலுவற்ற அம்மாவின் கரும்பிலே பங்கு கொள்வதில் அனைவருக்கும் அடிதடியாயிருக்கும். பொங்கல் சோறு,பழம்,தேங்காய் வாங்க
பண்ணையாட்களும், நாவிதர்,வெளுப்பவர் அனைவரும் வரத்தொடங்குவர். நவதானியங்களில் செய்த மாவுருண்டைகளின் சுவை, மாசி மாதம் வரை நாக்கிலிருக்கும்.

நான்காம் நாளன்று வீதியோரத்தில் விளையாட்டுப் போட்டிகளைப் பார்க்கப் போவதுண்டு. இவை அனைத்தும் முடிந்த பின் மறுநாள் பள்ளி சென்றால் வகுப்பு முழுவதும் ஒரே காட்டுக் கூச்சலாயிருக்கும். உண்டவை, உண்ணக் கிடைக்காதபோதும் உண்டதாய்ப் பீற்றிக் கொண்டவை என்பதாய் இரைச்சல் பள்ளியின் மைதானம் தாண்டி கடைவீதிக்குக் கேட்கும்.

மழை பொய்த்துப் போய், மணற்கொள்ளையால் ஆற்றுவாரி சுரண்டப்பட்டு, கிணறுகள் தூர்ந்து போய், வயிற்றுப் பாட்டிற்கு மரங்கள் வெட்டப்பட்டு, மேய்ச்சலினமையால் மாடுகளை விற்று அருகிலிருக்கும் நகருக்கு அண்டிப் பிழைக்க வந்து ஆறேழு வருடங்கள் கழித்து பழைய ஊர் போய்ப் பார்த்தபோது ஏதோ சுடுகாட்டில் காலடி வைத்தது போல் காட்சியளித்தது.

படிக்கக் குழந்தைகளின்றி பள்ளிக்கூடம் கைவிடப்பட்டு, தேர்தலன்று மட்டுமே வாக்குச் சாவடிக்காகத் திறக்கப்படுவதாய் அறிந்தேன். சேரி மக்கள் அனைவரும் சாலைப் பணிக்காக குடும்பத்தோடு ஈரோட்டுப் பக்கம் இடம் பெயர்ந்ததாய்க் கேள்வி. அரிசி சாப்பிடுவது மட்டுமே நாகரிகம் என்றும் நெல் விளைவிப்பது மட்டுமே விவசாயம் என்றும் புனைந்த போலிப் பசுமைப் புரட்சிகளின் கற்பழிப்பில் நவதானியங்கள் எல்லாம் கதைகளில் மட்டுமே வாழ்வதாகக் கேள்வி.

ஆந்திராவின் கந்துக்கடைகளுக்கும், கரூர் சாயப்பட்டறைகளுக்கும், கல் குவாரிகளுக்கும் மக்கள் இடம் பெயர்ந்த பின் ஆங்காங்கே கைவிடப்பட்டு இடிந்து கொண்டிருக்கும் குடிசைகளுக்கப்பால் ஒரு சில கிழடுகள் இன்னும் உயிருடனிருக்கின்றன- ஆவாரம்பூவும் , பூளப்பூவும் என்ன நிறத்திலிருந்தன என்ற உண்மையைத் தங்கள் இதயங்களில் இன்னும் ஏந்தியபடி....

போகியன்று எரிப்பதற்காக இன்னும் மீதமிருக்கின்றன - வறுமையும், மழைதரும் காடுகளை அழித்து வரும் வன்மையும், வாக்குகளின் மதிப்பறியா அறியாமையும், மக்களின் சொத்தைக் கொள்ளையடிக்கும் ஊழல்களும், வறுமை தீர்க்கக் கையாலாகாத அரசுகளும், காலாவதியான திட்டங்களும்...

இந்தியா ஒளிர்வதாய் ஏய்க்கும் விளம்பரங்கள் வருகின்ற தொலைக்காட்சி பார்த்தும், கோடிக்கணக்கான பணத்தை வெளிநாடுகளில் கொண்டுபோய் கொட்டி எடுக்கப்படும் சதை காட்டும் திரைப்பட மாயைகளில் மனதைப் பறிகொடுத்தும், அரசியல் கட்சிகளின் கோஷ்டிப் பூசல்களில் புளகாங்கிதமடைந்தும் கிடக்கின்ற நமது பொங்கல் எப்போது?

மழை 3 துளி 15

வேதபுரிகள் - கர்ணன்

மனிதன்
வெகுகாலத்திற்கு முன்பு
உழவு கற்று
ஊர் அமைத்திருந்த நேரம்
காற்றும்
மழையோடு இடியும் மின்னலும்
இன்னபிறவும்
பயமுறுத்திக்கொண்டிருந்தன

அன்று
வானம் தெளிவா́யிருந்தது
நண்பகல்
செங்கதிரோன்
வாடையை
கதகதப்பாக்கிக் கொண்டிருந்தான்

அவன் நதியோரப்பாறையில் அமர்ந்திருந்தான்
உழைப்பு அவனுக்கு உவர்ப்பு
ஆயுதங்களையும் தொடுவதில்லை
உழைக்காதவனுக்கு உணவில்லையாதலால்
நட்சத்திரங்களோடு பேசிக்கொண்டு
நதி நீரைக்குடித்து வாழும் நலிந்த தேகம்

திடிரென்று
பகலவன் முகத்தில் கரும்புள்ளி
நேரம் ஆக ஆக அதிகரித்தது கரும்புள்ளி
முன்னொரு நாள் கண்டது
நினைவு வர
ஊரைக் கூவியழைத்தான் - இதற்குள்
ஊரை இருள் கவ்வ ஆரம்பித்தது

நதியோரம் கூடியது ஊர்
பகலவனை இருள் தின்ன
ஊர்கூடி ஓப்பாரி வைத்தது - இதற்குள்
கண் இழந்தனர் பலர்

அவனோ ஊர்த்தலைவனின்
காதுகளில் மந்திரம் ஓதினான்
அதே மந்திரம் அனைவரும் ஓதி
கண்முடியிருக்க
சிறிது நேரம் கழித்து அடுத்த மந்திரம் ஓதி
கண் திறக்க
கதிரவன் இருளைத்தின்று
ஊரை வெளிச்சமாக்கியிருந்தான்

ஊர்கூடி
மந்திரம் ஓதியவனுக்கு மானியமும்
ஊர்ச்சபையில் உயர்ந்த பதவியும் அளித்தது

இவ்வாறாக
முதல் மந்திரம் எழுதப்பட்டது

பின்
வசிஷ்டனும்
விசுவாமித்திரனும்
தசரதன் காதுகளில் ஓதினர்

பிறகு
வால்மீகியோ
தனது மந்திரங்களால்
இராமராஜ்யத்தை நடத்தினான்

ஆகா!
வேதவியாசன்
அள்ள அள்ளக் குறையாத
வேத ஊற்று அல்லவா! அவனது அஸ்தினாபுரம்

இவ்வாறாக
இது போன்றே
உலகெங்கிலும்
வெவ்வேறு இடங்களில்
வெவ்வேறு காலங்களில்
தீர்க்கதரிசிகளும்
முனிவர்களும் தோன்றி
வேதம் ஓதினர்

வேதங்கள் பெருகின
உயர்பதவிகள் பெருகின
மான்யங்களால் ஊர்ச்சபை பிரிந்து
வேதபுரிகள் தோன்றின

இப்போதெல்லாம்
வேதபுரியில் வேதங்கள் எரிக்கப்படுகின்றவாமே
அட! ஆம் வேதபுரத்துக் கொடிகள் எரிகின்றனவே!
கூட எரிவதென்ன? அது ஓடி கிழே விழுந்து துடிதுடிக்கிறதே!
அதற்கப்பால் என்ன சத்தம்?
அந்த பெரிய கும்பல் சிலரை
வீட்டிற்க்குள் வைத்து....
அட! அந்த வீடு கொளுத்தப்பட்டுவிட்டதே!
இரத்தம் வழிய உயிர் போகும் தருவாயிலும் அவன் கண்களில் ஏன்
கொலைவெறி?
என்னைச் சுற்றி என்ன? புகை மூக்கையடைக்கிறதே!
தோல் எரிகிறதே!
நான் அணிந்திருப்பது ஒரு வேதக்கொடியின் வண்ணமல்லவா!
ஆ....ஆ...


( இந்தக்கவிதை குஜராத் கலவரங்களின்போது எழுதப்பட்டது.
இதில் குறிப்பிடப்பட்டுள்ள சூரியகிரகண கதை அமைப்பு கலில் ஜிப்ரானின் சிறுகதை ஒன்றில் சந்திரகிரகண நிகழ்வாக காட்டப்பட்டுள்ளதை தழுவியதாகும் )

மழை 3 துளி 14

வீற்றிருத்தல் --- சகாரா

Sahara

காடை முட்டையிட்ட
கையகல இடம்
முயல் குடியிருந்துபோன
பதுங்கு புதர்கள்
நண்டு பறித்த
சேற்றுவளை
எலி திட்டமிட்டிருக்கும்
மாற்று வழிகள்
மண்குளவி தோண்டிய
செந்துளை
தேனீக்கள் தங்கியிருந்த
கிளை ராட்டு
குருவி பின்னிய
அந்தரக் கூடு
குல்லாப் பூச்சியின்
மறைவிடச் சிறுகுழி
எறும்பு வடிவமைத்த
தானியக் களஞ்சியம்

இவற்றை விட
எந்த வகையில் ஒசத்தி

வவ்வால் வீச்சமடிக்கும்
வசந்த மண்டபங்களும்,
அபலைகளைச் சூறையாடிய
அரண்மனை அந்தப்புறங்களும்..?

மழை-3, துளி-13

சொல் - புலியூர் முருகேசன்

மூச்சறுந்து உடல் கிடக்கும்
பாடையில் சொல்லுக்குப் பயந்து -
துக்கம் விசாரிக்கும் வாய்களெல்லாம்
சொல் சொல்லி
செத்துப் போன உடல் கிழிக்கும் !

நாசி வழிய .... வழிய
சுவாசம் இழுத்து விட
ஏதோ சொல்லித் திட்டப் பார்க்கும்
வழியில் போகிற நாகரிக சொற்கள்.

ஒரு கவளம் சோறு விழுங்கி
மீதிக்கு நீர் குடித்து
திருப்தியுறும் போதில் -
அருவருப்பாய் சொல் நீட்டும்
புளியேப்ப வாய்கள் !

நிர்வாணம் களைந்து
மெய்மூடித் துணி அணிய -
நமுட்டுச் சிரிப்பாய் சுடும் சொற்கள் !

ஒன்றுக்கிருந்தாலும், மலங்கழித்தாலும்
' இதென்ன ' என கேலி பேசும்
அழுக்குப் படியாத வார்த்தைகள் -

கண்திறந்து கண்மூடி சாயும்வரை
சொல்லுக்குப் பயந்தே வாழ்வு நகரும் !

' சொல் ' ஒன்றும் சொல்லாமல்
மூலையில் ஒதுங்கியிருக்கும்
சொல்லுக்குப் பயந்து -.

மழை-3, துளி-12

நாற்று -கைகாட்டி

1.


ஈர மண்ணாய் நான்
இருந்ததை அறியாமல்
விதையாய் வந்து
விழுந்தாய் என்னுள்

இயற்கை தனது கடமை செய்தது.
இறுக்கமாய் வேர்கள் இதயம் பரவி,
மரமாய் வளர்ந்து
மனதுள் பூத்தாய்.

ஆலாய் நீயிருப்பது அறியாது அவர்கள்
நாற்று ஒன்றை நட்டுச் சென்றனர்.
வேர்விட இடமின்றி நாற்று நலிந்தது.
மரத்தின் இருப்பு மெல்லத் தெரிந்தது.

கோடரி கொண்டு கொய்யும் முயற்சியில்
மரத்தோடு சேர்ந்து தினமும் சாகிறேன்
மறக்க வழியில்லை மறைக்கத் தெரியலை
மனதுக்குள் நாளும் மடிந்து போகிறேன்

காலக் கணக்கு வேறாய் இருக்கு
வாழ்க்கையே ஒரு சமன்பாடானது
மரத்துக்கு நாற்றோ பதிலீடானது?

2.

முகம் பார்க்காது முப்பது மாதங்கள்
நட்பு நட்பு என்றே நடந்தோம்

உறவாய், உருவாய் நெஞ்சில் கருவாய்
பிறவிப் பேறாய் பிணைந்து நின்றாய்

மனம் உடைந்தபோது மடி கொடுத்தாய்
கோபம் கொண்டபோது குழைந்து போனாய்
தாகம் கொண்டபோது ஆறாய்ப் பரந்தாய்
விழிப்பில், கனவில், வினையில் நின்றாய்

வழியில் துணையாய் வலியப் பிணைந்தாய்
வலியை எனக்கு வரமாய்க் கொடுத்தாய்

குட்டையாய்க் கிடந்தேன் வாரியாய் இணைந்தாய்
ஆறாய் மாறாமல் காலம் பிரித்ததோ ?

மணலில் வரியாய் மறைந்து போகாமல்
கல்லில் சிற்பமாய் செதுக்கி நிற்கிறாய்

3.

தொலைவில் இருந்து கல்லெறிந்தாலும்
கண்ணாடி என்னவோ உடைந்துதான் போனது

மின்னலைகளை வெறுக்கிறேன்
ணர்ச்சியைக் கொன்று வெறும்
உமியை உன்னிடம் சேர்த்து வந்ததோ?

கிழிந்த மனதில் நூலாய் விழுந்தாய்
ஊசியின் வேகத்தில் மீண்டும் கிழிந்ததே!
பறியில்லை, துணியில்லை
பலமுறை இணைத்துப் பலன் காண்பதற்கு

செங்கரையான் தின்ற வீணையை
சங்கீதக் கச்சேரிக்கு எடுத்துப் போகிறார்.
கோபுர மாடம் இடிந்து வீழ்கையில்
புறாவிற்கு இங்கு துணையாவார் யார் ?

மழை 3 துளி 11

jpg வடிவத்தில் உள்ள கவிதையை இங்கு படிக்கலாம்

மழை-3, துளி-10

மந்தணம் --சகாரா
(' நதிக்கரையில் தொலைந்த மணல் ' கவிதைத் தொகுப்பு )


பிழைகள் அடுக்கப்பட்ட
பெருமிதப் படிக்கட்டுகள்

வணக்கங்கள் சார்சார்கள்
வழியும் வாயில்கள்

வாயும் செவியுமற்ற
சாயச் சுவர்கள்

கோப்புக் குப்பைகள்
பிதுங்கும் அலமாரிகள்

பித்தலாட்டங்களைப் பாதுகாக்கும்
பீரோ மறைவிடங்கள்

காரிருள் சப்பிப்போட்ட
குருட்டு மின்விளக்குகள்

கவர்கள் முன்மொழியாத மனுக்களை
இழுத்தடிக்கும் கடிகாரங்கள்

லீவுநாள் பார்க்கவென்றே
தொங்கிச் சாகும் காலண்டர்கள்

லஞ்சக் கறை படிந்த பெஞ்சுகள்
மேசை டிராயர்கள்

மனிதம் அறியாத
மொன்னை நாற்காலிகள்

புளுகுகளை நகலெடுக்கும்
ரோனியோ, டைப்ரைட்டர்கள்

சம்பள விகிதத்தைச் சரிபார்த்தே
சலித்துப்போன கால்குலேட்டர்கள்

குப்பைக் கூடைகளால்
குதறப்பட்ட கெஞ்சல்கள்

இரக்கம் வழிய மறுக்கும்
அரக்க எழுதுகோல்கள்

ஆணைகள் தெளிக்கப்பட்ட
சாணிக் காகிதங்கள்

கூக்குரல் எழுப்பும்
கோரிக்கை விண்ணப்பங்கள்

மிரட்ட முடியாமல் தவிக்கும்
சுற்றறிக்கைகள்

எந்த ரெகமண்டேசனையும் கரைக்கும்
ரெடிமேட் பதில்கள்

காலில் விழுந்தாலும்
கைவிரிக்கும் ரூல்சுகள்

தனக்கென்றால் இடுப்பொடிந்து
தலைவணங்கும் சட்டங்கள்

வேறொன்றுமில்லை இது
ஓர் அரசு அலுவலகத்தில்
ஏகமாய்
இ(றை)றந்து கிடக்கும் தளவாடங்களின்
சிறுகுறிப்பே

மழை-3 துளி-9

T
-கைகாட்டி


மின்சாரம் வெட்டுப்பட்ட
புழுக்கமான இரவொன்றில்
கொசுக்களோடு பிறாண்டிக்
கொல்கின்றன உன் நினைவுகள்
தூக்கம் பறித்து

வீங்கி வலியெடுத்த
உமிழ்நீர்ச் சுரப்பிகள் நசுங்க
உயிர் வாழ்வதற்காய்
உணவு திணிக்கப்படுவது போல்
வாழ்ந்து தொலைக்க வேண்டியிருக்கிறது
எஞ்சிய வாழ்க்கை

விடுபடுவதற்காய்த்
துள்ளி துள்ளி
சுருக்குக் கயிற்றில்
இறுகிச் சாகும் மிருகமாய்
மறக்க நினைத்து மறக்க நினைத்து
மாண்டு போகிறேன்
மறதி தொலைத்து

புரியாதென்று வெளிப்படுத்தியதால்
அவளிடமும்
உணர்ந்து கொள்வாயென்று சொல்லாமல் விட்டதால்
உன்னிடமும்
இறுதியில் குற்றவாளியாய்க்
கழுவிலேற்றப்பட்டது
நான் மட்டும்தானே?

பசப்பி , மயக்கி
உடலுக்காய்ப் பொய் சொல்லி
உதறிப் போதல் பயிலாத
ஒழுக்கவாதிக்கெல்லாம்
கிடைப்பதென்ன
சிலுவைதானே?

மழை-3 துளி-8

மழையின் பாடல் : கலீல் ஜிப்ரான்
தமிழில் கர்ணன்


இறைவன் வானத்திலிருந்து தொங்கவிட்ட
வெள்ளி நூலிழை நான்
என்னை அணைத்து
நிலம், பள்ளத்தாக்குகளை அழகுபடுத்தியது இயற்கை

தோட்டங்களை அழகுபடுத்த
இஸ்தரின் மணிமுடியிலிருந்து
வைகறையின் புதல்வி
பறித்து வீசிய அழகிய முத்துக்கள் நான்

நான் அழுகின்றபோது மலை சிரிக்கும்
என் அமைதி மலர்களுக்கு மகிழ்ச்சி
நான் தலைவணங்கும்போது அனைத்தும் உயரும்

நிலமும் மேகமும் காதலர்கள்
அவர்களுக்கிடையில் நான் அன்புத்தூதுவன்
ஒருவரின் தாகத்தை தீர்க்கிறேன்
இன்னொருவரின் வேதனைக்கு மருந்தாகிறேன்

என்வருகையை இடி முழங்குகிறது
வானவில் எனக்கு விடையளிக்கிறது
தெளிவற்ற பிரபஞ்சத்தின் அடியில் தொடங்கி
மரணத்தின் விரிந்த சிறகுகளின் கீழ் மடியும்
சாதாரண வாழ்வுதான்- என் வாழ்வு

கடலின் இதயத்திலிருந்து வெளியேறி
தென்றலைத் தழுவுவேன்
நிலத்தின் தேவைகண்டு இறங்கி வருவேன்
மலர்கள் மரங்களை
பல ஆயிரம் விதங்களில் அணைத்துக்கொள்வேன்

என் மென்மையான கரங்களால்
சாளரங்களை வருடுகிறேன்
என் உச்சரிப்பு ஒரு வரவேற்புபாடல்
அனைவராலும் கேட்கமுடியும்
ஆனால் உணர்ச்சிமிக்கவர்கள் புரிந்துகொள்கிறார்கள்

காற்றின் வெப்பம் என்னை பிரசவிக்கிறது
ஆனாலும் அதனை கொன்றுவிடுகிறேன்
ஆணிடமிருந்து வலிமைபெற்று
பெண் அவ்னை வெல்வதுபோல்

நான் கடலின் பெருமூச்சு
நிலத்தின் சிரிப்பு
வானத்தின் கண்ணீர்

அதனால் காதலைப்போன்று-நான்
ஆழமான அன்புக்கடலின் பெருமூச்சு
உயிரின் வண்ணமயமான சிரிப்பு
முடிவில்லா ஞாபக வானத்தின் கண்ணீர்

மழை 3 துளி 7

jpg வடிவிலான கவிதையை இங்கு படிக்கலாம்

மழை-3, துளி-6

haikooganesh@yahoo.com

அரிசிய அதக்காத புள்ள -
கல்யாணத்தன்னைக்கு
அடமழை பிடிக்கும்....

புள்ளறுக்கப் போற பொம்பளைக
சுத்த பத்தமா போகனும் -
இல்லாங்காட்டி பூச்சி கீச்சி
பின்னாலேயே வந்துப்புடும்

ஒத்த புளியமரம் பக்கம்
தனியா போகாதீக...
முனி அடிச்சுப்புடும்

கால் ஆட்டாதடா.. படவா
வூட்டுக்கு ஆவாது ..

இப்படித்தான் ஏதாவது
கோளாறு சொல்லிக்கிட்டுக் கிடப்பா..
அப்பத்தா..

ஊசியாய்க் குத்தும்
மார்கழிப் பனிக்கு
பொசுக்குன்னு
பலியாகிப் போனாள்..

ராவுல நாய்
ஊளையிடும் போதே
எனக்குப்பட்டுச்சுன்னு
புலம்பிக் கொண்டார்- தாத்தா !

மழை-3, துளி-5

மே-2003 திசைகள் மின்னிதழில் திரு மாலன் எழுதிய 'காணாமல் போன கனல்' என்ற கட்டுரை படித்தபின் எழுந்த
கருத்துக்களுடன் எழுதப்பட்ட மடல். (இது சிறிது திருத்தங்களுடன் ஜூன் 2003 திசைகள் இதழில் வெளியிடப்பட்டது)

அன்புடன் திரு மாலனுக்கு,
வணக்கம். தினமணியில் நீங்கள் இருந்த காலத்தில் (நான் 8,9 படித்துக் கொண்டிருந்தேன் என்று நினைக்கிறேன்) உங்கள் எழுத்துக்கள் எனக்குப் பழக்கமாயின. ' என் சன்னலுக்கு வெளியே ' என்ற தலைப்பில் நீங்கள் துணிவுடன், எந்த சமரசமுமில்லாது உள்ளதை உள்ளபடி எழுதியது கண்டு வியந்தவன்.
'திசைகள்' மே இதழில் தங்கள் 'காணாமல் போன கனல்' கட்டுரை படித்தேன். இன்றைய இளைஞர்களிடம் அரசியல்,சமூக உணர்வுகள் குறைந்து போய்விட்டன என்ற தங்கள் கருத்தில் உண்மை இருக்கத்தான் செய்கிறது. ஆயினும் நீங்கள் 1960களின் இளைஞர்களோடு 2000த்து இளைஞர்களை ஒப்பிடுவது போல் இந்த மாற்றம் திடீரென்று வரவில்லை. இந்த சமூக, அரசியல் உணர்வானது 70களுக்குப் பின்பு மிக வேகமாகக் குறைய ஆரம்பித்தது.
இதற்கான அடிப்படைக் காரணங்களில் அப்போது உருவான அரசியல் மாற்றங்களும், கல்வி முறையில் ஏற்பட்ட மாற்றங்களும் முக்கியப் பங்கு வகிக்கின்றன. நான் பள்ளி தாண்டி கல்லூரிக்குள் நுழைந்த பிறகுதான் , கல்வி என்பது வெறும் வேலை வாங்கித் தரும் சாதனமாக மாற்றப்பட்டிருப்பதை உணர முடிந்தது. இது இன்றைய இளைஞர்களின் தவறில்லை. நீங்கள் குறிப்பிட்டது போல் 1960களின் இறுதியில் இருந்த மாணவர்கள் ஒரு சமூகப் புரட்சியையே செய்து காட்டினார்கள். அவர்களில் 90 விழுக்காடு மாணவர்கள் முதல் தலைமுறைப் படிப்பாளிகள்.
அன்று படிப்பு என்பது பணம் சம்பாதிக்க உதவுகின்ற வெறும் சான்றிதழ்களின் குவியலல்ல. அது விழி திறக்க உதவிய விடிவெள்ளி. அதற்குப் பிந்தைய தலைமுறைகளில், திராவிட இயக்கங்களின் குளறுபடியான கல்விக் கொள்கை, மாணவர்களைத் தம் சொந்த நலனுக்காகத் தூண்டி விட்ட அரசியல்வாதிகள் எல்லாம் சேர்ந்து அவர்களை வேறு எந்த சிந்தனைக்கும் ஆட்படுத்த விடாது ஒரு குறுகிய வட்டத்துக்குள் அடக்கி வைத்தன. உண்மையை உரத்துப் பேசும் மாணவர்கள் அனைவரும் உட்கார வைக்கப்பட்டனர்.
'தீர்க்க தரிசியானவன் தன் வீட்டிலல்லாது வேறு எங்கும் சுகவீனப்படுவதில்லை' என்ற விவிலியத்தின் வரிகள் மிக மிக உண்மை. பொறியாளர் ஆவதும், மருத்துவர் ஆவதுமே அனைத்து மாணவர்களுக்கும் இலக்காக நிறுத்தப்பட்டது இந்த சமுதாயத்தால். பணம் சம்பாதித்து, சுற்றுச்சுவர் எழுப்பபட்ட வீடுகளில், பக்கத்து வீட்டுக்காரனின் பெயர் தெரியாமல் வாழ்வதுதான் பிறவிப் பெரும்பயன் என நாளேடுகளும், தொலைக்காட்சிகளூம் மறைமுகமாகப் பரப்பிக்கொண்டிருப்பதை நாம் அறிந்தே இருக்கிறோம்.
ஆசிரியர் என்றால் ஒரு கண்டிப்பும், கொள்கைப் பற்றும், பாடப் புத்தகங்களுக்கு அப்பாற்பட்ட அறிவையும் தேக்கி வைத்திருந்த பெட்டகங்களாய் இருந்த காலம் மாறி, வெறும் பாடப் புத்தகங்களை நெட்டுருப் போட்டு , வகுப்பறையில் வந்து ஒப்பிக்கும் எந்திரங்களாய் மாறிப்போயினர் 80க்குப் பின். 90 விழுக்காட்டு ஆசிரியர்கள் வேறு தொழிலுக்கு வாய்பில்லாமல் ஆசிரியராகப் பொறுப்பெற்றனர். இவர்கள் அனைவரும் புதிய கருத்துக்களைக் கற்றுக் கொள்ளவுமில்லை, கற்றுத்தரவுமில்லை. தமிழ்,வரலாறு போன்ற ஒரு நல்ல சமூக உணர்வுள்ள குடிமகனை உருவாக்க உதவக்கூடிய அடிப்படைப் பாடங்கள் வெறும் தேர்வுகளின் நோக்கில் கற்பிக்கப்பட்டன. பாரதியையும், பாரதிதாசனையும், அம்பேத்கரையும்,பெரியாரையும் வெறும் பாடப்பகுதிகளாய்ப் படித்து, தேர்வு முடிந்ததும் மறந்து போவதும் வழக்கமாகிப் போனது. தமிழ் படிப்பதும் , தமிழ் வழியில் படிப்பதும் ஏளனமாய்ப் பார்க்கப் பட்டது.
இனி அரசியலுக்கு வருவோம். பெரியார், அண்ணா போன்ற பெருந்தலவர்கள் எவரும் 75க்குப் பின் இல்லாது போனதும், வெறும் முகப்புகழ்ச்சியிலே மூழ்கித் திளைத்த தலைவர்களே திரும்பத் திரும்ப தமிழ்நாட்டை ஆண்டு சீரழித்ததும் மக்களை அரசியலிலிருந்து விலகியோடச் செய்தன. எங்கு திரும்பினாலும் பொய்யர்களும், பதவிக்காக எந்தக் கீழ்த்தரமான செய்கைக்கும் தயாராய் இருந்த அரசியல்வாதிகளும், கொள்கையையும் கட்சியையும், அடிக்கடி மாற்றிக் கொள்ளும் வேடதாரிகளும் மலிந்து போயினர்.
அரசியல் நாகரிகம் இல்லாமல், அடித்து உதைத்துக் கொள்ளும் வீதிச் சண்டைக்காரர்களைப் பார்த்துப் பார்த்து வெறுத்து ஒதுங்கிப் போயினர் படித்த பண்பாளர்கள். எப்போது தேர்தல் நடந்தாலும் 50 விழுக்காடு மக்கள் வாக்களிப்பதில்லை. இது குடியாட்சி முறையில் மக்கள் அனுபவித்த ஏமாற்றங்களின் விளைவு.
ஒரு வேறுபாட்டை நாம் உணர வேண்டும். திராவிட இயக்கங்களில் 60களில் பங்கெடுத்தவர்கள் யாரும் அண்ணாவுக்காக மட்டும் கொடி பிடித்தவர்கள் அல்லர். அண்ணாவின்
கொள்கையையும் கருத்துக்களையும் ஆதரித்தவர்கள். தமிழ், தமிழ்ப் பண்பாடு காப்பாற்றப் படவேண்டும் என்ற நோக்கில் களம் இறங்கிய கடமை வீரர்கள். ஆனால் அண்ணாவுக்குப் பின் தனி மனிதர்கள் முன்னிறுத்தப் பட்டார்கள். கொள்கைகளும், உண்மையான தொண்டர்களின் உழைப்பும், புறந்தள்ளப்பட்டன.
இப்படியான ஒரு காலகட்டத்தில், மேய்ப்பர்கள் இல்லாத ஆட்டு மந்தைகளாய் தமிழ் மக்கள் மலிந்து போயினர். அவரவர், அவரவர் வாழ்க்கையைப் பணம் சம்பாதித்து வளப்படுத்திக் கொள்வதில் கவனம் செலுத்துகின்றனர். அரசியலோ, தமிழோ மக்களுக்குச் சுமையாய் உணரப்படுகின்றன. தமிழனாய் அறியப்படுவதில் தாழ்வுணர்ச்சி கொள்கின்றனர். தமிழில் தடையில்லாமல் ஒரு பக்கத்துக்கு தொடர்ச்சியாக சொந்தக் கருத்துகளை எழுதச் சொன்னால் 50 விழுக்காட்டு தமில் இளைஞர்கள் இன்றைக்குத் தோற்றுப் போவார்கள்.
பாடப் புத்தகங்களுக்கு அப்பால், இலக்கியம், அரசியல், மொழி வரலாறு குறித்து அக்கறைப் பட்ட ஆயிரத்தில் ஒரு இளைஞர்கள் இன்றும் ' பைத்தியக்காரர்கள் ' என முத்திரை குத்தப் படுகின்றனர்.
எந்த விதமான அநியாயம் நடந்தாலும் அதனால் மக்கள் யாரும் மனம் பதைப்பதில்லை. அது அவர்களுக்கு ஒரு தொடர்பில்லாத, எங்கோ வேறோர் கோளில் நடக்கும் ஒரு சின்ன நிகழவாகப் பார்க்கப் படுகிறது. விவசாயக் கல்லூரி மாணவிகள் எரிக்கப்படுவதை தொலைக்காட்சியில் காட்டும்போது , எதோ கிரிக்கெட் போட்டி பார்க்கும் ஆர்வத்தோடு நொறுக்குத்தீனியுடன் எந்தவிதச் சலனமும் இல்லாமல், செய்தி பார்த்த தமிழ்நாட்டு விலங்குகளை நான் கண்ணாறக் கண்டேன். இங்குமங்குமாய் ஓரிரு வாரங்களுக்கு பல மூலைகளில் இருந்து கண்டனங்கள் வந்தன. கொலைக்குக் காரணமானவர்களுக்கு அடுத்து வந்த இடைத்தேர்தலில் வாக்குகளுக்கு எந்தக் குறைச்சலுமில்லை.
நமது திரைப்படங்கள் போதிப்பதெல்லாம், எவனோ ஒரு தனி மனிதன் வந்து ஊரையும் நாட்டையும் காப்பாற்றுவான் என்ற காலத்திற்கொவ்வாத ஒரு கட்டுக்கதையை. யாராவது அநியாயத்தை எதிர்த்துப் போராடினால், மக்கள் அவனை ஆதரிக்காமல், வேடிக்கை பார்க்கிறார்கள். ஒருவேளை அவன் தப்பித் தவறி வென்றால், 'பரவாயில்லையே, பலே ஆளப்பா' என்றவாறு கலைந்து போகிறார்கள்.
தோற்று உதைபட்டால், 'நான் அப்பவே சொன்னேனப்பா, கேக்காமப் போய் உதை வாங்கிட்டு வர்றான்' என்று 'ச்சு'க் கொட்டி விமரிசித்துப் போகிறார்கள்.
சேர்ந்து போராடினால்தான் வெற்றி பெறமுடியும் என்ற அடிப்படை உணர்வற்ற இந்த மக்கள் கும்பலில் சத்தமில்லாமல் ஒரு கும்பல் தங்கள் பையை நிரப்பிக் கொண்டிருக்கிறது. படித்த ஒரு பெரிய கும்பல் பணம் தேடி வட இந்தியாவுக்கும், வெளி நாடுகளுக்கும் அலைந்து கொண்டிருக்கிறது. படிக்காத/ அரைகுறையாய் படித்த ஒரு பெரும் கும்பல் வெந்ததைத் தின்று விதியை நொந்து கொண்டிருக்கிறது.
நம்மைப் போன்ற சிறிய கும்பல் ஒன்று இடையில் இருந்து கொண்டு தள்ளவும் முடியாமல், மெள்ளவும் முடியாமல் புழுங்கிக் கொண்டிருக்கிறது.
'நதிக்கரையில் தொலைந்த மணல்' கவிதை நூலில் கவிஞர் சகாரா சொல்வது போல,

உறக்கம் பிடிக்காத நாட்கள்
வேட்டைக் குதறல்களின்
ரணமாற்றத் தவிக்கும்

உப்புப் போட்டுத் தின்ற சொரணை உசுப்ப
செவ்வரிக் கண்களில்
அறச் சீற்றம் கொப்பளிக்கும்

பார்க்குமிடமெல்லாம்
பழிகார முகநினைவில்
காறிக்காறி உமிழும்

பொசுபொசுவென்று
பற்றியெறியும் பெருஞ்சினம்
பொங்கிப் பொங்கி அடங்கும்

இடையிடையே
அலைக்கழியும் அந்தர வாழ்க்கை
அடுத்தவேளை பற்றி யோசிக்கும்.

இயலாமைகளை நிராசைகளை
இதயம்
எழுதி எழுதி அழிக்கும்

புழுங்கும் மனசு
எந்த மயிரையும் புடுங்க முடியாமல்
வெப்பப் பெருமூச்சு விடும்

கைவலிக்க முறுக்கிய மீசை
கண்ணெதிரே
காற்றுப் போன பலூனாய்த் தொங்கும்

நான்கைந்து முறை
தண்ணீர் குடித்து ஒன்றுக்கு விட
அந்த இரவும்
ஒரு வழியாய் உறங்கிப் போகும்.

எது எப்படி இருப்பினும் பிரிந்து கிடக்கும் ஒத்த கருத்துடைய படித்த
மக்களை /அறிஞர்களை/இலக்கியவாதிகளை ஒன்று சேர்க்க வேண்டியது படித்த இலக்கியத் தொடர்புள்ள நம்முடைய கடமை. ஒரு சமுதாய மாற்றத்துக்கு அடிகோல வேண்டிய கட்டாயம் நம் எழுத்துக்கிருக்கிறது.
'தன் குடும்பம், தன் வீடு, தன் வாழ்க்கை' என்ற குறுகிய வட்டத்திலிருந்து மக்களை வெளிக்கொணராதவரை எந்த சமுதாய மாற்றமும் சாத்தியம் என்று எனக்குத் தோன்றவில்லை.

அன்புடன்
கைகாட்டி.