கடிதம் - வே.பிச்சைமுத்து
அன்பு மகள் விடுதலைவேனிலுக்கு, அப்பா எழுதுவது.
ஒரு வீட்டிற்குள் இருந்துகொண்டே கடிதம் எழுதும் நிலைக்கு உள்ளாக்கிவிட்டாய். எட்டுவயதே ஆன உனக்கு இக்கடித உள்ளடக்கம் எட்டாது எனினும் எழுதவேண்டிய நிலையில் உள்ளேன். உனக்கு எப்போது புரிகிறதோ அப்போதும் இதுவே எனது விடை. தொடர்ந்து வாசி. 'எனக்கு ஆப்பி பர்த் டே எப்பப்பா?' 'எனக்கு ஆப்பி பர்த் டே எப்பப்பா?' என்ற உனது நச்சரிப்புத் தாங்க முடியாமலே இக்கடிதத்தை எழுதுகிறேன். தமிழ்வழிக்கல்வி தரும் பள்ளியில் சேர்த்தும் 'ஆப்பி பர்த் டே' ஆங்கிலம் உன்னை விட்டுவைக்கவில்லை. என் செய்வது? நீ பள்ளியில் கற்றுக் கொள்வதைவிட வெளியில் - வீதிகளில் - சாலைகளில் - வீட்டில் - தொலைக்காட்சியில் - திரைப்படங்களில் கற்றுக் கொள்வது ஏராளம்! அதன் வெளிப்பாடே 'ஆப்பி பர்த் டே'. ஆதிக்க ஆங்கில மொழிக்கலப்பு நம் அன்னைத் தமிழைக் கொல்லுகிறதென்ற கவலை ஒருபுறமெனினும், அதைவிட வேறொரு நெருடல் என்னை அதிகம் வாட்டுகிறது. பிறந்தநாள் கொண்டாடுவதில் உனக்குள்ள மிகை ஆர்வம் - உணர்வே எனக்குள்ள அந்த நெருடல். ஒன்றாம் வகுப்பு, இரண்டாம் வகுப்புகளில் நீ இவ்வாறு நச்சரிக்கும்போது, கொஞ்சம் இனிப்புகளை வாங்கித் தந்தேன். நீயும் உன் வகுப்புத் தோழர்களுக்கெல்லாம் கொடுத்து மகிழ்ந்தாய். இந்த ஆண்டும் வாங்கித் தருவேன். 50லிருந்து 100 ரூபாய்க்குள் வெற்றுச் செலவு என்றபோதும் , உனக்குச் சிலவற்றைத் தற்போதைக்குச் சொல்லிப் புரியவைக்க இயலாது என்பதால் இதை நான் அனுமதித்தேன். ஆனால், உனது இந்தப் பழக்கம் பெரியவளாகும்போதும் பெரிய கேக் வாங்கி வைத்து, அலங்காரம் செய்து, நண்பர்கள் சுற்றத்தாரை அழைத்து, 'ஆப்பி பர்த் டே' பாட்டுப் பாடி, ஒருத்தர் வாயில் ஒருத்தர் ஊட்டும் அளவிற்கு நீடிக்குமோ என்றுதான் அஞ்சுகிறேன். ஏன் எதற்கு இந்தப் பிறந்தநாள் விழாக் கொண்டாட்டம்? இந்த மண்ணில் பிறந்து விட்டதாலேயே ஆண்டுதோறும் அந்தநாளைக் கொண்டாடித்தான் ஆக வேண்டுமா? எப்படி உன் மனதில் இந்த எண்ணம் வந்தது? உனது பள்ளியில் யாராவது மிட்டாய் கொடுத்து தனது பிறந்த நாளை அறிமுகப்படுத்தியிருக்கலாம். அல்லது திரைப்படத்திலோ, தொலைக்காட்சித் தொடரிலோ இக்காட்சி கண்டு நீ மனதிற்குள் உள்வாங்கியிருக்கலாம். நிச்சயமாக நானோ உன் அம்மாவோ பிறந்தநாள் கொண்டாடுவது குறித்து உனக்கு உணர்வூட்டவில்லை. அதில் எங்களுக்கு அக்கறையும் இல்லை. எதிர்காலத் தேவைகள் குறித்து உன் பிறந்தநாளைக் குறித்து வைத்ததாலேயே உனக்கு அந்த நாளைச் சொல்ல வேண்டியிருக்கிறது. உனக்குத் தெரியுமா? இந்தியாவில் வசிக்கிற மக்களில் பலகோடிப் பேருக்கு தங்களது பிறந்த தேதியே தெரியாது. உண்மையான பிறந்த நாள் தெரியாது. அப்படியானால் பல்வேறு சான்றிதழ்களில் நான் குறித்திருக்கிற பிறந்த நாள்? அது தொடக்கப் பள்ளியில் என்னைச் சேர்க்கும்போது, தலைக்குமேல் வலது கையை வைத்து இடது காதைத் தொடச் சொல்லி, எட்டுவதை வைத்து பள்ளியில் சேர்க்க வசதியாக ஆசிரியர் குறித்துக் கொடுத்த சூன் மாதத்தில் ஒரு நாளே! (விசாரித்துப் பார்த்ததில் தமிழகத்தில் பல்லாயிரம் பேருக்கு அப்படித்தானாம்!) என் அப்பா எழுதி வைக்கவில்லையா? அல்லது எழுதி வைத்தது 77-ஆம் ஆண்டு வெள்ளத்தில் போய் விட்டதா? தெரியாது. பதினோராம் வகுப்பு (பழைய எஸ்.எஸ்.எல்.சி ) தேர்ச்சி பெறும் வரை பிறந்தநாள் ஒன்று இருப்பது குறித்த உணர்வுகூட எனக்கு - என்னைப் போன்ற பலருக்குக் கிடையாது. உன்னைச் சுற்றி என்ன சூழல் நிலவுகிறது தெரியுமா? இந்தியாவில் அன்றாடங் காய்ச்சிகள், விவசாயக் கூலிகள், உதிரித் தொழிலாளர்கள், குழந்தைத் தொழிலாளர்கள் உட்பட உடல் உழைப்பாளர்கள்... என 60% பேர் உள்ளனர். அதிலும் பெரும்பான்மையோர் வர்க்க - வருணப் படிநிலைக் கோபுரத்தின் அடியில் மிதிபடுகிற தலித் மக்களே! கல்லூரிக் காலங்களுக்குப் பிறகு சில ஆண்டுகள் கிராமங்களைப் படிக்கத் தொடங்கினேன். பிரம்மாவின் காலில் பிறந்த நான், உண்மையான 'மனிதர்களுக்குப்' பிறந்த (பெரியார் வாய்க்குச் சர்க்கரை!) மக்களோடு உண்டும் உறங்கியும் வழ்ந்தும் வந்தேன். பொருளியல் அடிப்படையில் என் தந்தையின் குடும்பத்திற்கும் அவர்கள் வாழ்நிலைக்கும் பெரிய வேறுபாடு இல்லை. ஆனால், சாதியக் கருத்தியல்தான் தலை(முறை)க்குத் தலை(முறை) பிறப்பெடுத்துக் கொண்டு வந்தது. தன்னளவில் என் தந்தை ஓரளவு சாதியத்தைத் தாண்டிய சிந்தனை உடையவராக இருந்தார். நான் அடுத்த அடி எ(கொ)டுத்து வைத்தேன். அதன் விளைவுதான் சூத்திரசாதி அப்பாவுக்கும், சேவைச் சாதி அம்மாவுக்கும் பிறந்த மனுஷியாக நீ! உன் காலத்தில் சாதியத்தை முற்றிலுமாக அழித்தொழிப்பதற்கான இயக்கங்களில் உன்னை முழுவதுமாய் இணைத்துக் கொள்வாய் என்று நம்புகிறேன். சரி, என் ஊர்சுற்றிப் புராணத்திற்கு வருவோம். சுக்காம்பட்டி, வெள்ளணம்பட்டி, அரியபித்தன்பட்டி, நாகம்பட்டி, கருக்காம்பட்டி, வே.புதுக்கோட்டை, பூதிப்புரம்... இப்படி வேடசந்தூரைச் சுற்றியுள்ள கிராமங்களில் மட்டுமல்ல, திண்டுக்கல் மாவட்டத்தின் பெரும்பான்மை கிராமங்களில் சுற்றியிருக்கிறேன். அவ்வப்போது - ஏன் சமீபத்தில்கூட தஞ்சை, கும்பகோணம், மயிலாடுதுறை, சீர்காழியைச் சுற்றியுள்ள கிராமங்களுக்குப் பயணம் செய்கிற வாய்ப்பும் பெற்றேன். இந்தியாவின் கிராமங்கள் ஒவ்வொன்றும் இரண்டிரண்டு கிராமங்களாக இருக்கின்றன என்று டாக்டர் அம்பேத்கர் சொன்னது இன்றும் தொடர்கிறது! இரண்டா(ந்தர)வது கிராமங்களில் வசிக்கும் மக்களை 'வருணிக்க' வார்த்தைகளே இல்லை. கவிழ்ந்த முகங்கள்! நிமிராத நெஞ்சுக்குழிகள்! இளமையிலேயே சுருங்கிய தோல்கள்! எண்ணெய் காணாத செம்பட்டை முடியுடன் பரட்டைத்தலை! வாழ்க்கையிழந்த ஏக்கப் பெருமூச்சு! வயசுக்கு மீறி உழைத்ததால் வளைந்த முதுகுகள், வீதிக்கு ஒரே அடிகுழாய் - நீர் குடிக்க! துவைக்க! 'ஆம்பிளக கண்படாம' அடி குழாய் அருகில் முள்வேலியில் சேலைமறைப்பில் பெண்களின் குளியல்! தாத்தா முதல் பேரன்வரை தங்க 'வசதியாக' ஒரே அறைகொண்ட வீ(கூ)டுகள்! மழையற்ற காலங்களில் குடிசைக்கு வெளியே அடுப்பு. அதில் இவர்கள் வயிறுபோலவே எரியும் நெருப்பு! பெரும்பாலும் இருண்ட குடிசைகள்! சிறுபான்மை மங்கலாய்க் கொஞ்சம் கோழி முட்டை மின்விளக்குகள்! இரண்டுக்கு ஒதுங்கவே இருட்டு எப்ப வரும் அல்லது வந்த இருட்டு சீக்கிரம் விடிந்து விடக் கூடாதே என்ற பரபரப்பு! சுடுகாட்டுக்குப் பாதை கேட்ட தகறாரில் அனாதையாய்க் கிடக்கும் பிணங்கள். இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம்.... உன்னைப்போல் குழந்தைகள் நிலை...? ஏதாவது பிரச்சாரத்திற்கு ஆட்டோ வில் ஒலிபெருக்கியைக் கட்டிக்கொண்டு அக்கிராமங்களுக்குள் நுழைந்தால் ஓடிவந்து சூழ்ந்துகொண்டு வேடிக்கை பார்க்கும் சிறுவர் சிறுமியர் கூட்டம்! உனக்கு இந்த எட்டு வயதில அல்ல - 4 வயதாகும்போதே உடையின்றி குளியலறையிலிருந்து வீட்டுக்குள் நுழைந்தவுடன் அவசர அவசரமாய்த் துண்டை எடுத்து இடுப்பில் சுற்றிக் கொள்வாய். அவ்வளவு மான உணர்ச்சி உனக்கு! மனித இனத்திற்கு இருக்க வேண்டிய நாகரிக உணர்ச்சி! ஆனால், அந்தச் சிறுவர் சிறுமியர் கூட்டத்திலோ மூன்றுமுதல் 12 வயதுவரையுள்ள குழந்தைகளில் முக்கால்வாசிப் பேருக்கு உடையில்லை - ஜட்டியில்லை - பாவாடையில்லை. சிலர் துணியென்றும், சட்டையென்றும் உடலில் ஏதோ சுற்றியிருக்கின்றனர். நீ வெட்கப்பட்டுச் சிரிக்கிற 'அழகி'ப் படத்தின் காட்சியாய் முக்கியமாக மூடவேண்டிய இடங்களில் எல்லாம் துணி கிழிந்து தொங்கும். ஆடையில்லாமல் திரிவதைவிட 'நாம் இப்படி இருக்கிறோம்' என்ற உணர்வே இல்லாமல் அவர்கள் இருப்பதே மிக வேதனை! 'இதுவே நம் இயல்பு' என்கிற அளவிற்கு அவர்கள் உணர்வு மரத்துப் போயிருக்கிறது. உன்னை அடித்து விரட்டினால்கூட வீதிப்பக்கம் ஆடையின்றி வரக்கூச்சப்படுவாய் - அழுது கொண்டு ஓடி மறைவாய்! ஆனால், யாரும் யாரையும் கேலி கிண்டல் செய்யாதபடிக்கு அந்தக் குழந்தைகள் இயல்பாய் வீதியில் கூடுகின்றன; சுற்றுகின்றன; விளையாடுகின்றன. அவர்களுக்கு மான உணர்ச்சி இல்லை என்பது பொருளல்ல. உண்மையில் எத்தனை வலியுறுத்தினாலும் கிடைக்காத - வாங்கித்தர இயலாத பெற்றோரின் சூழலில் - வாழ்க்கைப் பின்புலத்தில் உணர்வு மட்டத்தில் மட்டும் 'மான உணர்ச்சி'யைப் பாதுகாத்து வைக்க முடியுமா? எனவே, அவர்களுக்கு 'மான உணர்ச்சி' பற்றிய அளவுகோல் மாறுகிறது. அவர்களில் சிலர் பள்ளிக்கும் போகிறார்கள். பையில் புத்தகங்கள் இருக்குமா என்பது ஐயமே. ஆனால், மதிய உணவுக்கான தட்டு நிச்சயம் இருக்கும். ஒருநேர உணவாவது கிடைக்கிறதே என்ற எதிர்பார்ப்புத்தான்! போகிற போக்கைப் பார்த்தால் ஆட்சியாளர்கள் எப்போது அதற்கும் ஏதாவது காரணம் சொல்லி வேட்டு வைப்பார்களோ தெரியாது. அவர்களின் பொழுது போக்கு? அந்தக் கிராமத்தில் ஒருவர், இருவர் வீட்டில் இருக்கும் தொலைக்காட்சிப் பெட்டியைச் சுற்றி அனைவரும் நெருக்கியபடி, அல்லது பழுதடைந்த பஞ்சாயத்துத் தொலைக்காட்சிப் பெட்டிக்குமுன்! 'மோசமான நிகழ்ச்சிகளை - உணர்வு மழுங்கச் செய்யும் காட்சிகளைக் காணாமல் -மனதில் அழுக்குப்படாமல் அவர்கள் வாழ்வது நல்லதுதானே?' என்று சிலர் கருத்துரைக்கலாம். ஆனால் விசயம் அதுவல்ல. எந்தவொரு அறிவியல் கண்டுபிடிப்பின் பயன்பாடும் அனைத்து மக்களுக்கும் சென்று சேர வேண்டும் என்பதே சரியான ஜனநாயகத்தின் வெளிப்பாடாக இருக்க முடியும். பல குடிசைகளில் வானொலிக்கே வழியில்லை. இந்த இலட்சணத்தில்தான் நம்நாடு உனகிலேயே மிகப் பெரிய 'ஜனநாயக' நாடு என்ற பேரிரைச்சல்! அமெரிக்காவிற்கே தெரியாமல் அணுகுண்டு வெடிப்பு! எஸ்.எல்.வி ஏவுகணை 2,3,4.... என வானத்தில் பறக்கடிப்பு! கணினி உற்பத்தியில் முண்ணனி? மென்பொருள் தொழில் நுட்ப வல்லுநர்கள் ஏற்றுமதி! 'இந்தா ஆகப் போகிறது இந்தியா ஒரு வல்லரசாக!' என அளக்கிறார்கள் ஆள்வோர்களும் அரசியல்வாதிகளும்! இவை நிற்க. கொஞ்சம் நகரம் கலந்த கிராமம் புலியூரில் நம்மைச் சுற்றி அத்தகைய மக்கள் வாழவே செய்கிறார்கள். நம் வீதியிலும் பொருளியலில் நம்மிலும் அடுத்த நிலையில் - அதாவது 'ஹெச்' முத்திரை விளிம்பில் நாமும், 'ஹெச்' முத்திரைக்குக் கீழான நிலையில் பலரும் வசிக்கவே செய்கிறார்கள். அவர்களெல்லாம் கண்டு கொள்ளாத - உணர்வுப் பூர்வமாக யோசிக்காத - பிறந்த நாள் விழாவை நீ மட்டும் கொண்டாடினால் அவர்களின் குழந்தைகளுக்கு நீ ஒரு மோசமான முன்னுதாரணமல்லவா? அவர்களைவிட்டு நீ அந்நியப்படுவது சரிதானா? இது தேவைதானா? "அப்படியானால் அரசியல் தலைவர்களும் நடிகர்களும் நம்மைச் சுற்றியுள்ள பலரும் பிறந்த நாள் கொண்டாடுகிறார்களே, ஏன்?" என நீ கேட்பது எனக்குப் புரிகிறது. அந்தச் சாக்கில் கொஞ்சம் (கொஞ்சமாகவா?) வசூல் வேட்டையாகவும், மறந்துபோன மக்கள் மனதில் தங்களை மறுபதிவு செய்யவும், மக்களிடமிருந்து முன் உறிஞ்சிய - வசூலித்த பலகோடிகளில் சில இலட்சங்களை இறைத்து ஏழைகளுக்கு அன்னதானம் முதல் தாலிதானம் வரை வழங்கி கொடைவள்ளல் பட்டம் பெறவும் அரசியல்வாதிகளுக்கும் நடிகர்களுக்கும் பிறந்தநாள் விழா அவசியமாகிறது. சரியான ஜனநாயக இயக்கங்கள் மற்றும் இடதுசாரி இயக்கங்களின் தலைவர்கள் இம்மாதிரிப் பிறந்தநாள் 'பந்தா' பண்ணுவது கிடையாது. "ஒரே மாதிரியான - சலிப்பான வாழ்க்கைச் சுழற்சியில் இருந்து சற்றுமாறி உற்சாகமும் மகிழ்ச்சியும் பெற பல திருவிழாக்களைப் போல பிறந்தநாள் விழாவை நாம் ஏன் எடுத்துக் கொள்ளக் கூடாது? அன்றைக்குப் புதிதாய்ப் பிறந்தது போன்ற புத்துணர்ச்சியும் புது எழுச்சியும்பெற நம்மைப் போன்றவர்கள் பிறந்தநாள் கொண்டாடுவதில் என்ன தவறு?" என நீ கேட்கலாம். பொதுவாக திருவிழாக்கள் வழக்கமான நாட்களிலிருந்து ஒரு புத்துணர்ச்சியயும் மகிழ்ச்சியையும் கொடுப்பது உண்மைதான் எனினும் திருவிழாக்களின் பின்புலம் - திருவிழாவிற்கான காரணம் மிகக் கொடூரமானது! அந்தந்த மத அடையாளங்களை ஆழப்படுத்திக் கொள்ள (அக்கம் பக்கமாக மாற்று மதங்களின் மீது துவேசத்தை வளர்க்க ) மதரீதியான திருவிழாக்கள்! சாதிய இருத்தல்களை நிறுவனமயப்படுத்திக் கொள்ள ஊர்ச் சாமிகும்பிடுகள்! (பல நேரங்களில் சாதிய மோதல்களில் - குறிப்பாக ஆதிக்க சாதிகள் தலித்துகள் மீது மோதுவதாக அவை முடியும்) குலதெய்வச் சாமிகும்பிடுகளும் அங்காளி பங்காளிச் சண்டைகளில் முடியும்! சரி, சுதந்திர, குடியரசுதின விழா போன்ற தேசிய விழாக்கள்? அதுவும் மேல்மட்டத்தினரின் பிரச்சார மேடைகளாக - எதைப் போற்ற வேண்டும்? எப்படிக் கொண்டாட வேண்டும்? என்பது உட்பட பெரும்பான்மை மக்கள் மீது ஆளும் சிறுபான்மையின் கருத்துத் திணித்தலாக முடிகிறது. பொதுவாக 'விழாக்கள்' மனிதனுக்கு - அதுவும் சுரண்டலுக்கு உட்படுகிற ஏழை உழைக்கும் மக்களுக்கு அவசியமா? எனில் 'ஆம்' என்பேன். ஆனால், எம்மாதிரியான விழா? சாதிய ரீதியாகவும் - பொருளியல் ரீதியாகவும் ஒடுக்கப்படுகிற மக்களின் விடுதலைக்கான கருத்தரங்காக - பேரணியாக - மாநாடாக - பொதுக்கூட்டங்களாக கலைநிகழ்ச்சிகளாக - கலகங்களாக அது அமைதல் வேண்டும்! அதில் கலந்து கொண்டால் நமக்குப் புத்துணர்ச்சியும் புதுத்தெம்பும் கிடைப்பது உறுதி. பாரதிதாசன் கூறுவதுபோல 'அறிவை விரிவு செய்ய - அகண்டமாக்க - மானிடப் பரப்பைக் காண - மானிட சமுத்திரம் நானென்று கூவ' அம்மாதிரியான நிகழ்ச்சிகள் - திருவிழாக்கள் அவசியம். அவை மகிழ்ச்சிகரமானதாக இருக்கும் அதே வேளையில் அதிகாரத்தின் அடக்குமுறைக்கும் ஆளாக வேண்டிவரும். மேலும் அறிவுசார்ந்த - களப்பணி சார்ந்த பலரைக் காண்பதும், கருத்துப் பரிமாறுதலும், பகிர்ந்துண்ணுதலும் பசியும் பட்டினியும், நிகழ்ச்சி முடிந்து திரும்பும்போது பைசா இல்லாமல் ஒருவர் மற்றவர்க்காக சட்டைப் பையைத் தடவுதலும், உருட்டிப் புரட்டி காசு தேர்த்தி ஊர்வந்து சேர்தலும் நடக்கவே செய்யும். ஆம், 'புரட்சியே மக்களின் திருவிழா ' என்பார் மாவோ. அதற்கான முன்னோட்டங்கள் நிறைய நிகழும்போது எதிர்காலத்தில் நீ அதில் கலந்துகொள்ள வேண்டும் என்பதே என் ஆத்ம ஆசை. மக்களின் அடிமைத்தளைகளை ஏதோ ஒரு கோணத்தில் தகர்த்த - தகர்க்க முயன்ற தலைவர்களின் பிறந்த நாள் விழாக்களை நாம் வரவேற்கலாம். அது விழா என்ற அர்த்ததில் அல்ல. அவர்களின் தத்துவங்களை - பணிகளை மக்களுக்கு மீண்டும் எடுத்துச் செல்ல அது ஒரு கள நிகழ்வு என்ற அடிப்படையில்! இறுதியில் ஒன்றைக்கூறி முடிக்கிறேன். இந்தியாவில் பாட்டாளி மக்கள் விடுதலைபெற்ற மக்களாய்ப் பவனிவரவும், அவர்களின் பிற(ந்த நாளை)ப்பையே அர்த்தமுள்ளதாகவும் ஆக்க உன் உழைப்பு பயன்படுமேயானால், உன் பிறந்தநாளும் அர்த்தமுள்ளதாக உணரப்படும். அப்போது உன் பிறந்தநாள் உன்னால் மறக்கப்படலாம்; உன்னைச் சுற்றியிருப்போரால் நினைக்கப்படும். 'எல்லோரும் ஒருவருக்காக ஒருவர் எல்லோருக்காக' என்ற கார்ல் மார்க்சுக்குப் பிடித்த மேற்கோளையே உனக்கு நானும் வலியுறுத்துவேன். இன்றும் ... எதிர்காலத்திலும்....
அன்பு அப்பா வே.பிச்சைமுத்து ,
புலியூர் -12-12-2002
நன்றி: பயணம் புதிது (ஜனவரி-பிப்ரவரி-2004)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக