ஒரு கேள்வி -துடிமன்னன்
வலைப்பூ (valaippoo.blogspot.com) –ல் பழைய பக்கங்களைப் புரட்டிப் பார்க்கையில், எதேச்சையாகக் கண்ணில் பட்ட ஒரு விவாதம் பற்றிய என் கருத்துக்களை இங்கு பதிவு செய்யலாம் என்று நினைக்கிறேன். வலைப்பூவில் ஒவ்வொரு வாரமும் ஒருவர் சிறப்பாசிரியராகப் பொறுப்பேற்று தன் கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர். அப்படி நவம்பர் 23-29 ல் பொறுப்பேற்ற திரு நவன், Blog-களில் ஆசிரியர்களின் எழுத்து நடையை வைத்து அவர்கள் எந்த ஊர் என்று கண்டு பிடிக்குமாறு விளையாட்டாகக் கேட்க, அதற்கு வந்த பின்னூட்டங்களில் ஆரம்பித்தது ஒரு புதிய விவாதம் !! இலங்கைத் தமிழ் புரியவில்லையென்று ஆரம்பித்த இந்த விவாதம் பின்பு சூடு பிடித்து பின்பு tamil-discussion யாஹூ குழுமத்திலும் இந்த விவாதம் தொடர்ந்தது. இதைப் படிக்க சுட்டி: valaippoo இந்த சுட்டியில் Wednesday, November 26, 2003 லிருந்து படிக்க ஆரம்பிக்கவும். இதன் மிச்ச விவாதம் இங்கு நடக்கிறது tamil_discussion என்னுடைய கருத்து நேரடியாக இந்த விவாதக் கருத்துகளின் எதிர்வினையாக இல்லாதிருப்பினும் இந்த விவாதத்திற்கு ஓரளவிற்குத் தொடர்புடைய கேள்வி எனக்குள் எழுந்ததால் இங்கு அதைப் பற்றி எழுதுகிறேன். நான் இங்கு எழுப்பும் கேள்வியை யாரும் ஏற்கனவே எழுப்பியிருக்கிறார்களா என்று தெரியவில்லை. நான் பத்தாம் வகுப்பு வரை வரலாற்றை ஒரு பாடமாகப் படித்திருக்கிறேன். (State Board of Tamil Nadu-1982-1992) ஆனால் இலங்கையில் வாழும் தமிழர்கள் பற்றி ( குறைந்த பட்சம், இலங்கையில் தமிழர்கள் இருக்கிறார்கள் என்ற வரிகளையாவது) நான் வரலாற்றுப் புத்தகங்களில் படித்ததாகவோ, இல்லை எனது ஆசிரியர்கள் சொன்னதாகவோ நினைவு இல்லை. மூவேந்தர்கள் காலத் தமிழக வரலாற்றைப் பற்றிய பாடப் பகுதிகளில் தமிழக மன்னர்கள் இலங்கை மீது படை எடுத்தார்கள்/ வென்றார்கள் என்று மட்டுமே பாடப் புத்தகத்தில் பார்த்ததாக நினைவு. இந்திய அமைதிப்படை இலங்கை சென்றபோது தினமணியில் வந்த செய்திகளை வைத்துத்தான் இலங்கையில் தமிழர்கள் வாழ்கின்றார்கள் என்பதையும், அவர்கள் சிங்கள இன மேலாதிக்கத்தை எதிர்த்துப் போராடி வருகிறார்கள் என்பதையும் நான் அறிந்து கொண்டேன். பாடப்புத்தகத்தை மட்டுமே படிக்கும் பழக்கமுடைய 90% மாணவர்களுக்கு இலங்கை(த் தமிழர்களை)யைப் பற்றி அதிகம் தெரிந்திருக்க வாய்ப்பில்லை என்றே எனக்குத் தோன்றுகிறது. (இப்போது கிராமங்கள் வரைக்கும் தொலைக்காட்சி பரவிய பின்பு ஓரளவிற்கு மாறுதல் ஏற்பட்டிருக்கக் கூடும்) என்னுடைய கேள்வி எல்லாம் தமிழ்நாட்டின் பாட நூல்களில் ஏன் இலங்கைத் தமிழர்களைப் பற்றி எழுதப்படவில்லை என்பதே. இலங்கை எழுத்தும் தமிழ்ப் பாட நூல்களில் இடம் பெறவில்லை என்பதும் கருத்தில் கொள்ளத் தக்கது. இப்போது ஏதேனும் பாடநூல்களில் மாற்றியிருக்கிறார்களா என்று தெரியவில்லை. (ஆனால் பிரிட்டனிடமிருந்து விடுதலை பெற அமெரிக்கா நடத்திய போராட்டங்களைப் பற்றியெல்லாம் தமிழ் நாட்டுப் பள்ளிகளின் வரலாற்றுப் பாடப் புத்தகங்களில் காணக் கிடைக்கிறது. ) இந்த மாதிரி தமிழகத்து பள்ளிப் பாடப் புத்தகங்களில் இலங்கைத் தமிழர்களின் இருப்பினைப் பற்றி (existence of Sri Lankan Tamils) இருட்டடிப்பு ஏன் என்று யாருக்கேனும் தெரிந்தால் எனக்குத் தெரிவிக்கவும். அந்த மாதிரி இருட்டடிப்பு இல்லை, எனக்குத்தான் பார்வைக் கோளாறு என்று யாரேனும் நிறுவினால் நான் இன்னும் மகிழ்ச்சி அடைவேன் --துடிமன்னன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக