திங்கள், செப்டம்பர் 25, 2006

மழை 4 துளி 9

தேவை ஒரு கருத்து(இயல்) மாற்றம் -திங்கள், ஏப்ரல் 05, 2004

அன்புடன் பயணம் புதிது இதழாசிரியர் அவர்களுக்கு,
நலம். நமக்குள் கடிதப் பரிமாற்றங்கள் நடந்து வருடங்களாகின்றன. திரு சகாரா எழுதி தங்களது முயற்சியில் வெளியான “ நதிக்கரையில் தொலைந்த மணல் ” கவிதைத் தொகுப்பு வெளியீட்டு விழாவில் (புலியூர், ஜூலை 2001) “இணையத்தில் தமிழ் இலக்கியம்” என்ற தலைப்பில் ஒரு உரையாடல் நடத்தும்படி நீங்கள் என்னைக் கேட்டுக்கொண்டீர்கள். உண்மையைச் சொல்லப் போனால் அந்த நேரத்தில் இணையத்தில் தமிழ் தொடர்பாய் நடந்து கொண்டிருந்த நிகழ்ச்சிகள் குறித்து எனக்கு இருந்த அறிவு மிகக்க் குறைவே. இருப்பினும் அந்த நிகழ்ச்சிக்காக நான் தயார் செய்யும் போதுதான் “இணையத்தில் தமிழ் இலக்கியம்” என்ற தலைப்பு எவ்வளவு பெரிய கடலுக்குள் என்னை நீந்த வைக்கக் கூடிய முயற்சி என்பது எனக்கே விளங்கியது. எனக்கிருந்த கால அவகாசக் குறைவால் என்னால் அதிகம் தயார் செய்ய இயலவில்லை. இருப்பினும் திருச்சி வானொலி நிலையத்தில் அதிகாரியாகப் பணியாற்றிக் கொண்டிருந்த திரு தட்சிணாமூர்த்தி அவர்களுடன் சேர்ந்து நான் கலந்து கொண்ட அந்த உரையாடல் நன்றாக இருந்ததாக நிறையப் பேர் பாராட்டினார்கள் .


uraiyaadal


ஆனாலும் எனக்கென்னவோ நான் நிறையச் செய்திகளை மக்களுக்குக் கொண்டு சேர்க்கவில்லை என்ற மனக்குறை இருந்து கொண்டே இருந்தது. நமது பயணம் புதிது இதழில் இந்த தலைப்பில் ஒரு தொடர் கட்டுரை எழுதலாம் என்று நான் ஆவல் கொண்டேன். இருப்பினும், அந்த நல்ல காரியம் நடை பெறாதபடிக்கு நிறைய தடங்கல்கள் ஏற்பட்டன. எழில் மாதவனின் திடீர் மரணம், திரு சகாரா அவர்களின் இடமாற்றம், எனது திருமணம் என்பது போல ஏகப்பட்ட மாறுதல்களில் இதழுக்கும் எனக்குமான இடைவெளி மிகவும் அதிகமாகி விட்டது. இவற்றிற்கு இடையில் தங்கள் கவிதைகள் சிலவற்றை நான் கணினியில் ஏற்றியது, தமிழ்நாடு முழுமைக்கும் ஆரம்பப்பள்ளிகளில் வாழ்க்கைக்கல்விப் பாடத்திட்டத்தைப் புகுத்துவதில் மும்முரமாகப் பணியாற்றிக் கொண்டிருந்த திரு மணமேடு குருநாதன் அவர்களின் கவிதைகள், உரை வீச்சுக்கள் முதலானவற்றை இணையத்தில் ஏற்றம் செய்ய விரும்பி திரு மாரியப்ப பிள்ளையின் உதவியுடன் நான் மேற்கொண்ட முயற்சி பலன் தராது போனது என்றவாறு பல நிகழ்வுகள் நடந்தேறின. இருப்பினும், தங்களது கவிதைகளை இணைய இதழ்களில், குழுமங்களில் வெளியிடுவதில் ஓரளவிற்கு நான் வெற்றி பெற்றேன். உங்களது கவிதைகள் ஓடையில் வெளிவந்தன. திரு சகாரா அவர்களின் கவிதைகள் Halwacity.com, வார்ப்பு, தினம் ஒரு கவிதை குழுமம் ஆகியவற்றில் வெளிவந்தன. இன்று நான் உட்கார்ந்து பின்னோக்கி சிந்திக்கும்போது நாம் கடந்து வந்த தூரங்கள்/பாதைகள் தாண்டி நாம் செல்ல வேண்டிய இலக்கு மிகவும் தூரமாகத் தெரிகிறது. இந்தத் தூரத்தை விரைவில் கடக்க வேண்டின் இதழியல் குறித்தான நம் கருத்துகளில் சில மாற்றங்கள் அவசியம் என்றே நினைக்கிறேன். பெரும்பாலும் பணக்காரர்களின் பொழுதுபோக்கு விளையாட்டுப் பொருளாக நமக்கு அறிமுகமான இணையம், தற்போது தனது எல்லைகளை விரித்துக் கொண்டே வந்து இன்று இலக்கியத்தை வெளியிடும்/படிக்கும் ஒரு ஊடகமாகவும் வளர்ந்திருக்கின்றது. எந்தக் கணினியிலும் தமிழைத் தெளிவாக தமிழ் வடிவங்களிலேயே காட்டும் யூனிகோட் என்ற எழுத்துவகைத் தொழில் நுட்பம் அறிமுகமான பின்னால் இது இன்னும் பல்கிப் பெருகிக் கொண்டு வருகின்றது. ஆங்கிலம் போலவே தமிழை நேரடியாகக் கணிணியில் உள்ளீடு செய்யும் கருவிகளை தமிழ் உணர்வுள்ள அறிவியலாளர்கள் / ஆர்வலர்கள் உருவாக்கி யார்வேண்டுமானலும் இலவசமாக பயன்படுத்திக்கொள்ள இணையத்தில் போட்டு வைத்திருக்கிறார்கள். இந்த அறிவியல் முன்னேற்றத்தின் காரணமாக தமிழில் யார் எழுதியதையும் யார் வேண்டுமானாலும் உலகத்தின் எந்த மூலையிலிருந்தும் எந்தத் தடங்கலுமில்லாமல் தமிழிலேயே படிக்கும் வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது. இவை ஒருபுறமிருக்க நல்ல சிற்றிதழ்கள் ஒரு குறிப்பிட்ட வாசகர் வட்டத்துக்கு அப்பால் பரவ இயலுவதில்லை. அப்படி ஒரு சிற்றிதழ் இருப்பதே படிக்கத் தயாராக இருக்கும் நிறைய வாசகர்களுக்குத் தெரியாமல் போய்விடுகிறது என்பதும் ஒரு கசப்பான உண்மை. இந்த ஒரு சூழலில் ஒரு சிற்றிதழில் வெளிவரும் நல்ல கருத்துக்கள் எல்லா மக்களையும் போய்ச் சேர வேண்டுமெனில் காகித இதழோடு இணையத்திலும் அதனை வெளிவரச் செய்வது ஒரு நல்ல முயற்சியாக எனக்குத் தோன்றுகிறது. இன்று உலகம் அறிவியலின் பலன்களைப் படிகளாய்ப் பயன்படுத்திக் கொண்டு உயரே சென்று கொண்டிருக்கிறது. இந்த நேரத்தில் காகித இதழ்களில் எழுதிக்கொண்டிருக்கும் சிற்றிதழ் எழுத்தாளர்களுக்கு இணையத்தில் எழுதப்பட்டுக் கொண்டிருக்கும் நல்ல படைப்புகள் போய்ச் சேர்வதற்கும் , சிற்றிதழ்களில் வெளியிடப்படும் நல்ல படைப்புகளை இணைய வாசகர்கள் படிக்கவும் ஏதேனும் ஒரு நல்ல வழி கண்டுபிடிக்க வேண்டும். இரண்டு வகையான ஊடகங்களுக்கும் இடையில் யாரேனும்/எதுவேனும் பாலமாக இருந்து கருத்துப் பரிமாறலுக்கு ஒரு வழி ஏற்படுத்த வேண்டும் என்று நான் நீண்ட நாட்களாக யோசித்துக் கொண்டிருக்கிறேன். எல்லோருக்கும் இணைய இதழ்களைப் படிக்கும் வாய்ப்பு அமைவது கடினமே. புலியூர் போன்ற நகரமாகி வரும் ஊர்களில் வேண்டுமானால் இது சாத்தியமாகலாம். இணையத்தில் எழுதிக் கொண்டிருப்பவர்கள் காகிதத்தில் வந்து கொண்டிருக்கும் சிற்றிதழ்களைப் படிக்கிறார்களா என்பது சந்தேகமே. நம் நாட்டு எல்லைகள் தாண்டி காகித இதழ்களை அஞ்சல் செய்வதும் பொருளாதார ரீதியில் சிற்றிதழ் ஆசிரியர்களுக்குச் சாத்தியமில்லை. (சொந்தப் பணத்தை முதலீடாக இட்டுத்தான் நிறைய சிற்றிதழ்கள் வெளி வருகின்றன என்ற உண்மை அனைவரும் அறிந்த ஒன்றே). எனவே இது குறித்து நான் வெகுநாட்களாக உங்களிடம் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்த சில கருத்துக்களை உங்களுக்கு இன்று கடிதமாய் எழுத நேர்ந்தது. எனக்குத் தெரிந்த வரை, புத்தகத்தை அச்சிடுமுன் கணினி வழியாகத் தட்டச்சு செய்துதான் அச்சிடுகிறோம். எனவே ஏற்கனவே கணினியில் உள்ளிடப்பட்ட படைப்புகளை இணையத்தில் உள்ளிடுவதில் அதிக சிரமம் இருக்கப் போவதில்லை. இருப்பினும் , அச்சிடுவதற்காக கணினிக்குள் உள்ளிடும்போது பயன்படுத்தப்படும் எழுத்துரு (Font) என்ன என்பது மிக முக்கியமாகிறது. ஏனெனில் இந்த எழுத்துருவில் உள்ளிடப்பட்ட படைப்புகளை யூனிகோட் எழூத்துக்கு மாற்ற முடியுமா என்ற சிக்கலுக்கு நாம் விடை கண்டு பிடித்தாக வேண்டும். Tscii/Tam/Tab எழுத்துருவாயின் யூனிகோடுக்கு மாற்றத் தேவையான கருவிகள் நமக்குக் கிடைத்துவிடும். இந்த சிக்கலுக்கு நாம் விடை கண்டுபிடிக்க வேண்டுமெனில், நீங்கள் அச்சிடும் அச்சகத்தாரிடம் அவர்கள் பயன்படுத்த வேண்டிய எழுத்துரு பற்றி முதலிலேயே நீங்கள் சொல்லி ஒரு முடிவுக்கு வரவேண்டியிருக்கும். ஒருவேளை எழுத்தின் வடிவ மாற்றம் தவிர்க்க முடியாதது எனில் அதனை ஏற்றுக்கொள்ள நாம் தயாராக இருக்க வேண்டும். இதற்குப்பிறகு, இணையத்தில் நிறைய நிறுவனங்கள் அளித்துவரும் இலவச இணைப்பக்கங்கள் /குழுக்கள் / வலைப்பூக்கள் வழியாக தேர்தெடுத்து சில கட்டுரைகளை தொடர்ச்சியாக வெளியிடலாம். (அனைத்தையும் வெளியிடுவதானாலும் சரியே. இருப்பினும் அப்போது நமக்கு இலவசமாக அளிக்கப்பட்ட குறைந்த இடத்தில் முழு இதழையும் வெளியிடுவதில் சிக்கல் ஏற்பட வாய்ப்பிருக்கிறது.) குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு, வாசகர்களின் எண்ணிக்கையைப் பொறுத்து /இதழின் வளர்ச்சியைப் பொறுத்து, நமக்கென்று ஒரு இணைய தளத்தையும் விலைக்கு வாங்கி சிற்றிதழைப் பேரிதழாக மாற்றலாம். எனவே காகிதத்தில் இருந்து கொண்டிருக்கும் நமக்கு , கணினிக்கு மாறுவது குறித்து ஒரு கருத்தியல் மாற்றம் வர வேண்டும். இணையத்தின் வழியாகக் கிடைக்ககூடிய வாசகர்களின் கருத்துக்களைக் கையாள அடிக்கடி இணையத்தைத் தொடர்புகொள்ள ஒரு கணினியும், இணைய இணைப்பும் , அதற்காகும் செலவைச் சரிகட்ட ஒரு நிரந்தர பண உதவியும் தேவைப்படும். எனவே இதை பற்றிய ஒரு மனம் திறந்த உரையாடல் நமக்கு அவசியமாகிறது. இப்போது, இதழ் வெளிவருவதில் இருக்கும் அனைத்து படிநிலைகளையும் பட்டியலிட்டோமானால் இது இன்னும் தெளிவாகும்
1. படைப்புகளை சேகரித்தல்
2. வெளியிடுவதற்கான படைப்புகளைத் தேர்ந்தெடுத்தல்
3. கணினியில் உள்ளிடுதல்
4. பிழைகள் திருத்துதல், சரி பார்த்தல்
5. அச்சிடுதல்
6. வாசகர்களுக்கு அனுப்புதல்

இந்த படிநிலைகளில் சில மாற்ற்ங்களைச் செய்தால்
1. படைப்புகளை சேகரித்தல்
2. வெளியிடுவதற்கான படைப்புகளைத் தேர்ந்தெடுத்தல்
3. தேர்தெடுத்த எழுத்துருவில் (font) கணினியில் உள்ளிடுதல்
4. பிழைகள் திருத்துதல், சரி பார்த்தல்
5. a. அச்சிடுதல் b. இணையத்தில் (தேர்ந்தெடுத்த சில படைப்புகளை) உள்ளிடுதல்
6. வாசகர்களுக்கு அனுப்புதல்
இதற்கப்பால் வாசகர்களின் கருத்துக்களை (feed back) கையாள்வதைப்பற்றி நாம் சிந்திக்க வேண்டியிருக்கிறது. இதற்கு எனக்குத் தெரிந் த வரையில் சில எளிய வழிமுறைகள் இருக்கின்றன.
1. இதழுக்கென ஒரு மின்னஞ்சல் முகவரியை வைத்துக்கொண்டு அதன் வழியாகக் கருத்துக்களைப் பெறுதல்
2. வாசகர்களிடமிருந்து கடிதங்கள் வழியாகக் கருத்துக்களைப் பெறுதல்
3. வாசகர்களிடமிருந்து நேரடியாக கருத்துக்களை இதழில் பெறுதல் (யாஹூ குழுமங்களில் இது எளிது. ஆனால் இலவச வலைப்பூ / வலைத்தளங்களில் இது சிறிது கடினம்.) நான் உங்களை அதிகம் குழப்பி விடவில்லை என்று நம்புகிறேன்!! இதனை எளிமையாக்க வேண்டுமெனில் நாம் ஒரு குழுவாகச் செயல்பட்டு நமக்குள் சில கடமைகளைப் பிரித்துக் கொள்ளலாம். இணையத்தில் வெளியிடும் பொறுப்பை நான் ஏற்றுக்கொள்ளத் தயாராக இருக்கிறேன். இதழை அச்சிட்டு முடித்தபிறகு , மின்வடிவிலிருக்கும் இதழை எனக்கு மின்னஞ்சல் அனுப்பினால், அதனை நான் இணையத்தில் வெளியிடத் தயாராயிருக்கிறேன். இதழின் படைப்புகள் மீதான எதிர்வினைகளை / படைப்புகளை அதே மின்னஞ்சலில் பெற்று, அதனை காகிதத்தில் print எடுத்துக் கொள்ளலாம். ஒரு சோதனை முயற்சியாக சென்ற பயணம் புதிது இதழிலிருந்து சில கட்டுரைகளை (நாங்களே ஏழெட்டு நாட்களாய் type செய்து) ஓடையில் வெளியிட்டோம். அவை நல்ல வரவேற்பை பெற்றன என்பது நமக்கு மிக்க ஊக்கத்தை அளிக்கிறது. இது நாம் சில மாற்றங்களுத் தயாராக வேண்டியதன் அவசியத்தையும் நமக்கு உணர்த்துகிறது. சென்றமுறை நாம் சந்தித்தபோது கிராமத்திலிருந்து வெளியேறி நகரமயமாதலுக்குள் உழன்று கொண்டிருக்கும் என்போன்றவர்களின் அனுபவங்களை எழுத வேண்டும் என்று நீங்கள் சொன்னதைப் பற்றியும் நான் யோசித்து வருகிறேன்.
நல்ல படைப்புகள் கவனம் பெற வேண்டும் என்பதில் உங்களோடு எனக்கும் உடன்பாடே. அதற்கு நமது புதிய வழிமுறை வாசலாயிருக்கும் --கைகாட்டி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக